Published:Updated:

`அம்மாவைக் கவனிக்க ஆளில்லை!' - அண்ணாநகரில் விபரீத முடிவெடுத்த அமெரிக்க இன்ஜினீயர்

சென்னை அண்ணாநகர் மேற்குப் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அம்மா, தினமும் அனுபவிக்கும் வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்ஜினீயர் மகன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

edward
edward

சென்னை அண்ணா நகர் மேற்கு, 20-வது தெருவைச் சேர்ந்தவர் ஆர்.எஸ்.ராய் (71). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி கோகிலா ராய் (70). இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களின் மகன் எட்வர்ட் பிரதீப் குமார் (49). இன்ஜினீயரான இவர், அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். அமெரிக்காவிலேயே திருமணம் செய்து குடியுரிமையைப் பெற்று வாழ்ந்துவந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

apartment
apartment

சென்னையில் உள்ள வீட்டில் ஆர்.எஸ்.ராய், கோகிலா ராய் ஆகியோர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோகிலா ராய்க்குத் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது கோகிலா ராய்க்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் கோகிலா ராய் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தத் தகவல் அமெரிக்காவில் உள்ள எட்வர்ட் பிரதீப் குமாருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரும் சோகமடைந்தார். கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை என்ற நிலையில் அம்மாவுக்குப் புற்றுநோய் என்றதும் எட்வர்ட், மனம் உடைந்து போனார். உடனடியாக குடும்பத்தோடு சென்னை வந்தார் எட்வர்ட். அம்மாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு டாக்டர்களிடம் எவ்வளவு ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. அம்மாவைக் காப்பாற்றுங்கள் என்று எட்வர்ட் கூறினார். அதற்கு டாக்டர்கள், `உங்கள் அம்மாவை இனிமேல் எங்களால் காப்பாற்ற முடியாது. புற்றுநோயின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. அவர் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்' என்று கூறியுள்ளனர். அதைக்கேட்டு எட்வர்ட் மனமுடைந்து போய்விட்டார்.

edward
edward

இதையடுத்து விடுமுறை முடிந்ததால் குடும்பத்தோடு எட்வர்ட் அமெரிக்காவுக்குச் சென்றார். ஆனால், அவரால் அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதனால் மீண்டும் சில மாதங்களுக்கு முன் சென்னை வந்தார். சென்னையில் தங்கியிருந்து அம்மாவை நன்றாகக் கவனித்துவந்தார். கோகிலா ராய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையின்போது வலி காரணமாகச் சத்தம் போடுவதைக் கேட்க முடியாமல் எட்வர்ட் வேதனையடைந்துள்ளார். அதுகுறித்து அடிக்கடி வீட்டில் புலம்பிக் கொண்டிருந்துள்ளார் எட்வர்ட்.

கடந்த 2 மாதங்களுக்கு மேல் எட்வர்ட் சென்னையிலிருந்து அம்மாவைக் கவனித்துவந்துள்ளார். சில தினங்களுக்கு முன் ஆர்.எஸ்.ராய், மகனிடம் நீ அமெரிக்கா செல், நான் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். அதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் செல்கிறேன் என்று எட்வர்ட் கூறியுள்ளார்.

இந்தநிலையில் எட்வர்ட் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியில் அங்குள்ளவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது தீ எரிந்த நிலையில் ஒரு உடலைப் பார்த்தவர்கள், அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், தீப்பிடித்த சடலம் முழுவதும் எரிந்துவிட்டது. இதையடுத்து திருமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில் தீக்குளித்து தற்கொலை செய்தது எட்வர்ட் என்று தெரியவந்தது. மேலும் அவரின் சடலம் கிடந்த இடத்தின் அருகில் மண்ணெண்ணெய் கேனும், லைட்டரும் கிடந்துள்ளது. அதையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

edward
edward

எட்வர்ட் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அம்மாவின் மீதுள்ள பாசமே காரணம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த ஜூலை மாதம் எட்வர்ட் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார். சென்னையிலேயே தங்கியிருந்து அம்மாவைக் கவனிக்க அவர் முடிவு செய்துள்ளார். அதனால் அவரின் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் புற்றுநோயால் வேதனைப்படும் அம்மா, இன்னொரு பக்கம் அமெரிக்காவில் குடும்பம் என இருதலைக் கொள்ளி எறும்பாக எட்வர்ட் தவித்துவந்துள்ளார். அதனால்தான் மாடியில் தீக்குளித்து அவர் தற்கொலை செய்துள்ளார்'' என்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எட்வர்ட்டின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எட்வர்ட்டின் சடலத்தைப் பார்த்த அவரின் அம்மா, அப்பா மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தனர்.

புற்றுநோயால் அம்மா அனுபவித்த வேதனையைத் தாங்க முடியாமல் இன்ஜினீயர் மகன் தற்கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.