Published:Updated:

கோயம்பேட்டிலிருந்து போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பரவிய கொரோனா? - கலக்கத்தில் காவல்துறை #Corona

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பரவிய தகவல் காவல்துறையினரைப் பீதியடைய வைத்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட், கொரோனா பரவலின் முக்கிய இடமாக மாறியுள்ளது. அதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்தவர்களுக்கும் காய்கறி வியாபாரிகளுக்கும் வேகமாகக் கொரோனா பரவியது.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட்டில் இடநெருக்கடி மற்றும் சமூக விலகல், மாஸ்க் என எந்தவித முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்காததே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் எனக் கண்டறியப்பட்டது. அதனால் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து பழக்கடைகள், மலர் அங்காடியை மாதவரம் பஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் மாற்றினர். இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைபார்த்த கூலித் தொழிலாளிகள், தங்களின் சொந்த ஊரான விழுப்புரம், கடலூருக்குச் சென்றனர். அவர்களுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றுவது தொடர்பாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தலைமையில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் காவல்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் கலந்துகொண்டனர். தற்போது கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்குத் தொடர்ச்சியாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டரின் டிரைவர், நுண்ணறிவுப் பிரிவு காவலர் என 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

டி.ஜி.பி அலுவலக காவலர்களுக்கு கொரோனா வந்த டிராவல் ஹிஸ்ட்ரி! -அதிர்ச்சியில் அதிகாரிகள் #Corona
கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் சோதனை
கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் சோதனை

கொரோனா உறுதி செய்யப்பட்ட காவலர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் குடியிருக்கும் இடங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் ஒருவர், காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். அதே குடியிருப்பில் மாங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் குடியிருக்கிறார்.

மாங்காடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதியானது. அதைத் தொடர்ந்து அதே குடியிருப்பில் குடியிருக்கும் கோயம்பேடு பெண் காவலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், அந்தப் பெண் காவலரின் கைக்குழந்தைக்கு கொரோனா உறுதியாகவில்லை. தற்போது தாயும் சேயும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் காவலர் குடியிருப்பில் குடியிருப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளனர். அந்தக் குடியிருப்பை சுகாதாரத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை
``கோயம்பேடு சந்தையா, கொரோனா மந்தையா?'' - பதறவைக்கும் வைரஸ்... பயப்படாத மக்கள்

கோயம்பேடு மார்க்கெட் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான துணை கமிஷனர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் துணை கமிஷனருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. இருப்பினும் துணை கமிஷனர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் காவலர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம்பிடித்த நிலையில் ஐ.பி.எஸ் அதிகாரியான துணை கமிஷனருக்கும் கொரோனா அறிகுறி உள்ளதால் காவல்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சென்னை காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``டிஜிபி அலுவலக காவலர்களுக்கும் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால்தான் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, மாதவரம் பஸ் நிலையத்துக்கு பழக்கடைகள், பூ அங்காடிகள் மாற்றப்பட்டன்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இருப்பினும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றியவர்கள், வியாபாரிகள் என 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியானது. மேலும், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து காய்கறிகளை விற்ற திருவான்மியூரைச் சேர்ந்த பெண் வியாபாரிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவலைத் தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

சி.எம்.டி.ஏ அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``கோயம்பேடு மார்க்கெட்டில் இடநெருக்கடியைச் சமாளிக்கவும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் சில மாற்று ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைந்தகரை, திருமங்கலம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சிறுவியாபாரிகளின் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் ஆலோசனையும் உள்ளது’’ என்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட் அமைந்துள்ள அண்ணநகர் காவல் மாவட்டத்தில் உள்ள போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாரின் மனதில் பீதி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கோயம்பேடு மார்க்கெட் பகுதி வியாபாரிகள், தொழிலாளர்கள், போலீஸாருக்கு கொரோனா பரிசோதனை நடந்துவருகிறது. சென்னையிலும் தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு