Published:Updated:

கொடநாடு கொலை வழக்கு: எடப்பாடி பழனிசாமி மீது கொலைக் குற்றம் சுமத்திய மனோஜுக்கு ஜாமீன்!

சயான், வாளையார் மனோஜ்
சயான், வாளையார் மனோஜ்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைக் குற்றம் சுமத்திய வாளையார் மனோஜ், சயான் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில், சயானைத் தொடர்ந்து மனோஜுக்கும் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கொடநாடு
கொடநாடு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்தக் கொலை, கொள்ளையில் தொடர்பு இருப்பதாக சயான், வாளையார் மனோஜ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதே கொலைக் குற்றம் சுமத்தியதால், ஜாமீனில் இருந்த இருவரையும் உடனடியாகக் கைதுசெய்து கோவைச் சிறையில் அடைத்தது காவல்துறை. பலத்த போலீஸ் பாதுகாப்புடனேயே அழைத்துவரப்பட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். சயானுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஊட்டி நீதிமன்றத்தில் மூன்று முறை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மூன்று முறையும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில்,சென்னை உயர் நீதிமன்றத்தில் சயான் தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 7-ம் தேதி சயானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினர். இதைத் தொடர்ந்து ஊட்டி கோர்ட்டில் வாளையார் மனோஜுக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா, வாளையார் மனோஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

வாளையார் மனோஜ்
வாளையார் மனோஜ்

ஜாமீன் குறித்துப் பேசிய மனோஜ் தரப்பு வழக்கறிஞர்கள், ``மனோஜுக்கு ஜாமீன் கேட்டு இரண்டு ஆண்டுகளாக முயன்றுவந்தோம். தற்போது கிடைத்துவிட்டது. வழக்கு முடியும் வரை அவர் ஊட்டியில் இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஊட்டி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு