Published:Updated:

`இன்னும் மூன்றே நாள்கள்தான் டுயூட்டி' - கொரோனாவால் சென்னை அரசு தலைமைச் செவிலியருக்கு நேர்ந்த துயரம்

கொரோனா சிகிச்சை அளிக்கும் ராஜீவ்காந்தி மருத்துவமனை
கொரோனா சிகிச்சை அளிக்கும் ராஜீவ்காந்தி மருத்துவமனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 58 வயதான தலைமைச் செவிலியர், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. நேற்றைய நிலவரப்படி 18, 545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோவைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்கதையாகிவருகிறது.

குறிப்பாக கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துவருவது வேதனையை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா வார்டில் சேவை மனப்பான்மையில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு
கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து தற்கொலை! -சென்னையில் அதிர்ச்சி #Corona

உயிரிழப்பையடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரசு மருத்துவமனைகளில் செயல்படும் கொரோனா வார்டுகளில் பணியாற்றுவது என்பது மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. தனிமனிதக் கவச உடை அணிந்திருந்தாலும் அதையும் மீறி கொரோனா வைரஸால் சிலர் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

சென்னை ஸ்டான்லி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 20-க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த தனியார் மருத்துவனையின் நிர்வாக இயக்குநர் சைமனின் சடலம், நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த தலைமைச் செவிலியர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

கொரோனா மரணம் (Representative Image)
கொரோனா மரணம் (Representative Image)
AP
`தமிழகத்தில் 18,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு’ -  சுகாதாரத்துறை #NowAtVikatan

இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமை செலிவியர் மரணம் குறித்து நம்மிடம் பேசிய நர்ஸ்கள், ``சென்னை நங்கநல்லுரைச்சேர்ந்த அவருக்கு 58 வயதாகுகிறது. கடந்த மார்ச் மாதத்தோடு ஓய்வு பெற்றுவிட்டார். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதால் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள், நர்ஸ்களுக்குத் தமிழக அரசு 2 மாதப் பணி நீட்டிப்பை வழங்கியது. அதன்காரணமாக தலைமைச் செவிலியருக்கு 2 மாதக் காலம் பணி நீட்டிப்பு கிடைத்தது. அதன்படி மே 31-ம் தேதி அவர் ஓய்வு பெற இருந்தார்.

இந்தச் சமயத்தில்தான் கடந்த சில தினங்களுக்கு முன் தலைமைச் செவிலியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. திடீரென அவரின் உடல்நலம் மோசமானது. அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கொரோனாவால் மரணமடைந்த தலைமைச் செவிலியர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்குப் பணி நியமிக்கும் அலுவல்களை செய்து வந்தார். கொரோனா தொற்று உறுதியானதும் இவருக்கு மருத்துவமனையின் 3-வது தளத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பழகுவதற்கு இனிமையான தலைமைச் செவிலியரை இழந்து தவித்துவருகிறோம். இன்னும் 3 தினங்கள் மட்டுமே பணிக்காலம் இருந்த நிலையில் தலைமைச் செவிலியர் உயிரிழந்துள்ளார். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சேவை மனப்பான்மையில் செயல்பட்ட இவர், கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த முதல் தலைமைச் செவிலியர்" என்றனர் வேதனையுடன்.

தலைமைச் செவிலியரின் மரணம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சக செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய விதிகளின்படி தலைமைச் செவிலியரின் சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு