Published:Updated:

``அந்தக் கடமைக்காக நான் உயிரோடு இருக்கிறேன்" - நடுரோட்டில் தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்

மூதாட்டி தனலட்சுமி
மூதாட்டி தனலட்சுமி

பலரின் வாழ்க்கையைத் தடம் புரளவைத்த கொரோனாவால், நடுரோட்டில் தவித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 65 வயது மூதாட்டியை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பெண் காவலர் மரியபுஷ்பமேரி.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாறிலிருந்து மூதாட்டி ஒருவர், கடந்த 18-ம் தேதி போன் செய்துள்ளார். அப்போது, `அய்யா எனக்கு உதவி செய்யுங்கள்' என்று உடைந்த குரலில் அந்த மூதாட்டி பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய காவலர், `அம்மா நீங்க யாரு? உங்களுக்கு என்ன உதவி வேண்டும்' என்று கேட்டுள்ளார். உடனே அந்த மூதாட்டி , `அய்யா, நான் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஆண்கள் விடுதியில் வேலைபார்த்துவந்தேன். அங்கு வேலை இல்லை. அதனால் அடையாறு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தேன். தற்போது சாப்பிட வழியில்லாமல் நடுரோட்டில் தங்கியிருக்கிறேன். எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்' என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட காவலர், `நீங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுக்கு உதவி செய்வார்கள்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

காவல் கட்டுப்பாட்டு அறை
காவல் கட்டுப்பாட்டு அறை
முதல் தடவை சென்னைக்கு வந்தபோது எனக்கு உதவி செய்ய யாருமில்லை. அதனால் சென்னையில் யார் உதவி கேட்டாலும் தயங்காமல் செய்துவருகிறேன். மூதாட்டியை காப்பகத்தில் சேர்க்கும் பொறுப்பை இன்ஸ்பெக்டர் என்னிடம் ஒப்படைத்ததும் அவரை அழைத்துக்கொண்டு சில இடங்களுக்குச் சென்றேன். மூதாட்டிக்கு என்னுடைய வீட்டிலேயே தங்க இடம் கொடுக்கலாம் என முடிவுசெய்தேன். அப்போது, மூதாட்டியின் பெயர்கூட எனக்குத் தெரியாது.
பெண் காவலர் மரியபுஷ்பமேரி

இதையடுத்து, காவல் நிலையத்துக்குச் சென்ற மூதாட்டியிடம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில், அன்பாகவும் ஆறுதலாகவும் பேசியுள்ளார். பின்னர், அந்தக் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் மரியபுஷ்பமேரியிடம் இந்த மூதாட்டியை அரசு அல்லது தனியார் காப்பகத்தில் சேர ஏற்பாடு செய்யுமாறு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீலன் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, மூதாட்டியை அழைத்துக்கொண்டு பெண் காவலர் மரியபுஷ்பமேரி, பல இடங்களுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு மூதாட்டி தங்குவதற்கு இடம் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை. எங்குமே இடம் கிடைக்காத சூழலில், மூதாட்டியை மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது மூதாட்டி, `இந்த உசுரு எனக்கு முக்கியமில்லம்மா, இந்த ரோட்டிலதான் தங்கியிருந்தேன். நான் வாழ்றதே என் பேரனுக்காகத்தான். அவன் காலேஜ் படிக்கிறான். என்வீட்டுக்காரு, மகள் எல்லாரும் ஊர்ல இருக்காங்க. அவனைப் படிக்க வைக்கணும், கொஞ்சம் கடன் இருக்கு. அதுக்காகத்தான் சென்னைக்கு வேலைக்கு வந்தேன்' என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். மூதாட்டியின் பேச்சைக் கேட்டதும் பெண் காவலர் மரியபுஷ்பமேரிக்கு மனம் இறங்கியது. மூதாட்டியிடம், நான் இருக்கிறேன் நீங்கள் கவலைப்படாதீங்க என்று கூறியுள்ளார். காவல் நிலையத்துக்கு வந்ததும் இன்ஸ்பெக்டரிடம், சார், மூதாட்டியை நான் என் வீட்டுக்கே அழைத்துச்செல்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டரும் ஓகே என்று கூறியுள்ளார். இதையடுத்து, மூதாட்டியை வீட்டுக்கு அழைத்துச்சென்று அவரை கவனித்துவருகிறார் பெண் காவலர்.

அவரிடம் பேசினோம். ``என்னுடைய சொந்த ஊர் திண்டுக்கல். நான் 2009-ல் தமிழக காவல் துறையில் காவலராக பணிக்குச் சேர்ந்தேன். முதல் தடவை சென்னைக்கு வந்தபோது எனக்கு உதவி செய்ய யாருமில்லை. அதனால் சென்னையில் யார் உதவி கேட்டாலும் தயங்காமல் செய்துவருகிறேன். மூதாட்டியை காப்பகத்தில் சேர்க்கும் பொறுப்பை இன்ஸ்பெக்டர் என்னிடம் ஒப்படைத்ததும் அவரை அழைத்துக்கொண்டு சில இடங்களுக்குச் சென்றேன். மூதாட்டிக்கு என்னுடைய வீட்டிலேயே தங்க இடம் கொடுக்கலாம் என முடிவுசெய்தேன். அப்போதுகூட மூதாட்டியின் பெயர்கூட எனக்குத் தெரியாது. மூதாட்டியை வீட்டுக்கு அழைத்து வர என் கணவர், அம்மாவிடம் அனுமதி கேட்டேன். அவர்களும் ஓகே என்று கூறினர். உடனடியாக சூளைமேட்டில் உள்ள என்னுடைய வீட்டுக்கு மூதாட்டியை அழைத்துச்சென்றேன்.

``என் கணவர் இறந்துவிட்டார், அய்யா உதவி செய்யுங்கள்"- கண் தெரியாத சென்னை மூதாட்டியின் கண்ணீர்க் கதை
மூதாட்டி தனலட்சுமி
மூதாட்டி தனலட்சுமி

வீட்டுக்குச் சென்றபிறகுதான் மூதாட்டியிடம் பேசினேன். அப்போது அவர், தன்னுடைய பெயர் தனலட்சுமி (65) என்றும், அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருப்பதாகக் கூறினார். அதில், மூத்த மகனின் மருமகள், பேத்தி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டனர். அதனால் மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இளைய மகன் என்னை கவனிப்பதில்லை. மகள்கள்தான் கவனித்துவந்தனர். மூத்த மகனின் மகனை படிக்கவைக்கிறேன். இப்போது, அவன் காலேஜ் படிக்கிறான். 3 லட்சம் ரூபாய் வரை கடன் இருக்கிறது.

சொந்த ஊரான கும்பகோணம் கடுவாஞ்சேரியில், மகளும் என் வீட்டுக்காரரும், பேரனும் இருக்கிறார்கள். பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்துதான் ஒரு வருஷத்துக்கு முன் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஆண்கள் விடுதியில் சமையல் வேலைக்கு வந்தேன். கொரோனாவால் விடுதியை மூடிவிட்டார்கள். அதனால் சொந்த ஊருக்குச் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்துக்குச் சென்றேன். ஆனால் அங்கு பஸ் இல்லை. அதனால் எங்கே தங்குவது என்று தெரியாமல் தவித்தேன். ஊரில் உள்ள மகளிடம் பேசியபோது, அடையாறு இந்திராநகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்குமாறு கூறினார். அதனால் நடந்தே அடையாறுக்கு வந்தேன்.

அடையாறு காவல் நிலையம்
அடையாறு காவல் நிலையம்

அப்போதுதான் உறவினர்களின் உண்மையான முகம் எனக்குத் தெரிந்தது. அதனால்தான் நடுரோட்டிலேயே சில நாள்கள் தங்கியிருந்தேன். சாப்பாடுகூட கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல்தான் காவல் நிலையத்தில் உதவிக்கேட்டேன் என்று தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைக் கூறினார். அதைக் கேட்டதும் எனக்கும் மனசு ரொம்ப கஷ்டமாகிவிட்டது. அதனால் என்னுடைய வீட்டிலேயே தனலட்சுமி அம்மாவை தங்கவைத்து பராமரித்துவருகிறேன். என்னுடைய அம்மாவுடன் தனலட்சுமி அம்மாவும் வீட்டிலேயே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றார்.

வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனலட்சுமி, பெண் காவலர் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டார். அந்தக் குடும்பத்தினருடன் நன்றாகப் பழகிவருகிறார். மூதாட்டி தனலட்சுமி, இதுவரை நான் வாங்கிய சம்பளத்தில் கடனை அடைத்துவந்தேன். என் பேரனை நல்ல நிலைக்குக் கொண்டு வந்துவிடணும். அந்தக் கடமைக்காக நான் உயிரோடு இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

மூதாட்டி தனலட்சுமியின் தன்னம்பிக்கை, அவருக்கு உதவிய மனிதநேயமிக்க பெண்காவலர் மரியபுஷ்பமேரி ஆகிய இருவரையும் சக காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு