Published:Updated:

சென்னை:`கொரோனா பரவினால் வழக்கு' -அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ரகசியத் திருமணம்

ரகசிய திருமணம்
ரகசிய திருமணம்

சென்னை பட்டாளத்தில், ஊரடங்கு விதிகளை மீறி அனுமதியின்றி திருமணம் நடந்துள்ளது. ரகசியத் தகவல் கிடைத்த மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்ததோடு அபராதமும் விதித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முறையாக அரசிடமிருந்து (இ-பாஸ்) அனுமதி பெற வேண்டும். ஆனால், அரசின் இ-பாஸ்களை சிலர் விற்பனை செய்துவந்துள்ளனர்.

இ-பாஸ் விண்ணப்பம்
இ-பாஸ் விண்ணப்பம்

இதுதொடர்பான புகாரின்பேரில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 தற்காலிக ஊழியர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். அடுத்து, தமிழகம் முழுவதும் இ-பாஸ்களை முறைகேடாக வழங்கிய அரசு ஊழியர்கள், புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். சென்னையில் இன்று, தலைமைச்செயலக ஊழியர், மாநகராட்சி ஊழியர் உள்பட 5 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது 2,500 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை இ-பாஸுக்கு பணம் பெற்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்த நிலையில், சென்னையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலேயே சென்னைதான் முதலிடத்தில் உள்ளது. அதனால் சென்னையில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமண நிகழ்ச்சிகளை அரசின் அனுமதியோடும் அரசு விதித்த விதிமுறைகளோடும் நடத்த அனுமதி உள்ளது.

பிறந்தநாள்
பிறந்தநாள்

ஆனால், கொரோனா ஊரடங்கிலும் சிலர் தங்களுடைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளை வெகுவிமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், தி.மு.க பிரமுகர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியால் அரசு அலுவலர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அதனால் உளவுத்துறை, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

திருமணம்!

இந்த நிலையில், சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள தேவிகருமாரியம்மன் கோயிலில் இன்று திருமணம் நடந்தது. அதில் 200 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தனிமனித இடைவெளி உள்ளிட்ட எந்த வித அரசு உத்தரவையும் கடைபிடிக்கவில்லை. இந்தத் தகவல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குக் கிடைத்ததும், சம்பவ இடத்துக்குச் சென்றனர். அதிகாரிகளைப் பார்த்ததும் திருமண வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மணமகள், மணமகனின் பெற்றோரை அழைத்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்தனர்.

பிறந்தநாள் மூலம் பரவிய கொரோனா! -தி.மு.க பிரமுகரால் அதிர்ச்சியில்  அதிகாரிகள்
திருமணம்
திருமணம்

அப்போது திருமணத்தை நடத்த எந்தவித அனுமதியும் பெறவில்லை எனத் தெரிந்தது. உடனே அதிகாரிகள் திருமண வீட்டினரிடம், `இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், உங்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படும்' என எச்சரித்தனர். மேலும், அரசின் விதிகளை மீறியதற்காக திருமண வீட்டினருக்கு அபராதம் விதித்தனர். திருமணத்தை நடத்திவைத்த கோயில் பூசாரிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு