Published:Updated:

சென்னையில் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா? - நிலவரம் என்ன?!

அரசுப் பேருந்து

சென்னையின் மக்கள்தொகைக்கு ஏற்ப 6,000 அரசுப் பேருந்துகள் தினசரி இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நாள்தோறும் 2,800 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

சென்னையில் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா? - நிலவரம் என்ன?!

சென்னையின் மக்கள்தொகைக்கு ஏற்ப 6,000 அரசுப் பேருந்துகள் தினசரி இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நாள்தோறும் 2,800 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

Published:Updated:
அரசுப் பேருந்து

சென்னை மாநகர் போக்குவரத்துக்குக் கழகத்துக்கு (எம்.டி.சி.,) சொந்தமாக 31 பணிமனைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 605 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. தினதோறும் 23.33 லட்சம் பயணிகள் பயணித்துவருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தின் காரணமாக அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே சென்னையிலுள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தால் அரசுப் பேருந்துகளில் தினமும் பயணிப்போர் கூட்ட நெரிசலில் சிக்கி கடுமையான பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர். குறிப்பாக காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

சென்னை
சென்னை
வி.ஸ்ரீனிவாசுலு

இதனால் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்துக்கிடக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மற்றொருபுறம் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் மூத்த குடிமக்களின் நிலைமை மேலும் பரிதாபமாக இருக்கிறது. எனவே, சென்னையில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், "மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், 2,800 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 2013-ம் ஆண்டு முதல் 3,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துனர், தொழிநுட்பப் பணியாளர்கள் ஓய்வுபெற்றுள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு இடமாற்றலாகிச் சென்றுள்ளனர்.

ஆறுமுக நயினார்
ஆறுமுக நயினார்

இதனால் அனைத்துப் பணிமனைகளிலும் ஓட்டுநர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஓட்டுநர்கள் இல்லாததால், ஏராளமான நடத்துனர்கள் பணி இல்லாமல் திரும்புகின்றனர். இதனால் அவர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர்.

மேலும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பிரிவில் தினசரி ஏராளமான 'ரெட் பஸ்'கள் 'நாட் ரன்' செய்யப்பட்டு பணிமனைகளில் நிறுத்திவைக்கப்படுகின்றன. அந்தப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துனர்கள் வேறு வழித்தடங்களில் செல்ல நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் சோர்வாகப் பணியாற்றவேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஓட்டுநர், நடத்துனர்கள்
ஓட்டுநர், நடத்துனர்கள்

மேலும் போதுமான அளவுக்குப் பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அதாவது சென்னையிலுள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப 6,000 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட வேண்டும். ஆனால் ஓடுவது 2,800 மட்டுமே. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பயணிப்போரும் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். போதுமான அளவுக்குப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாமிடம் கேட்டபோது, "தற்போது இயக்கப்படும் பேருத்துகளே போதுமானவை. எங்களுக்கு எவ்விதமான புகாரும் வரவில்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்.