Published:Updated:

` தீவிர புயலாக மாறியது `மஹா'; 120 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்!' - வானிலை ஆய்வு மைய அலர்ட்

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள மஹா புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் கனமழை தொடரும்!

பாலசந்திரன்
பாலசந்திரன்

தமிழகத்தில் பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் கியார் மற்று மஹா என இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளன.

மழை
மழை

இதில், `மஹா' புயல் மூலம் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள மஹா புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். மழை தேங்கி இருக்கும் இடத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார். மேலும், `` கனமழை மூலம் வெள்ளம் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளது" என்றார்.

மழை
மழை

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், ``நெல்லை குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் மாலத்தீவு பகுதிகளுக்கு இரண்டு நாள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். தற்போதைய நிலவரப்படி வரும் நவம்பர் 4 -ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கூடும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் வலுப்பெறக் கூடும். இதன்மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் மழை பெய்யும்.

ஏற்கெனவே உருவாகியுள்ள மஹா புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பு கிடையாது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் திசை தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர் ஒருவர், `நவம்பர் 2 -ம் தேதி திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அங்கு புயலின்பாதிப்பு இருக்குமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாலசந்திரன், ``நவம்பர் 2 -ம் தேதியை பொறுத்தவரை புயல் பாதிப்புக்கு வாய்ப்பு இல்லை” என்றார்.

`கியார்’-ஐ தொடர்ந்து `மஹா’; அரபிக்கடலில் உருவான அடுத்த புயல் - விடுமுறை அறிவிப்பு

இதற்கிடையே, அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என்றும் 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் வானிலை மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. `இதனால் நான்காம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.