Published:Updated:

`நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி இவ்வளவு பெரிய தூண்கள்?' - கோவை மேம்பாலம் விவகாரத்தில் நீதிமன்றம் ஷாக்

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்
கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

இந்த வழக்கு குறித்து தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை, கோவை மாவட்ட நிர்வாகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி சேஷசாயி வழக்கை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்.

கோவை, அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை, 10.10 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.1,600 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி, இரவு பகலாக நடந்துவருகின்றன.

கோவை அவிநாசி சாலை
கோவை அவிநாசி சாலை

இந்தநிலையில், கோவை, அவிநாசி சாலை நில உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், எட்டுப் பேர் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், ``மனுதாரர்கள் உள்ளிட்ட 560-க்கும் மேற்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு எந்தவிதத் தகவலும் தெரிவிக்காமல், சட்டவிரோதமாக நிலம் ஆர்ஜிதம் செய்கின்றனர்.

கொரோனா பணிகளுக்கு பணமில்லை... கோவையில் ரூ.1,600 கோடி பாலத்துக்கு டெண்டர்!

மேம்பாலம் கட்டப்படும் சாலையின் இரு பக்கமும் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என 560-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும்.

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாலப் பணிகளால், போக்குவரத்து நெரிசலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, நில ஆர்ஜிதப் பணிகளை முறையாகக் கையாளும்வரை மேம்பாலப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. ``மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களையும், புகைப்படங்களையும் பார்க்கும்போது அவர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்படவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. உரிய நோட்டீஸ் கொடுக்காமல் இவ்வளவு பெரிய கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டது வியப்பாக இருக்கிறது. தமிழ்நாடு நில ஆர்ஜிதச் சட்டத்தின் விதிகளை மீறாமல் அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டுகிறோம்.

மேலும், உயர்மட்ட சாலைப் பணிகளுக்காக மனுதாரர்களின் அனுமதியின்றி அவர்களின் இடத்தை ஆர்ஜிதம் செய்யக் கூடாது” என்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், வழக்கு குறித்து தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை, கோவை மாவட்ட நிர்வாகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி சேஷசாயி வழக்கை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு