Published:Updated:

34 ஆண்டுகள்... 7 உயிர்கள்... மாறாத மீனவர்களின் கோரிக்கை! - நிஜ 'வடசென்னை' கதை

மீனவர்களின் நினைவுச்சின்னம் - எம்.ஜி.ஆர்
News
மீனவர்களின் நினைவுச்சின்னம் - எம்.ஜி.ஆர்

1985-ம் ஆண்டு, மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதற்காக மீனவர்களின் பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 5 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 'மீனவ நண்பன்' திரைப்படம் வெளியானது. அதற்கு முன்பு, 'படகோட்டி' திரைப்படத்தில் மீனவராக நடித்து மீனவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு 'மீனவ நண்பன்' பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அது எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு, வெளியான முதல் திரைப்படம்.

தமிழ்நாட்டின் மீனவர் உள்ளிட்ட எளிய சமூகங்களின் வாக்குகளோடும் 'பொன்மனச் செம்மல்' என்ற அடைமொழியோடும் 1985-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார் எம்.ஜி.ஆர். 70-களின் இறுதியில், உலக வங்கி நகர கட்டமைப்புகளுக்காக நிதி அளிக்கத் தொடங்கியிருந்தது. உலக வங்கி நிதியளிக்க தேர்ந்தெடுத்த நகரங்களின் பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருந்தது. 1973-ம் ஆண்டு, உலக வங்கியின் ஒரு குழு, சென்னை, கல்கத்தா முதலான இந்திய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக சென்னை இருக்கும் எனத் தேர்வு செய்திருந்தது.

மீனவ நண்பன்
மீனவ நண்பன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல் மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (Madras Urban Development Project - I) என்ற பெயரில் உலக வங்கியின் நிதியுதவி சென்னையை வந்தடையத் தொடங்கியது. 1977-ம் ஆண்டு, 62 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்தது உலக வங்கி. இரண்டாவது மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 1980 முதல் 1988 வரை, உலக வங்கியால் தமிழ்நாடு அரசுக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்கப்பட்டன. சென்னையின் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்த நிதியைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தக் காலகட்டத்தில் சென்னை முழுவதும் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் காலிசெய்யப்பட்டு, நகரத்துக்கு வெளியே குடி வைக்கப்பட்டனர். 1985-ம் ஆண்டு, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. அரசின் மொழியில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது என்பதற்கு, பாரம்பர்ய மீனவர்களைக் கடற்கரையைவிட்டு அப்புறப்படுவது என்று பொருள்.

மெரினா கடற்கரை - தற்போது
மெரினா கடற்கரை - தற்போது

1985-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று, மெரினா கடற்கரையில் மீனவர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமரங்கள், படகுகள், மீன்பிடி உபகரணங்கள், வலைகள் முதலானவை காவல்துறையினரின் பாதுகாப்போடு, மாநகராட்சி அதிகாரிகளால் இரவோடு இரவாகக் கடற்கரையைவிட்டு கனரக வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கள் தொழிற்பொருள்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். மெரினா கடற்கரையிலுள்ள காந்தி சிலையின் முன்பாக நவம்பர் 6-ம் தேதியன்று, உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னம்மாள் என்ற பெண் உயிரிழந்தார்.

மெரினா கடற்கரை - தற்போது
மெரினா கடற்கரை - தற்போது
ரா.திலிப்குமார்

அன்னம்மாளின் மரணத்துக்குப் பிறகு, மீனவர்கள் கோட்டையை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தனர். நவம்பர் 7-ம் தேதியன்று விவேகானந்தர் இல்லம் அருகிலிருந்து, மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இணைந்து சென்னை கோட்டையை நோக்கி பேரணியை நடத்தினர். கோட்டை வாயிலருகே அயோத்திக் குப்பத்தைச் சேர்ந்த கோதண்டபாணி என்ற மீனவர் தீக்குளித்தார். கடுமையான தீக்காயங்களோடு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோதண்டபாணி சிகிச்சைப் பலனின்றி நவம்பர் 9-ம் தேதியன்று உயிரிழந்தார்.

தொடர் உயிரிழப்புகளால் ஆவேசமடைந்த மீனவ மக்கள் உண்ணாவிரதப் போராட்டம், வாய் மற்றும் கை, கால்களில் கருப்புத்துணி கட்டிப் போராட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. மீனவ மக்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரிக்கும் நீதிபதி வராத காரணத்தால் கே.சுப்ரமணியன் என்பவர் தலைமையில் நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தையும் மீனவ மக்கள் நடத்தினர்.

ஏறத்தாழ ஒருமாதம் நீடித்த மீனவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத தமிழக அரசு, காவல்துறையை மீனவர்கள் குடியிருப்புகளுக்குள் அனுப்பியது.
சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் தேவாரம்
சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் தேவாரம்

1985-ம் ஆண்டு, டிசம்பர் 4-ம் தேதியன்று, அன்றைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தேவாரம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காவல்துறை நுழைந்தது. அயோத்திக் குப்பம், மாட்டாங்குப்பம், நொச்சிக் குப்பம், நடுக்குப்பம் முதலான பகுதிகள் காவல்துறையினரால் நிரப்பப்பட்டன. மீனவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் வெடிக்க, பகை நாட்டின் மீது படையெடுத்ததைப்போல, காவல்துறை மீனவர்களை நோக்கி 17 முறை துப்பாக்கியால் சுட்டது.

காவல்துறை மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அயோத்திக்குப்பம் துலுக்கானம், சேகர், மனோகரன், குள்ள சேகர், நொச்சிக்குப்பம் சின்னபிள்ளை ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர். 19 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41 மீனவர்களை கைது செய்து காவலில் வைக்கப்பட்டனர்.

அயோத்திக்குப்பம் நினைவுச்சின்னம்
அயோத்திக்குப்பம் நினைவுச்சின்னம்

மீனவ சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களில் உயிரிழந்த பிறகு, உச்ச நீதிமன்றம் மெரினா கடற்கரையை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கியது. இறந்த எழுவரின் நினைவாக, அயோத்திக்குப்பத்தில் நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 4-ம் தேதியன்று, மீனவ சமூகங்களின் அமைப்புகள் இந்த நினைவுச் சின்னத்தின் முன்பு கூடி, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய மீனவர் சங்கத் தலைவர் பாரதி, "மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மீனவர் மக்கள் போராட்டம் நடத்தி, உயிர்த்தியாகம் செய்து, உரிமைகளை மீட்டனர். 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தற்போது அரசு மீண்டும் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாகக் கூறி, காலம்காலமாக நாங்கள் வலை காய வைக்கும் இடங்களையும் கட்டுமரங்கள் நிறுத்தும் இடங்களையும் மீன் வியாபாரம் செய்யும் இடங்களையும் அரசு குறிவைக்கிறது. மற்றவர்களின் இடங்களை மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளது போன்ற தோற்றத்தை மாநகராட்சி உருவாக்குகிறது. அதனால் ஏழு உயிர்களை இழந்த இதே நாளில், அரசுக்கு நாங்கள் ஒரு கோரிக்கை மட்டுமே வைக்கிறோம். கடலும் கடற்கரையும் மீனவர்களுக்கு மட்டும்தான். மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கும் மீன் வியாபாரத்துக்கும் அரசு இடையூறு செய்யக் கூடாது" என்றார்.

தென்னிந்திய மீனவர் சங்கத் தலைவர் பாரதி
தென்னிந்திய மீனவர் சங்கத் தலைவர் பாரதி

தங்கள் வாழ்வாதாரத்துக்காக, தங்கள் நிலங்களை, அடிப்படை உரிமைகளைக் கேட்கின்றனர் சென்னையின் பூர்வகுடி மீனவ மக்கள். 34 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றன, மீனவர்களின் கோரிக்கைகள், உலக வங்கியின் புதிய திட்டங்கள், தமிழக அரசின் காவல்துறை மற்றும் அயோத்திக்குப்பத்தின் நினைவுச்சின்னம்!