Published:Updated:

சென்னை: `கைவிட்ட 3 மகன்கள்; ஒரு வேளை சாப்பாடுகூட கிடைக்கல' - தற்கொலை செய்த முதிய தம்பதி

தற்கொலை 
 செய்த குணசேகர், செல்வி
தற்கொலை செய்த குணசேகர், செல்வி

கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்த வயதான தம்பதியினர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் மன வேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

சென்னை பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் குடியிருந்தவர் குணசேகரன் (65). இவரின் மனைவி செல்வி (63). இந்தத் தம்பதியினருக்கு 3 மகன்கள். தச்சுவேலை பார்த்து வந்த குணசேகரனுக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லை. அதனால் வாட்ச்மேன் வேலைக்குச் சென்று வந்தார். இவர்களின் மகன்களுக்கு திருமணமானதும் அவர்கள் தங்கள் மனைவிகளுடன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதனால் அவர் மட்டும் பெற்றோருடன் வசித்தார்.

சடலமாக குணசேகர், செல்வி
சடலமாக குணசேகர், செல்வி

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஸ்ரீதர், வேலைக்கு சரிவர செல்லாமல் ஊதாரித்தனமாக ஊரைச் சுற்றி வந்தார். அதனால் மது குடிக்க பணம் கேட்டு வயதான அப்பா, அம்மாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்தச் சமயத்தில் குணசேகரன் பார்த்து வந்த வாட்ச்மேன் வேலையும் பறிபோனது. அதனால் குணசேகரனும் செல்வியும் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல் தவித்தனர்.

மகன்களிடம் தங்களின் நிலைமையைக் கூறியும் யாரும் உதவ முன்வரவில்லை. அதனால், பசி பட்டினியால் சிரமப்பட்ட கணவனும் மனைவியும் மனவேதனையடைந்தனர். மூன்று மகன்கள் பெற்றும் கடைசி காலத்தில் தங்களுக்கு ஒருவேளை சாப்பாடு போடகூட யாருமில்லையே என இருவரும் விரக்தியடைந்தனர். இதையடுத்து இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

தற்கொலை கடிதம்
தற்கொலை கடிதம்

பின்னர் இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலேயே துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் எழுதிய கடிதத்தில், ``எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களை அநாதை என்று எண்ணி நீங்கள் அடக்கம் செய்ய வேண்டும். மாண்புமிகு காவல்துறை என்று எழுதப்பட்டுள்ளது.

இன்று நீண்ட நேரமாகியும் குணசேகரனின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டிப்பார்த்தனர். பின்னர் செம்பியம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் குணசேகரன், செல்வி ஆகியோர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து போலீஸார், இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குணசேகரனின் மகன்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். குணசேகரன், செல்வி தம்பதியினர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுபடி அவர்களின் கடைசி ஆசையை செய்ய உதவிக் கமிஷனர் சுரேந்தர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

மாலை அணிவிக்கும் போலீஸார்
மாலை அணிவிக்கும் போலீஸார்
சென்னை: `உயிரிழந்த காதல் மனைவியின் முகத்தை பார்க்க விடல!' - மனமுடைந்த கணவரும் தற்கொலை

அப்போது குணசேகரின் மகன்கள், அப்பா, அம்மாவுக்குரிய மரியாதையைச் செய்ய எங்களுக்கு அனுமதியளியுங்கள் என்று கேட்டனர். உடனே குணசேகர், செல்வியின் சடலங்களுக்கு போலீஸார் மாலை அணிவித்துவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு குணசேகரின் மகன்கள், உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்தனர்.

இந்தச் சம்பவம் பெரம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு