Published:Updated:

`4 மாடிகள்; 100 படுக்கை வசதிகள்!’ -கொரோனா காலத்திலும் திறக்கப்படாத சென்னை மாநகராட்சி மருத்துவமனை

திறக்கப்படாமல் இருக்கும் மருத்துவமனைக் கட்டடம்
திறக்கப்படாமல் இருக்கும் மருத்துவமனைக் கட்டடம்

கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த நேரத்திலும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் திறக்கப்படாமலே இருக்கும் அரசு மருத்துவமனையால் என்ன பயன் என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம். நாளுக்குநாள் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலிலும்கூட சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு மருத்துவமனை திறக்கப்படாமலே இருக்கிறது. இது குறித்து ஈஞ்சம்பாக்கம் முன்னாள் கவுன்சிலரும் சமூக ஆர்வலருமான சக்கரபாணியிடம் பேசினோம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

``சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ளது ஈஞ்சம்பாக்கம். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்குதான் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளுக்கு மருத்துவம் பார்த்துச் செல்கின்றனர். சர்க்கரை குறைபாடு, ரத்தஅழுத்த நோயாளிகளும் மாத்திரைகள் வாங்கிச் செல்கின்றனர். இந்த மருத்துவமனையைச் சுற்றிலும் நிறைய காலி இடம் இருந்தது. இந்த இடத்தில் சமூக விரோதிகள் குடித்துவிட்டு பாட்டிலை போட்டுச் செல்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டதால் நிலைமை மாறியது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்து நேர்ந்தால் இங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கோ அல்லது 15 கி.மீட்டர் தள்ளியிருக்கும் ராயப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கோதான் எடுத்துச் செல்லும் நிலை இருந்தது. எனவே இந்தக் காலி இடத்தில் விபத்து சிகிச்சைக்கான மருத்துவமனை கட்ட அரசுக்குப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை அனுப்பியிருந்தோம்.

சமூக ஆர்வலர் சக்கரபாணி
சமூக ஆர்வலர் சக்கரபாணி

அதைத் தொடர்ந்து விபத்து சிகிச்சைப்பிரிவு கட்டப்பட்டும், அது செயல்படாமலேயே இருந்தது. கோடிகளில் வாங்கி வைக்கப்பட்டிருந்த அதிநவீனக் கருவிகள் எல்லாம் பயனற்றுக் கிடந்தன. 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட பின்னர் இந்த மருத்துவமனையை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்தினர். அதாவது முதலுதவி சிகிச்சை மட்டும் இங்கு தரப்பட்டு, பின்னர் ராயப்பேட்டைக்கோ, சென்ட்ரலுக்கோ, ஸ்டான்லிக்கோ நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போதும் அது செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையைச் சுற்றியிருந்த காலி இடங்களை ஒன்றுசேர்த்து பலகோடி செலவில் நான்கு அடுக்குக் மாடியுடனும் 100 படுக்கை வசதிகளுடனும் மாநகராட்சி சார்பில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவே இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறை, நிர்வாக வசதிகள் என்று இதற்குக் காரணம் கூறப்பட்டாலும், இங்கு அரசு சார்பில் மருத்துவமனை வருவதைச் சுற்றியுள்ள சில தனியார் மருத்துவமனைகள் விரும்பவில்லை என்றும் சிலர் கூறிவருகிறார்கள்.

ஈஞ்சம்பாக்கத்தில் திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனக் கட்டடம்
ஈஞ்சம்பாக்கத்தில் திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனக் கட்டடம்

கொரோனா தாக்கத்தால் தமிழகம், குறிப்பாக சென்னை பரிதவித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க இடவசதி பற்றாக்குறையாகத்தான் உள்ளது. இதுபோன்ற பேரிடர் காலத்திலும்கூட இந்த மருத்துவமனையைத் திறந்து செயல்படுத்தாமல் மாநகராட்சி காலம்தாழ்த்துவது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

ஒருவேளை உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பது உறுதியாகும்போது ஆட்சியாளர்கள் இதைத் திறந்துவைத்துவிட்டு எங்கள் ஆட்சியில்தான் செய்தோம் என்று சொல்லி ஓட்டு வாங்க நினைக்கிறார்களோ என்னவோ? தயவு செய்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த மருத்துவமனையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

ஈஞ்சம்பாக்கத்தில் திறக்கப்படாமலே இருக்கும் அரசு மருத்துவமனை கட்டடம்
ஈஞ்சம்பாக்கத்தில் திறக்கப்படாமலே இருக்கும் அரசு மருத்துவமனை கட்டடம்

ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து சென்னை மாநகராட்சியின் சோழிங்கநல்லூர் மண்டல அலுவலர் சுகுமாரிடம் பேசினோம். ``இங்குள்ள பிரைமரி மருத்துவமனை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. புதிதாகக் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையைத் திறப்பதற்கு நாள் குறிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்னும் நியமிக்கப்படவில்லை. ஆனாலும், தற்போது கொரோனா அவசர காலத்தில் இந்த மருத்துவமனையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகப் படுக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு