Published:Updated:

`வாட்ஸ் அப் பண்ணுங்க!' - வீடியோ காலில் விசாரித்த சென்னை போலீஸ் கமிஷனர்

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வீடியோ கால் மூலம் புகார்களை இன்று விசாரித்ததோடு உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே விஸ்வநாதன், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து புதிய கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.கே.விஸ்வநாதனிடமிருந்து பொறுப்புகளை பெற்றுக்கொண்ட மகேஷ்குமார் அகர்வால், ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

மகேஷ்குமார் அகர்வால்
மகேஷ்குமார் அகர்வால்

அப்போது அவர், `கொரோனா தொற்று காரணமாகப் பொதுமக்கள் தங்கள் குறைகளை என்னை நேரில் சந்தித்து புகாரளிக்க முடியாத சூழல் நிலவுவதால் 6369100100 என்ற வாட்ஸ்அப் நம்பரில் வீடியோ கால் மூலம் தொடர்புகொள்ளலாம்' என்று கூறினார். அதைத் தொடர்ந்து கமிஷனரிடம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை புகார்களைத் தெரிவிக்கலாம் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டது.

பஞ்சாப் டு சென்னை: எப்படித் தேர்வானார் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்?

இதைத் தொடர்ந்து இன்று கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் புகார்களைக் கேட்கத் தயாரானார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வீடியோ காலில் வந்து தினேஷ் என்பவர், புகார் ஒன்றைத் தெரிவித்தார். அப்போது அவர், `எனக்கு அறிமுகமான ஒருவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவரிடமிருந்து பணத்தைக் கடன் வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அவர் பணம் கொடுக்கவில்லை. அதனால், நகைகளை அடகு வைத்து கடனை அடைத்தேன்.

முதல்வரைச் சந்தித்த மகேஷ்குமார் அகர்வால்
முதல்வரைச் சந்தித்த மகேஷ்குமார் அகர்வால்

இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் 2019- பிப்ரவரி மாதத்தில் புகாரளித்தேன். போலீஸார் விசாரித்தபோது பணத்தை மாதம்தோறும் தருவதாகக் எழுதிக் கொடுத்தார். ஆனால், தற்போது பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார்' என்று கூறினார். தினேஷ் கூறியதைக் கேட்ட கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இந்த வாட்ஸ் அப் நம்பருக்கு விவரங்களை அனுப்புங்கள் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் வந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சந்தித்து பேசினார். வீடியோ கால் மூலம் புகார்களை விசாரித்த போலீஸ் கமிஷனரின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு