Published:Updated:

` `சைலன்ட் டைப்'; எஸ்.ஐ டேனியல்தான் ரோல் மாடல்'- கமிஷனரின் மலரும் நினைவுகளைப் பகிரும் இன்ஜினீயர்

ஆசிரியர்களுடன் போலீஸ் கமிஷனர் ஏ.கே.வி.
ஆசிரியர்களுடன் போலீஸ் கமிஷனர் ஏ.கே.வி.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பள்ளிப் பருவத்தில் சைலன்ட் டைப் என்று மலரும் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்தார் சர்வீஸ் இன்ஜினீயர் ராமன்.

சென்னை அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் 1979-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கம்ப்யூட்டர் சர்வீஸ் இன்ஜினீயர் ராமன் கூறுகையில், ``1979-ம் ஆண்டில் நான் பத்தாம் வகுப்பு தமிழ் மீடியம் படித்தேன். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இங்கிலீஷ் மீடியம் படித்தார்.

கம்ப்யூட்டர் சர்வீஸ் இன்ஜினீயர் ராமன்
கம்ப்யூட்டர் சர்வீஸ் இன்ஜினீயர் ராமன்

ஒரே பள்ளி என்றாலும் எங்கள் டியூசனில்தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் விஸ்வநாதனும் கணக்கு டியூசன் சுகுமாறன் சாரிடம் ஒன்றாகப் படித்தோம். பள்ளிப் பருவத்தின்போது விஸ்வநாதன் சைலன்ட் டைப், அதிகம் பேச மாட்டார். நாங்கள் பேசினால் மட்டும் பதில் சொல்வார். என்.சி.சி-யில் இருந்தார். கிரிக்கெட் விளையாடுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பேட்டிங்கில் அவர் கில்லி.

இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். இந்தச் சந்திப்புக்கு முன் அம்பத்தூரில் உள்ள பூங்காவில் தினமும் 30 பேர் சந்திப்போம். அப்போதுதான் அனைவரும் சந்திக்க முடிவு செய்தோம். இதற்காக ஒவ்வொருவரின் முகவரி, செல்போன் நம்பரை சேகரித்தோம். பிறகு தினமும் 100 கி.மீட்டர் வரை பயணித்து ஒவ்வொருவரையும் சந்தித்து நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தோம்.

87 வயதாகும் ஆசிரியர் சக்கரபாணியுடன் ராமன்
87 வயதாகும் ஆசிரியர் சக்கரபாணியுடன் ராமன்

40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். மேடையில் ஆசிரியர்களின் காலில் விழுந்து சாஸ்ட்டாங்கமாக விழுந்து ஜே.சி.டி.பிரபாகர் வணங்கினார். 1979-ம் ஆண்டு பேட்ஜ் என்பதால் 79 புத்தகங்களை நூலகத்துக்கு வழங்கியுள்ளோம். ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசாக 20 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வழங்கியுள்ளோம். வறுமையில் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தியுள்ளோம். குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட் செய்து ஒவ்வோர் ஆண்டும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

`கணக்கு வராது; செக்யூரிட்டிக்கு செல்ஃபி சர்ப்ரைஸ்!'- சென்னை போலீஸ் கமிஷனரின் 40 வருட ஃப்ளாஷ்பேக்

நாங்கள் படித்த சமயத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சீனிவாசன். தற்போது அவருக்கு வயது 97. அவர் கோயமுத்தூரில் இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு அவரை அழைத்துவர விமான டிக்கெட் எடுத்திருந்தோம். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் வரவில்லை. 87 வயதாகும் ஆசிரியர் சக்ரபாணி அவர்கள் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்.

தலைமை ஆசிரியர் சீனிவாசன்
தலைமை ஆசிரியர் சீனிவாசன்

விஸ்வநாதன் என்.சி.சி. மாணவர் என்பதால் பள்ளியின் என்.சி.சி மாணவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்தும் வெளிமாநிலத்திலிருந்தும் வந்தவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. 1979-ல் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த விஜயா என்பவர், கான்பூரில் ஐஐடி-யில் பேராசிரியையாக பணியாற்றுகிறார். அவரும் இந்த நிகழ்ச்சிக்க வந்திருந்தார். 1979 பேட்ஜ் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்துள்ளோம்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு நிகழ்ச்சியைவிட 50வது ஆண்டை கொண்டாட உள்ளோம். இன்றைய மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மீது அன்பாகவும் அக்கறையாகவும் மரியாதையாகவும் இருக்க வேண்டும் என்பதே இந்தச் சந்திப்பின் நோக்கம்" என்றார்.

1979-ம் ஆண்டில் படித்தவர்கள்
1979-ம் ஆண்டில் படித்தவர்கள்

பள்ளிப் பருவத்தில் ஏ.கே.விஸ்வநாதனுக்கு எதில் ஆர்வம் அதிகம் என்று ராமனிடம் கேட்டதற்கு, ``ஏ.கே.வி-யின் அப்பா பணி மாறுதல் காரணமாக சென்னை வந்திருந்தார். அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது வில்லிவாக்கத்தில் இருந்த ஒரு மேல்நிலைப்பள்ளியை விட்டால் இந்தப்பள்ளியில் படிக்கதான் அனைவரும் விரும்புவார்கள். ஏ.கே.வி-யின் அப்பா, இன்ஸ்பெக்டர் என்பதால் 8-ம் வகுப்பு கல்வியாண்டின் இடையில் வந்து ஏ.கே.விஸ்வநாதன் சேர்ந்தார்.

8,9,10 ஆகிய மூன்று வகுப்புகள் இந்தப்பள்ளியில் படித்தார். அப்போது அம்பத்தூரில் சப்-இன்ஸ்பெக்டராக டேனியல் என்பவர் இருந்தார். அவர்தான் ஏ.கே.வி-யின் ரோல் மாடல் என்று சொல்வார். டேனியல்போல காவல்துறையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றுவது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு