Published:Updated:

``இந்த ஐடியா நேற்றுதான் வந்தது" - தாலி கட்டிய கையோடு சிஏஏ நோட்டீஸ் விநியோகித்த சென்னை மாப்பிள்ளை

நோட்டீஸ் விநியோகித்த மாப்பிள்ளை ஹரிகிருஷ்ணன், சரண்யா
நோட்டீஸ் விநியோகித்த மாப்பிள்ளை ஹரிகிருஷ்ணன், சரண்யா

சென்னை திருவொற்றியூரில் தாலிகட்டிய மாப்பிள்ளை, திருமணக்கோலத்தில் சிஏஏவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

சென்னை திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன். கூலித்தொழிலாளி. இவரின் மனைவி மோகனா. இந்தத் தம்பதியின் மூத்தமகன் ஹரிகிருஷ்ணன் (28). இவர், டிராவல்ஸ் மற்றும் மொபைல் கடை நடத்திவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரண்யாவுக்கும் (24) திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது.

திருமணக்கோலத்தில் சிஏஏ ஆதரவு நோட்டீஸ்
திருமணக்கோலத்தில் சிஏஏ ஆதரவு நோட்டீஸ்

சரண்யாவின் கழுத்தில் ஹரிகிருஷ்ணன் தாலிகட்டிய பிறகு இருவரும் கோயிலிருந்து வெளியில் வந்தனர். பின்னர் இருவரும் மாலையும் கழுத்துமாக அந்தப்பகுதியில் உள்ளவர்களுக்கு சிஏஏ, என்ஆர்சி ஆகிய சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ்களை விநியோகித்தனர். மாப்பிள்ளையும் மணமகளும் கையில் நோட்டீஸ்களோடு அங்கு சென்றதைப் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து புதுமாப்பிள்ளை ஹரிகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில்,``பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. என்னுடைய அம்மா, பா.ஜ.கவின் திருவொற்றியூர் கிளைத் தலைவராக இருந்து வருகிறார். நான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.கவில் சேர்ந்தேன். நகரத் தலைவராகப் பணியாற்றினேன். ஓராண்டாக இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றிவருகிறேன். எனக்கும் சரண்யாவுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

நோட்டீஸ் விநியோகித்த ஹரிகிருஷ்ணன், சரண்யா
நோட்டீஸ் விநியோகித்த ஹரிகிருஷ்ணன், சரண்யா

தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். ஆனால், இந்தச் சட்டத்தால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை வலியுறுத்த முடிவு செய்தேன். அதனால்தான் திருமணம் முடிந்ததும் சிஏஏ, என்ஆர்சி சட்டத்துக்கு ஆதரவாக நோட்டீஸ்களை விநியோகித்தேன். இந்த ஐடியா எனக்கு நேற்றிரவுதான் வந்தது. உடனடியாக சரண்யாவிடம் தகவலைக் கூறினேன். அவரும் ஓகே என்று சம்மதித்தார்.

இதையடுத்து திருமணம் முடிந்தபிறகு பொதுமக்களிடம் சிஏஏ, என்ஆர்சி சட்டத்துக்கு ஆதரவான நோட்டீஸ்களை விநியோகித்தோம். அந்த நோட்டீஸில் ``குடியுரிமைச் சட்டம் கடந்த 1955ல் காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. இந்தச் சட்டம் யாருடைய குடியரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல" எனக் குடியுரிமை சட்டம் குறித்த தகவல்கள் உள்ளன. அதைத் திருமணக் கோலத்தில் நானும் சரண்யாவும் கொடுத்தபோது அதை ஆர்வத்தோடு மக்கள் வாங்கிக் கொண்டனர்.

நோட்டீஸ் விநியோகித்த ஹரிகிருஷ்ணன், சரண்யா
நோட்டீஸ் விநியோகித்த ஹரிகிருஷ்ணன், சரண்யா

எங்களுக்கு திருமணம் நடந்த கோயிலில் இன்னொரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. அவர்களிடமும் சிஏஏ ஆதரவு நோட்டீஸைக் கொடுத்தோம், அதை அவர்கள் ஆர்வத்தோடு வாங்கிக் கொண்டனர்" என்றார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின் செல்ல