Published:Updated:

`அன்று பாபுசிங்; இன்று கௌசரண்' - 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தைச் சந்தித்த சத்தீஸ்கர் விவசாயி

கௌசரண்
கௌசரண்

பெரம்பலூரில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்த சத்தீஸ்கர் விவசாயி கௌசரண் என்பவரை மீட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்பத்தோடு சேர்த்துள்ளார் மாநில குற்ற ஆவண காப்பக போலீஸ் இன்ஸ்பெக்டர் தாஹீரா.

சென்னையில் செயல்படும் மாநில குற்றப்பிரிவு போலீஸாரின் தீவிர முயற்சியால் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அவர், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் வேலா கருணை இல்லத்தில் கடந்த 4 ஆண்டுகளாகத் தங்கியிருந்தார். சத்தீஸ்நகர் மாநிலத்திலிருந்து எப்படி அவர் தமிழகத்துக்கு வந்துசேர்ந்தார் என்பதை மாநில குற்றப்பிரிவின் இன்ஸ்பெக்டர் தாஹிரா நம்மிடம் விவரித்தார்.

கௌசரணின் குடும்பத்தினருடன் போலீஸார்
கௌசரணின் குடும்பத்தினருடன் போலீஸார்

``மாநில குற்றப்பிரிவின் ஏடிஜிபியாக இருந்த சீமா அகர்வால் ஐ.பி.எஸ் தொடங்கி வைத்த இந்த முயற்சியால் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 252 பேரை குடும்பத்தினருடன் சேர்த்துள்ளோம். தற்போதைய ஏ.டி.ஜி.பி வினித் தேவ் வான்கடே மேற்பார்வையில் இந்தப் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் ஏராளமான வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் யார் என்று விசாரித்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க சீமா அகர்வால் ஐ.பி.எஸ் நடவடிக்கை எடுத்தார். அதன்படி காப்பகங்களில் உள்ள வடமாநிலத்தவரின் விவரங்களைச் சேகரித்தோம். அதற்கு காப்பகங்களை நடத்துபவர்களும் மாநில குற்றப்பிரிவு போலீஸாருக்கு உறுதுணையாக இருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் காப்பகத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 4 ஆண்டுகளாகத் தங்கியிருப்பதாக மாநில குற்றப்பிரிவு ஆவண காப்பகத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த நபர் குறித்த விவரங்களைச் சேகரித்தோம். அவரின் பெயர் கௌசரண் (65), கோகாடி கிராமம், பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலம் என்று தெரியவந்தது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலம் கோட்டா காவல் நிலைய போலீஸாருடன் பேசி, கௌசரண் குறித்த தகவல்களை விசாரித்தோம். விசாரணையில் கௌசரணின் உறவினர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தன.

இன்ஸ்பெக்டர் தாஹீரா
இன்ஸ்பெக்டர் தாஹீரா

கௌசரணின் சகோதரர்கள் அஜிராம், ராம்குமார் ஆகியோர் எங்களுடன் இந்தியில் பேசினார்கள். அவர்களிடம் கௌசரண் உயிரோடு இருக்கும் தகவலைக் கூறியதும் சந்தோஷமடைந்தனர். அதோடு இன்னொரு உண்மையையும் அவர்கள் கூறினர். போலீஸாரிடம் கௌசரணின் சகோதரர்கள் கூறுகையில், `அவர் எங்களுடைய அண்ணன்தான். குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டைவிட்டுச் சென்றார். 30 ஆண்டுகளாக அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. அதனால் அவர் உயிரோடு இருந்தால் என்றாவது ஒருநாள் வீட்டுக்கு வருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம்.

நீங்கள் சந்தோஷமான தகவலைக் கூறுகிறீர்கள். ஆனால், அவரின் மனைவி, இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார். எங்களுக்கும் திருமணமாகிவிட்டது. தமிழகத்தில் கௌசரண் ஏதாவது குற்ற வழக்கில் சிக்கியுள்ளாரா என்ற சந்தேகம் இருக்கிறது. மேலும், சத்தீஸ்கரிலிருந்து தமிழகத்துக்கு நாங்கள் வந்தால் எங்களுக்கு தமிழ் தெரியாது. போதிய கல்வியறிவும் எங்களுக்கு இல்லை. நாங்கள் விவசாய வேலை, கூலித் தொழிலாளிகள்' என்று கூறியிருக்கின்றனர்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணனைச் சந்தித்த கௌசரணின் தம்பிகள் இருவரும் கட்டிப்பிடித்து அழுதனர். அப்போது ஒரு மணி நேரத்துக்கு மேல், தங்களின் கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்தனர். இதையடுத்து கௌசரணை சத்தீஸ்கருக்கு ரயில் மூலம் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, `என்னுடைய செல்போன் நம்பரை அவர்களிடம் கொடுத்து எந்த உதவி என்றாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்' என்று கூறினேன். அதனால் நம்பிக்கையோடு சத்தீஸ்கரிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் என்னைச் சந்தித்து பேசினர். பின்னர், பெரம்பலூர் காப்பகத்துக்குச் சென்று கௌசரணைச் சந்தித்தனர். அதற்கு அந்த மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் ஐ.பி.எஸ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணனைச் சந்தித்த கௌசரணின் தம்பிகள் இருவரும் கட்டிப்பிடித்து அழுதனர். அப்போது ஒரு மணி நேரத்துக்கு மேல், தங்களின் கடந்த கால நினைவுகளை பகிர்ந்தனர். இதையடுத்து கௌசரணை சத்தீஸ்கருக்கு ரயில் மூலம் அழைத்துச் சென்றனர். அப்போது கௌசரணும் அவரின் தம்பிகளும் தமிழகக் காவல்துறையை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம். `அண்ணனை எங்களிடம் சேர்த்து வைத்த உங்களுக்கெல்லாம் நன்றி' என்று பிரியாவிடைக் கொடுத்துச் சென்றனர் என்றார்.

`இந்த நாள் எனக்கு மறக்கமுடியாத நாள்!'- திருமண விழாவில் சூசகமாகப் பேசிய உதயநிதி

வடமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கௌசரண் எப்படி வந்தார் என்று பெரம்பலூர் மாவட்டம், தோரமங்கலத்தில் செயல்படும் வேலா கருணை இல்ல நிர்வாகி அருணிடம் பேசினோம். ``கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சாலையில் சுற்றித்திரிந்த கௌசரணை எங்கள் காப்பகத்தில் சேர்த்தனர். அப்போது அவரை பாபுசிங் என்று அழைத்தோம். மனநல பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. அப்போதுதான் தன்னுடைய பெயரை கௌசரண் என்றும், தன்னுடைய முகவரியையும் எங்களிடம் கூறினார். இதையடுத்து மாநில குற்றப்பிரிவு போலீஸார் மூலம் கௌசரணின் உறவினர்களைக் கண்டுபிடித்தோம். 4 ஆண்டுகளுக்கு முன் கௌசரண், எங்கு இருந்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அதுகுறித்து கௌசரணுக்கும் சொல்லத் தெரியவில்லை.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசரணை அவரின் தம்பிகள் மற்றும் உறவினர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது கௌசரணை ஒவ்வொருவரும் கட்டிப்பிடித்து இந்தியில் கண்ணீர்மல்க நலம் விசாரித்தனர். எங்கள் காப்பகத்தில் தங்கியிருந்த 4 ஆண்டுகளில் கௌசரண் தமிழில் நன்றாக பேசக் கற்றுக்கொண்டார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு