Published:Updated:

`10 நிமிடத்தில் மீட்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை!' -பெற்றோரை நெகிழவைத்த சென்னை தீயணைப்பு வீரர்கள்

பூட்டிய அறைக்குள் குழந்தை
பூட்டிய அறைக்குள் குழந்தை

சென்னையில் அறைக்குள் சென்ற ஒன்றரை வயது குழந்தை திடீரென கதவை லாக் செய்துகொண்டான். பூட்டிய அறைக்குள் இருந்து ஒன்றரை மணி நேரத்துக்குப்பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டான்.

சென்னை பூந்தமல்லி ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவருடைய ஒன்றரை வயதுக் குழந்தை கெவின். வழக்கம்போல ஜேசுராஜ், அலுவலகத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் துருதுருவென இருக்கும் கெவின், ஸ்டோர் ரூமூக்குச் சென்றான். கணவரை வேலைக்கு அனுப்பும் பிஸியில் ஜேசுராஜின் மனைவி இருந்தார்.

கதவின் பூட்டை உடைக்கும் வீரர்கள்
கதவின் பூட்டை உடைக்கும் வீரர்கள்
போக்குவரத்து நெரிசலிலும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வீட்டுக்கு வந்தனர். என் மகனைப் பத்திரமாக மீட்டனர். அந்த டீமுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
ஜேசுராஜ்

இந்தச் சமயத்தில், அறைக்குள் சென்ற கெவின், கதவை லாக் செய்தான். அதை யாரும் கவனிக்கவில்லை. உடனே கெவின், கதவைத் திறக்க முயன்றான். ஆனால் கதவு திறக்கவில்லை. அறைக்குள் சிக்கிக்கொண்ட கெவின், மழலை மொழியில் மம்மி.... மம்மி என அழத் தொடங்கினான். அறைக்குள் இருந்து கெவினின் சத்தம் வருவதைக் கவனித்த ஜேசுராஜ் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கதவை வெளியிலிருந்து திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவைத் திறக்க முடியவில்லை.

இதையடுத்து அறைக்குள் இருந்து கெவின், தொடர்ச்சியாக அழத் தொடங்கினான். வெளியிலிருந்தபடி கெவினிடம் ஜேசுராஜிம் அவரின் மனைவியும் பேசினர். தனியாக அறைக்குள் சிக்கிக் கொண்ட கெவின், கதவைத் தட்டும் சத்தம் அழுகைக் குரலோடு கேட்டது. ஜேசுராஜிம் முடிந்தளவுக்கு கதவின் பூட்டைத் திறக்க முயற்சி செய்தார். ஆனால் ஒரு மணி நேரமாகியும் முடியவில்லை. இதனால் ஜேசுராஜ், தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.

`கழிவுநீர்த் தொட்டியை சூழ்ந்த விஷ வாயு!'- தொழிலாளியைக் காப்பாற்ற இறுதிவரை போராடிய தீயணைப்பு வீரர்
திறக்கப்பட்ட அறை
திறக்கப்பட்ட அறை

உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் கல்யாணராமன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். தீயணைப்பு வீரர்கள் கொண்டு சென்ற ஹைட்ராலிக் லாக் ஓப்பன் மூலம் கதவின் பூட்டை 10 நிமிடத்தில் உடைத்தனர். கதவு, கொஞ்சம் கொஞ்சமாக திறந்ததும் உள்ளே இருந்த கெவின், தன்னுடைய பிஞ்சு விரல்களை இடைவெளியில் வைத்தான். அதனால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் மீட்டனர். கதவு திறந்ததும் அறைக்குள் இருந்து வெளியில் வந்த கெவினை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டார் ஜேசுராஜின் மனைவி. பின்னர் கெவின், இயல்பு நிலைமைக்குத் திரும்பினான். குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு ஜேசுராஜின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க நன்றி கூறினர்.

லாக்கை உடைக்கும் வீரர்கள்
லாக்கை உடைக்கும் வீரர்கள்

இதுகுறித்து ஜேசுராஜ், தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபுவுக்கும் தீயணைப்பு வீரர் இளங்கோவனுக்கும் தீயணைப்புத் துறை வீரரின் சேவையைப் பாராட்டி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில் `பூந்தமல்லி தீயணைப்பு அலுவலர் இளங்கோவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு என் குழந்தையைப் பத்திரமாக மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்று காலை 10.20 மணியளவில் என்னுடைய மகன் கெவின் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான்.

அவனால் கதவைத் திறக்க முடியாததால் அழுதுகொண்டே இருந்தான். தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு (101) தகவல் தெரிவித்ததும் அவர்கள் என்னிடம் விவரம் கேட்டனர். போக்குவரத்து நெரிசலிலும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வீட்டுக்கு வந்தனர். என் மகனைப் பத்திரமாக மீட்டனர். அந்த டீமுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜேசுராஜிடம் பேசினோம். ``என்னுடைய வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் உள்ளது. கெவின் அறைக்குள் சென்று கதவைப் பூட்டியதும் வேறு வழியில் அவனை மீட்க வழி தெரியவில்லை.

ஜேசுராஜ் எழுதிய கடிதம்
ஜேசுராஜ் எழுதிய கடிதம்

2-வது மாடி என்பதால் ஜன்னல் வழியாகவும் அந்த அறைக்குச் செல்ல முடியவில்லை. உடனடியாகத்தான் தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவித்தோம். ஒன்றரை மணி நேரமாக அறைக்குள் சிக்கிக்கொண்ட கெவினை தீயணைப்பு வீரர்கள் 10 நிமிடத்துக்குள் மீட்டு எங்களிடம் ஒப்படைத்துவிட்டனர். அதனால்தான் தீயணைப்புத் துறை இயக்குநருக்கு நன்றி தெரிவித்தேன்" என்றார்.

இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்தில் உள்ளவர்கள் கூறுகையில், ``தகவல்கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்றோம். நாங்கள் செல்வதற்கு முன், குழந்தையின் தந்தையிடம் சில அறிவுரைகளைக் கூறினோம். பூட்டிய அறைக்குள் சிக்கிக்கொண்ட குழந்தை பயப்படாமல் இருக்க பேசிக்கொண்டே இருங்கள் நாங்கள் வந்துவிடுகிறோம் என்று கூறினோம். அதன்படி குழந்தையின் பெற்றோரும் செய்தனர்.

பூந்தமல்லி தீயணைப்பு நிலையம்
பூந்தமல்லி தீயணைப்பு நிலையம்

அதனால்தான் குழந்தை அறைக்குள் சிக்கியிருந்தாலும் பயப்படாமல் இருந்தான். எங்களிடம் இருந்த ஹைட்ராலிக் லாக் ஓப்பன் மூலம் கதவைத் திறந்தோம். அப்போது சுட்டித்தனமாக குழந்தை கதவு இடைவெளிக்குள் கை விரலை விட்டுவிட்டான். ஹைட்ராலிக் லாக் ஓப்பன் செய்யும் இயந்திரத்தை அகற்றவும் முடியாது. அவ்வாறு செய்தால் குழந்தையின் கை, கதவுக்குள் சிக்கிக்கொள்ளும். இந்தச் சமயத்தில் குழந்தையிடம் பேசியபடியே கதவின் பூட்டை உடைத்தோம். கதவு திறந்ததும் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தோம். வீடுகளில் குழந்தைகளின் கைக்கு எட்டும்படி பூட்டுக்களை வைக்கக் கூடாது. அதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்" என்றனர் எச்சரிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு