Published:Updated:

`ஆய்வுக் கூடமான சமையலறை; சாதிக்க நினைத்த மருந்தாளுநர்!' - கொரோனா மருந்து தயாரிப்பில் நடந்த விபரீதம்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற சிவநேசன்
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற சிவநேசன்

சென்னையில் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற பிரபல மருந்து நிறுவனத்தின் மருந்தாளுநர் உயிரிழந்துள்ளார். டாக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் முகவரியில் பிரபல மருந்து கம்பெனி செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி மேலாளராக மருந்தாநர் சிவநேசன் பணியாற்றி வந்தார். சென்னை பெருங்குடியைச் சேர்ந்த இவர், தி.நகரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர் ராஜ்குமார் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். இந்த மருந்து நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட மருந்து சளி, இருமலுக்குப் பிரபலம். அதனால் கொரோனாவுக்கும் மருந்து தயாரிக்கும் முயற்சியில் இந்த நிறுவனத்தினர் முடிவு செய்து அதற்கான வேலையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Representational image
`கரைசலைக் குடித்ததும் மயங்கினார்' - கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

இந்தநிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த சிவநேசன், அதை மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர் ராஜ்குமாருக்குக் கொடுத்துள்ளார். அதைக் குடித்ததும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சிவநேசன் அதைக் குடித்துள்ளார். பின்னர் இருவரையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிவநேசன் உயிரிழந்தார். டாக்டர் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். விசாரணையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து சிவநேசன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜ்குமாரும், உற்பத்தி மேலாளரும் மருந்தாளுநருமான சிவநேசனும் நெருங்கிய நண்பர்கள். சிவநேசன்தான், இந்த மருந்து நிறுவனத்தின் பிரபலமான இருமல் மருந்து, ஷாம்பு எனப் பல தயாரிப்புகளின் பார்முலாக்களை கண்டுபிடித்து தயாரித்தவர். அதனால் சிவநேசன் மீது டாக்டர் ராஜ்குமார் அதிக நம்பிக்கையில் இருந்துள்ளார்.

கொரோனா மருந்து
கொரோனா மருந்து

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம் என்று சிவநேசன் கூறியதும் அதற்கு டாக்டர் ராஜ்குமாரும் சம்மதித்துள்ளார். சிவநேசன், உத்தரகாண்டில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக அங்கு அவரால் செல்ல முடியவில்லை. இதையடுத்து டாக்டர் ராஜ்குமாரின் சமையலறையை ஆய்வுக் கூடமாக சிவநேசன் மாற்றியுள்ளார். அங்கேயே கொரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா வைரஸுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க சோடியம் நைட்ரேட்டைக், ஹைட்ரிக் ஆக்ஸைடு என சோடியம் நைட்ரேட் கரிசலை மருந்தாளுநர் சிவநேசன் தயாரித்துள்ளார். பின்னர் அதைச் சாப்பிட்டால் கொரோனா தொற்று குணமாகிவிடும் என நம்பிக்கையுடன் சிவநேசன், டாக்டர் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். பின்னர் அந்தக் கரிசலை முதலில் டாக்டர் ராஜ்குமாருக்கு சிவநேசன் கொடுத்துள்ளார். அதைக் குடித்ததும் ராஜ்குமாருக்கு மயக்கம் ஏற்படுவதுபோல இருந்துள்ளது. அதனால், அவர் குடிக்கவில்லை. மயக்கம் வருவதாகக் சிவநேசனிடம் கூறியுள்ளார் டாக்டர் ராஜ்குமார்.

கொரோனா மருந்து
கொரோனா மருந்து

அதற்கு உங்களுக்கு இந்த மருந்தைக் குடித்ததும் ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது என்று கூறிய சிவநேசன், தான் தயாரித்த மருந்தைக் குடித்தார். அதன்பிறகு சிவநேசனுக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் மயங்கியுள்ளனர். அவர்களைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அதிகளவில் மருந்தைக் குடித்ததால் சிவநேசன் உயிரிழந்துவிட்டார். டாக்டர் ராஜ்குமார் சிகிச்சையில் உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிவநேசனின் மனைவி சுஜாதா அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆசைப்பட்ட சிவநேசன் உயிரிழந்தச் சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையிலிருக்கும் டாக்டர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்திய பிறகு இன்னும் கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இருவரும் குடித்த மருந்தை ஆய்வுக்காக போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு