Published:Updated:

``முதல்ல கைகளைக் கழுவுங்க; அதுக்குப் பிறகு புகார் கொடுங்க!" -கொரோனாவால் மாறிய காவல்நிலையங்கள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காவல் நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அதோடு புகார் கொடுக்க வருபவர்களும் கைகளைக் கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால் பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்திவருகிறது. அதோடு பொது இடங்களில் அதிகம் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கல்வி நிறுவனங்களுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு வணிக வளாகங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் அந்தப் பகுதியில் இன்று காலை முதல் மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

புளியந்தோப்பு காவல் நிலையம்
புளியந்தோப்பு காவல் நிலையம்

இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், காவலர்களின் நலன்கருதி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாமை நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்தபடி காவல் நிலையத்தில் போலீஸார், தங்களின் அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடமும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி காவல் நிலைய நுழைவுப் பகுதியில் தண்ணீர், கை கழுவ சோப், திரவம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வருபவர்கள் முதலில் தங்களின் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். அதன்பிறகே அவர்கள் காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் கைகளைக் கழுவுகிறார்களா என்பதை போலீஸார் கண்காணித்துவருகின்றனர். புளியந்தோப்பு காவல் நிலையம் மட்டுமல்ல அனைத்துக் காவல் நிலையங்களிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

கைகளைக் கழுவும் பெண்
கைகளைக் கழுவும் பெண்

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``கமிஷனரின் அறிவுரையின் பேரில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல் நிலையங்கள் மட்டுமல்லாமல் ரோந்துப் பணி, போக்குவரத்து பணி ஆகியவற்றில் ஈடுபடும் காவலர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அவர்களைக் கை கழுவ வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும்" என்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள். அதனால் கமிஷனர் அலுவலகத்திலும் பொதுமக்கள் கைகளைக் கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக வசதிகள் கமிஷனர் அலுவலக நுழைவுப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் காவலர்களும் மாஸ்க் அணிந்துள்ளனர்.

விழிப்புணர்வு வாசகம்
விழிப்புணர்வு வாசகம்

காவல் நிலைய நுழைவுப் பகுதியில் கொரோனா வைரஸ் தொடர்பான விளக்கப் படங்களும் விழிப்புணர்வு வாசகங்களும் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகத்தில் கொரோனா நோயைத் தடுப்போம், தயவு செய்து கைகளை நன்கு கழுவிய பின் நிலையத்துக்குள் வரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு