Published:Updated:

`அப்படியொரு கபடி வீரரைப் பார்க்க முடியாது' -இளம் காவலருக்கு நேர்ந்த துயரத்தால் கலங்கும் வடுவூர்

அருண்காந்தி
அருண்காந்தி

அருண்காந்தி துடிப்பானவர். தமிழ்நாடு அளவில் புகழ்பெற்ற கபடி வீரர். காவல்துறை கபடி அணியிலும் சிறப்பான வீரராக இருந்தார்.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞரான அருண்காந்தி, சென்னை மாநகர காவல்துறையில் காவலராகப் பணியாற்றிவந்தார். கொரோனா ஊரடங்குப் பணியில் ஈடுபட்டிருந்த இவர், பணிச் சுமையின் காரணமாக நேற்று மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருண்காந்தி
அருண்காந்தி

விளையாட்டு வீரர்களால் புகழ்பெற்ற ஊர், வடுவூர். இங்கிருந்து உருவான ஏராளமான விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு அளவிலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபெற்று சாதனை படைத்துவருகிறார்கள். குறிப்பாக, வடுவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கபடி வீரர்கள் அதிகம். இதன்மூலம் வேலைவாய்ப்புகளைப் பெற்று பணிக்குச் சென்றவர்களும் ஏராளம். பணி நிமித்தம் காரணமாக இவர்கள் வெளியூர்களில் வசித்தாலும்கூட, ஊர் மக்களுக்கும் இவர்களுக்குமிடையேயான பாசப்பிணைப்பு எப்போதும் இழையோடிக்கொண்டே இருக்கும்.

அருண் காந்தியின் திடீர் மரணம் குறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த மலர்மன்னன், ‘’அருண்காந்தி துடிப்பானவர். புகழ்பெற்ற கபடி வீரர். காவல்துறை கபடி அணியிலும் சிறப்பான வீரராக இருந்தார். திருமணமாகி இரண்டு வருஷம்தான் ஆகுது. ஒரு வயசுல குழந்தை இருக்கு. சென்னை மாநகர காவல்துறையில் வேலைபார்த்த அருண்காந்தி, தனது மனைவி, மகளோடு சென்னையிலதான் இருந்தார்.

சோகத்தில் வடுவூர்
சோகத்தில் வடுவூர்

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுல இருந்தே தொடர்ச்சியாகப் பல நாள்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தார். நேற்று, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைச் சாலையில் ரோந்துப் பணியில் இருந்தப்ப, திடீர்னு நெஞ்சுவலி வந்துருக்கு. அந்தச் சமயத்துல அருண்காந்தியோடு பணியில் இருந்தவங்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டு போயிருக்காங்க. மாரடைப்பு ஏற்பட்டு வர்ற வழியிலயே அருண்காந்தி உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவிச்சிருக்காங்க.

நேற்று பிரேதப் பரிசோதனை செய்ய முடியாததால, இன்னைக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, எங்க ஊருக்குக் கொண்டு வர்றதுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு. ஊரடங்கு அமலில் இருக்கிறதுனால, காவல்துறை உயரதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன் ஆம்புலன்ஸ்ல கொண்டுவர்றாங்க.

``கொரோனாவால் வீட்டில் தனிமை... உருவாகும் மனஅழுத்தம்!"- எதிர்கொள்வது எப்படி? #FightCovid19

பணிச் சுமையால் இளம் வயசுல அருண்காந்தி இறந்துவிட்டார். இதனால் இவர் குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கு. அருண்காந்தியின் மனைவிக்கு அரசு வேலை கொடுக்கணும். அரசு குடியிருப்புல ஒரு வீடு கொடுக்கணும். குழந்தையின் படிப்புச் செலவை அரசு ஏத்துக்கணும். அருண்காந்தியின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். அவரின் இழப்பை ஈடுசெய்ய, அவங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு கொடுத்தால் உதவியா இருக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு