Published:Updated:

`சாலையில் கிடந்த பையைத் திறந்து பார்த்தால் தங்கநகைகள்!'- காவல்நிலையத்தை நெகிழவைத்த சென்னைக் காவலர்

காவலர் காத்திகைச் செல்வன்
காவலர் காத்திகைச் செல்வன்

சபரிமலைக்கு மாலை போட்டுள்ளதால் பூஜைக்கு பூ வாங்கச் சென்றேன். அப்போது குப்பைத் தொட்டியின் அருகில் கிடந்த பையை எடுத்தபோது அதற்குள் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் இருந்தன.

சென்னை தண்டையார்பேட்டை சோலையப்பன் தெரு சந்திப்பு வழியாக காவலர் கார்த்திகைச் செல்வன் நேற்று மாலை நடந்து சென்றார். அப்போது, குப்பை தொட்டியின் அருகே பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்தது. அதை எடுத்த காவலர் கார்த்திகைச் செல்வன், குப்பை தொட்டிக்குள் போட முயன்றார். அப்போது, பிளாஸ்டிக் கவர் வெயிட்டாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பை புதியதாகவும் இருந்தது. இதனால் காவலர் கார்த்திகைச் செல்வனுக்குச் சந்தேகம் வந்தது.

பைக்குள் இருந்த தங்க நகைகள்
பைக்குள் இருந்த தங்க நகைகள்

உடனடியாக அந்தப் பையைத் திறந்துபார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிளாஸ்டிக் கவருக்குள் இன்னும் சில பைகள் இருந்தன. அதற்குள் புத்தம் புதிய பட்டுப்புடவைகள், நைட்டிகள், தங்க நகைகள், சில வாட்ச்கள் (கைக்கடிகாரம்) இருந்தன. யாராவது தவறவிட்டிருப்பார்கள் எனக் கருதிய காவலர், அதைத் தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவேந்திரனிடம் ஒப்படைத்தார்.

அந்தச் சமயத்தில் கண்ணீர்மல்க இளைஞர் ஒருவர், காவல் நிலையத்துக்கு வந்தார். அவர், தன்னுடைய பையைக் காணவில்லை. அதற்குள் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் இருந்ததாகப் பட்டியலிட்டார். இதனைக் கேட்ட இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் அந்த இளைஞரிடம், `நீங்கள் எங்கு பையைத் தொலைத்தீர்கள், அந்தப் பையின் அடையாளம் என்ன.. அதற்குள் என்னென்ன பொருள்கள் இருந்தன?' என விசாரித்தார்.

பைக்குள் இருந்த கைக்கடிகாரங்கள்
பைக்குள் இருந்த கைக்கடிகாரங்கள்

இன்ஸ்பெக்டரின் ஒவ்வொரு கேள்விக்கும் யோசிக்காமல் உடனுக்குடன் பதிலளித்தார் அந்த இளைஞர். பின்னர், காவலர் காத்திகைச் செல்வன் ஒப்படைத்த பிளாஸ்டிக் பையை அவரிடம் காட்டியுள்ளார் இன்ஸ்பெக்டர். உடனே, இந்தப் பை தான் என்று கூறியுள்ளார். இதையடுத்து தங்க நகைகள், பட்டுபுடவைகள் வாங்கியதற்கான ரசீதுகளை ஆதாரமாகக் காட்டியபிறகே போலீஸார் அவரிடம் ஒப்படைத்தனர்.

காவலர் கார்த்திகைச் செல்வனிடம் பேசினோம். ``தமிழகக் காவல்துறையில் 2010-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். சாத்தாங்காடு இன்ஸ்பெக்டருக்குக் கார் டிரைவராகப் பணியாற்றிவருகிறேன். நேற்று எனக்கு விடுமுறை. சபரிமலைக்கு மாலை போட்டுள்ளேன். என்னுடைய வீடு தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ளது.

தங்க நகைகள்
தங்க நகைகள்

பூஜை பொருள்கள் வாங்க நேற்று மாலை வீட்டிலிருந்து நடந்து சென்றேன். அப்போது குப்பை தொட்டியின் அருகே பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்தது. அதை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்தபடியே கடந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் எந்தப் பொருள்கள் கிடந்தாலும் அதை எடுத்து குப்பை தொட்டியில் போடுவது என் வழக்கம். அதுபோலதான் நேற்று அந்தப் பையை எடுத்து குப்பை தொட்டியில் போடச் சென்றேன். அப்போது, அந்தப் பைக்குள் பட்டுப்புடவை இருந்தது தெரியவந்து.

``நான் லஞ்சம் வாங்குவதில்லை; சொல்லி அலுத்துப்போச்சு!’’ - நேர்மையான அதிகாரிக்கு வந்த சோதனை

உடனடியாக பையைத் திறந்து பார்த்தபோது அதற்குள் ஹேண்ட் பேக் ஒன்று இருந்தது. அதில் ஒரு பாக்ஸில் தங்க நகைகள் இருந்தன. பட்டுப்புடவைகள், வாட்ச்சுகள் ஆகியவையும் இருந்ததால் அவற்றைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தேன்'' என்றார்.

தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் கேட்டபோது, ``பட்டாளத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் பையைத் தொலைத்துவிட்டதாகக் கூறினார். அவரிடம் விசாரித்த பின்னர் அந்தப் பையை ஒப்படைத்துவிட்டோம்" என்றனர்.

விக்னேஷிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள்கள்
விக்னேஷிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள்கள்

இந்தச் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் கூறுகையில், ``காவலர் ஒப்படைத்த பையில் ஆறரை சவரன் தங்க நகைகள், பட்டுப்புடவைகள், வெளிநாட்டு வாட்ச்கள் இருந்தன. இதற்கான முறையான ரசீதுகளை விக்னேஷ் எங்களிடம் காட்டியபிறகு பொருட்களை ஒப்படைத்தோம்" என்றார்.

காவலர் கார்த்திகைச் செல்வனுக்கு விக்னேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். காவலரின் நேர்மையான இந்தச் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு