`தினமும் 45 கி.மீட்டர்; நெஞ்சோடு அணைத்தபடி குழந்தை' - உபர் டெலிவரி பெண்ணின் நெகிழ்ச்சிப் பயணம்

சென்னையில் உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் பெண் ஒருவர், டூவிலரில் தன் நெஞ்சோடு குழந்தையை அணைத்தபடி பயணித்துவருகிறார்.
சென்னை அயனாவரம் பகுதியில் பைக்கில் கைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி சாலையில் சென்றுகொண்டிருந்தார் பெண் ஒருவர். அந்தக் காட்சியைப் பார்த்ததும், `வழக்கம்போல சென்னையில் டூவிலர்களில் இப்படிப் பல பெண்கள் செல்வதைப் போலத்தான் இவரும் செல்கிறார்' என்றுதான் கருதினோம்.
ஆனால், அந்தப் பெண் அணிந்திருந்த டீசர்ட்டில் உபர் என்றும் பைக்கின் பின்னால் உபர் டெலிவரி பாக்ஸும் இருந்தது. இதனால் பணிநிமித்தம்தான் குழந்தையோடு அந்தப் பெண் பைக்கில் செல்வதை யூகிக்க முடிந்தது. அடுத்து அந்தப் பெண்ணின் பைக்கைப் பின்தொடர்ந்து சென்று பேச்சுக் கொடுத்தோம். பைக்கை நிறுத்திய அந்தப் பெண் தன்னுடைய பெயர் வள்ளி என்று கூறிவிட்டு சிரித்த முகத்தோடு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

``நான். பி.எஸ்ஸி படித்துள்ளேன். திருமணத்துக்கு முன் கடையில் வேலைபார்த்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தினகரன் என்பவருடன் எனக்குத் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒன்றரை வயதில் சாய்கிஷோர் என்ற மகன் உள்ளான். என் கணவர் தினகரன், ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணியாற்றிவருகிறார். அவரின் சம்பளத்தில் குடும்பத் தேவைகளைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் நானும் வேலைக்குச் செல்ல முடிவு செய்தேன்.
வீட்டில் குழந்தையைக் கவனிக்க ஆள் இல்லை. மேலும், காப்பகத்திலும் குழந்தையைவிட எனக்கு மனம் இல்லை. இதனால் குழந்தையை கவனித்தபடியே என்ன வேலை செய்யலாம் எனக் கூகுளில் தேடினேன். அப்போதுதான் உபரில் டெலிவரி வேலை குறித்த தகவல்கள் கிடைத்தன. உடனே சம்பந்தப்பட்ட உபர் நிறுவனத்தோடு பேசினேன். அவர்களும் ஓகே என்று சொன்னார்கள். அப்போது, `டெலிவரி செய்யும்போது குழந்தையை அழைத்துச் செல்வேன்' என்று கூறினேன். அதற்கும் டபுள் ஓகே என்று கூறினார்கள்.
நான் 14 ஆண்டுகளாக டூவிலர் ஓட்டிவருகிறேன். லைசென்ஸும் உள்ளது. கடந்த மாதம் உபரில் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் டெலிவரி அண்ணாநகர் என்பதால், வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அப்போது சாய் கிஷோரை என் நெஞ்சோடு அணைத்தபடி டூவிலரில் சென்றேன். அண்ணாநகருக்குச் சென்று கஸ்டமரிடம் உணவுப் பொருளை டெலிவரி செய்தபோது, அவர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். பிறகு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். அந்த நிகழ்வு எனக்குள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

வேலைக்குச் சேர்ந்து 3-வது நாளில் உபர் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவருக்கு என்னைப்பற்றிய தகவல் தெரிந்தது. உடனே அவர், என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரும் எனக்கு வாழ்த்துகள் கூறியதோடு சாய்கிஷோருக்கு கிஃப்ட்டும் கொடுத்தார். அதன்பிறகு நான் தினமும் மகிழ்ச்சியோடு டெலிவரி செய்துவருகிறேன்" என்றவரிடம்,
`தினமும் எத்தனை கிலோமீட்டர்கள் குழந்தையோடு பயணிப்பீர்கள்?' என்றோம்.
``தினமும் முற்பகல் 12 மணியளவில் பணியைத் தொடங்குவேன். ஆன் லைனில் எனக்கு ஆர்டர்கள் வரும். அதை எடுத்துக்கொண்டு மாலை 4 மணி வரை டெலிவரி செய்வேன். அதன்பிறகு வீட்டுக்குச் சென்றுவிடுவேன். பிறகு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை டெலிவரி. அப்போதும் என்கூடத்தான் சாய்கிஷோர் இருப்பான். ஒரு நாளைக்கு 40 முதல் 45 கி.மீட்டர் வரை குழந்தையோடு பயணிப்பேன். ஒரு டெலிவரி என்பது 4 கி.மீட்டர் முதல் 5 கி.மீட்டருக்குள்தான் இருக்கும். அதன்பிறகு சிறிது ஓய்வு கிடைக்கும். அந்த சமயத்தில் சாய் கிஷோருக்குத் தேவையான உணவு, ஸ்நாக்ஸ் ஆகியவற்றைக் கொடுப்பேன். அதன்பிறகு அடுத்த ஆர்டர். இப்படியே வாழ்க்கை ஓடுகிறது" என்றார் உற்சாகத்துடன்.

`எத்தனையோ வேலைகள் இருக்கும்போது இந்த வேலையை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?' என்றோம்.
``சாய்கிஷோரை யாரிடமும் விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல எனக்கு மனம் இல்லை. இதனால்தான் அவனைக் கவனித்தபடியே வேலை செய்ய விரும்பினேன். அதற்கு இந்த வேலை சரியாக இருக்கும் எனக் கருதினேன்"
தினமும் எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது?
``ஆர்டரைப் பொறுத்துதான் சம்பளம். தினமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை சம்பாதித்துவிடுவேன். ஆர்டரைப் பொறுத்து இன்சென்ட்டிவ் கிடைக்கும். நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு குடும்பக் கஷ்டம் குறைந்துள்ளது."
உங்களின் முயற்சியை கணவர் எப்படிப் பார்க்கிறார்?
`` அவரிடம் உபர் நிறுவனத்தில் டெலிவரி வேலைக்கு குழந்தையோடு செல்வதாகக் கூறியபோது, உன் விருப்பம் என்று கூறினார். அதன்பிறகு எனக்கு அவர் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்துவருகிறார்".

`தொடர் பயணத்தால் குழந்தை சோர்வடையாதா?'
``இதுவரை அப்படித் தெரியவில்லை. டெலிவரி செய்ய செல்லும்போது அவனின் முகத்தைப் பார்க்கும்போது எனக்கு சோர்வுகள் மறைந்துவிடும். அதைப்போல அவனும் நெஞ்சோடு என்னை அணைத்தபடி வருவதால் சோர்வடைய மாட்டான். என்னைவிட்டு அவனும் அவனைவிட்டு நானும் ஒருநிமிடம் கூட பிரிந்திருக்கமாட்டோம். ஏனெனில் அந்தளவுக்கு இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அளவில்லா பாசம்" என்றார் உற்சாகக் குரலில்.
வள்ளியின் தன்னம்பிக்கைப் பயணத்தைப் பற்றி உங்கள் கமென்டுகளைப் பதிவிடுங்கள் மக்களே...!