Published:Updated:

`சார், கேபிளைத் தொட்டுப்பாருங்க, கரன்ட் வருதா?' - நாடகமாடிய இன்ஜினீயரைக் காட்டிக்கொடுத்த சிசிடிவி

சென்னை முகலிவாக்கத்தில் பள்ளி மாணவன் தீனா, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் மாநகராட்சி இன்ஜினீயர் ஒருவர், அலட்சியமாகப் பதிலளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாணவன் தீனா வரும் சிசிடிவி காட்சி
மாணவன் தீனா வரும் சிசிடிவி காட்சி

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் செந்தில். ஷேர் ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி வனிதா. இவர்களுக்கு தீனா என்கிற திவா (14), கௌதம் (10) என இரண்டு மகன்கள். எம்.ஜி.ஆர் நகரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி தீனா, 9-ம் வகுப்பு படித்துவந்தார். விடுமுறை நாள்களில் சுபஸ்ரீ நகருக்கு வந்து நண்பர்களுடன் விளையாடுவார். கடந்த 15-ம் தேதி இரவு 9.40 மணியளவில் தீனா முகலிவாக்கம் தனம் நகர் அருகே பைக்கைத் தள்ளிக்கொண்டுச் சென்றார். அவருடன் தீனாவின் நண்பரான வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவரும் சென்றார். இருவரும் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீனா, தூக்கி வீசப்பட்டார். அதைப்பார்த்த அவரின் நண்பர் அதிர்ச்சியடைந்தார். மயங்கிய நிலையில் தீனா, சாலையில் கிடந்தார். அவரின் உடலில் எந்த அசைவும் இல்லை.

மாணவன் தீனா
மாணவன் தீனா

அதைப் பார்த்த தீனாவின் நண்பர், சத்தம் போட்டுகூட யாரையும் அழைக்க முடியாமல் தவித்தார். தீனாவைக் காப்பாற்ற வேண்டும் எனக் கருதிய அந்த நண்பர், தன்னுடைய வீட்டுக்கே ஓடிச் சென்று தகவலைத் தெரிவித்தார். அதன்பிறகுதான் அனைவருக்கும் தகவல் தெரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் தீனாவின் பெற்றோர், மயங்கிய நிலையில் கிடந்த தீனாவை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்.

` தீனா எப்படி இறந்தார்?' என்று அவரின் நண்பருக்குத் தெரியவில்லை. இதனால் தீனா இறந்த இடத்துக்கு வந்த அப்பகுதி மக்கள், அவரின் நண்பரிடம் சைகை மூலம் விவரம் கேட்டனர். அப்போது அவர், இந்த இடத்தில் வரும்போதுதான் தீனா, தூக்கி வீசப்பட்டார் என்று கூறினார். அந்த இடத்தை ஆய்வு செய்தபோது மின்சார கேபிள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கேபிளில் மின்சாரம் இருந்தது. இதனால் சுதாரித்த அந்தப்பகுதி மக்கள், மின்சார வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனர். மின்சார வாரிய அதிகாரிகள், `எங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீனாவின் சடலத்தை ஒன்றரை கி.மீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு முகலிவாக்கம் மெயின் ரோட்டுக்கு வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 மாணவன் தீனாவின் சிசிடிவி காட்சி
மாணவன் தீனாவின் சிசிடிவி காட்சி

இதையடுத்து மாங்காடு போலீஸார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகே சாலை மறியல் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது தீனாவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த சம்பவத்துக்கு அதிகாரிகள் யாரும் பொறுப்பேற்கவில்லை. மின்வாரிய அதிகாரிகளோ, `எங்களுக்கும் அந்த கேபிளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என்று தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், ` ஒரு மாதத்துக்கு முன், மெட்ரோ வாட்டர் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதனால்தான் கேபிள் வெளியில் தெரிந்தது' எனக் குற்றம் சுமத்தினர். இதற்குப் பதில் அளித்த மெட்ரோ வாரிய அதிகாரிகளும், `நாங்கள் பள்ளம் தோண்டிவிட்டு மூடிவிட்டோம்' என்றனர். இதனால் தீனாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு என சுமார் 2 மணி நேரம் விவாதம் நடந்தது.

தீனாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீஸார், `இது இயற்கையான மரணம்' என்று கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக் கழித்தனர். இந்தத் தகவல் தெரிந்ததும் மத்திய அரசு வழக்கறிஞரும் பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி செயலாளருமான எம்.அருள், சம்பவ இடத்துக்கு வந்தார்.

arul
arul

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய அருள்``தீனாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினால் எங்கள் மீது வழக்குபதிவு செய்வதாக போலீஸார் மிரட்டினர். வழக்கை சட்டப்படி எதிர்கொள்கிறோம் என நான் பதிலளித்தேன். மின்சாரம் பாய்ந்து தீனா இறக்கவில்லை என்றே அரசு அதிகாரிகளும் போலீஸாரும் வாக்குவாதம் செய்தனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அவர்களிடம் காண்பித்தேன். சிசிடிவி காட்சியில் தீனாவின் நண்பர், உதவிக்காக ஒரு ஆட்டோவை வழிமறிக்கிறார். ஆனால், என்ன விவரம் என்று தீனாவின் நண்பரால் சொல்ல முடியாததால் அந்த ஆட்டோ நிற்காமல் அங்கிருந்து செல்கிறது. சிசிடிவியைப் பார்த்தபிறகுதான் மின்சாரம் பாய்ந்து தீனா இறந்ததைப் போலீஸாரும் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.

கடந்த ஓராண்டுக்குமுன் அங்கு கழிவுநீர் மற்றும் மழைநீர் சேகரிப்பு கால்வாய் பணி நடந்துள்ளது. இதற்காக, தெருவிளக்கு மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அப்போது தெருவிளக்குக்கு மின்இணைப்பு கொடுக்க தரைவழியாக மின்கேபிள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒரு கேபிளின் மின்இணைப்பை ஊழியர்கள் துண்டிக்காமல் விட்டுவிட்டனர். சமீபத்தில் அந்த இடத்தில் பள்ளம் தோண்டியதால் கேபிள் வெளியில் தெரிந்துள்ளது. அந்தக் கேபிளை தீனா மிதித்ததும் மின்சாரம் பாய்ந்துவிட்டது.

இந்தத் தகவலை மாநகராட்சியின் தெருவிளக்கு மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியதும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் கேபிளின் மின் இணைப்பை நள்ளிரவில் துண்டித்துள்ளனர். `அந்தக் கேபிளில் மின்சாரம் வரவில்லை' என்று என்னிடம் கூறிய சம்பந்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவர், `சார்... கேபிளைத் தொட்டுப்பாருங்க, கரன்ட் வருதா' என்று கேட்டார். நானும் அந்தக் கேபிளைத் தொட்டுப்பார்த்தபோது மின்சாரம் இல்லை. இதனால் சந்தேகமடைந்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தேன். இந்த சம்பவத்துக்குப் பிறகு மாநகராட்சி மின்வாரிய அதிகாரிகள் மின்இணைப்பை துண்டிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் பொதுமக்களோடு சேர்ந்து வலியுறுத்தினேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆலந்தூர் 12 வது மண்டல மின்வாரிய உதவி இன்ஜினீயர் செந்தில், உதவி செயற்பொறியாளர் பாலு ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு தீனாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது" என்றார் வேதனையுடன்.

fir
fir

மாநகராட்சியின் மின்வாரிய பொறியாளரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``சம்பவம் நடந்த இடத்தில் மழைநீர் சேகரிப்புக் கால்வாய் பணிகள் நடப்பதால் தெருவிளக்குகூட அங்கு எரியவில்லை. அப்படியிருக்கும்போது மாநகராட்சியின் மின்வாரிய கேபிளிலிருந்து மின்சாரம் தாக்கியது எப்படி என்று தெரியவில்லை" என்றார். அவரிடம், `மாநகராட்சியின் மின்வாரிய இன்ஜினீயர்கள் பாலு, செந்தில் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதே?' என்று கேட்டதற்கு, ``அது ஏன் என்றும் தெரியவில்லை" என்றார்.