Published:Updated:

சென்னை:`திறக்கப்படாத கதவுகள்; குப்பையில் நகைகள், பணம்!' - பிளாட்பார மூதாட்டிகளின் சோகம்

மூதாட்டிகளின் வீட்டிலிருந்த குப்பை
மூதாட்டிகளின் வீட்டிலிருந்த குப்பை

``வீட்டைத் திறந்ததும் தூர்நாற்றம் வீசியது. வீடு முழுவதும் மூதாட்டிகள் சேர்த்துவைத்திருந்த குப்பைகளைச் சுத்தம் செய்தபோது நகை, பணம், தங்க நகைகள், வெள்ளி ஆகியவை இருந்தன’’ என்று தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கூறினார்.

சென்னை, ஓட்டேரி சத்யவாணி முத்துநகர், பி பிளாக், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மூன்று மாடிகளைக் கொண்டது. இதில் கீழ்தளத்திலுள்ள வீட்டு எண் 34, சில ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்தது. அந்த வீட்டுக்குள்ளிருந்து தூர்நாற்றம் வீசும். பாம்பு போன்றவை அடிக்கடி எட்டிப்பார்க்கும். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்களான முன்று மூதாட்டிகள் ராஜேஸ்வரி (65), விஜயலட்சுமி (61), மகேஷ்வரி (57) ஆகியோர் பிளாட்பாரத்தில் தங்கியிருந்தனர். கடந்த மாதம் மகேஷ்வரி பிளாட்பாரத்திலேயேஉயிரிழந்தார். கொரோனா காரணமாக அவரின் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை.

மகேஷ்வரியை அடக்கம் செய்த இடத்தில் இறுதிஅஞ்சலி
மகேஷ்வரியை அடக்கம் செய்த இடத்தில் இறுதிஅஞ்சலி

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, பிளாட்பாரத்தில் சகோதரியின் சடலத்தோடு அழுதுகொண்டிந்த மூதாட்டிகளைப் பார்த்தார். உடனே போலீஸ் வாகனத்தை நிறுத்திய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களிடம் விசாரித்தார். பின்னர், தானே முன்னின்று போலீஸார், மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியோடு மகேஷ்வரியின் சடலத்தை அடக்கம் செய்தார். அதன் பிறகு மூதாட்டிகள் ராஜேஸ்வரி, விஜயலட்சுமியிடம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார்.

அப்போது இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, `உங்களுக்கு வீடு எதுவும் இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு மூதாட்டி ராஜேஸ்வரி, `வீடு இருக்கு. ஆனா அதைத் திறக்க முடியாது’ என்று பதிலளித்திருக்கிறார். உடனே ராஜேஸ்வரி, `அப்படின்னா உங்க வீட்டை யாராவது அபகரிச்சுவெச்சிருக்காங்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு மூதாட்டிகள், `இல்லை மேடம், நாங்க சேர்த்துவெச்சிருக்கும் குப்பைகளை அங்கேவெச்சிருக்கோம். வீடு முழுக்க குப்பை இருக்கறதால, எங்களால அங்கே தங்க முடியலை. அதனாலதான் பிளாட்பாரத்துல இருக்கோம்’ என்று கூறியிருக்கின்றனர்.

குப்பை சேகரிப்பில் இன்ஸ்பெக்டர்
குப்பை சேகரிப்பில் இன்ஸ்பெக்டர்

இதையடுத்து மூதாட்டிகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார் ராஜேஸ்வரி. `இதுதான் எங்க வீடு’ என்று மூதாட்டிகள் கூறியதும், வீட்டின் பூட்டை அவர்கள் முன்னிலையிலேயே இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸ் டீம் திறந்தது. வீடு முழுவதும் குப்பைகள். அதிலிருந்து கடுமையான தூர்நாற்றம் வந்தது. அதோடு பாம்பு, பல்லி, பூரான் போன்றவையும் அங்கு இருந்தன. அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளோடு அங்கு வந்து, வீட்டுக்குள்ளிருந்த குப்பைகளை வெளியில் எடுத்து வந்தனர்.

சென்னை: `சினிமா ஆசை; 14 ஆண்டுகள் பிளாட்பார வாழ்க்கை' - பட்டதாரி பெண்ணை மீட்ட போலீஸார்

குப்பைகளை எடுத்தபோது சில்லறைக் காசுகள் இருப்பதை போலீஸாரும் மாநகராட்சி ஊழியர்களும் பார்த்தனர். அது குறித்து மூதாட்டிகளிடம் கேட்டபோது, `இதெல்லாம் நாங்க சேத்துவெச்சிருக்குற காசு’ என்று கூறியிருக்கின்றனர். பின்னர், மூதாட்டிகளிடம் கேட்டபோது வீட்டுக்குள் தங்க நகைகள், பணம், வெள்ளி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்டு உஷாரான போலீஸாரும் மாநகராட்சி ஊழியர்களும் குப்பைகளைக் கவனமாக அகற்றத் தொடங்கினர். அப்போது மூதாட்டிகள் கூறியதுபோல, சில தங்க நகைகள் குப்பைகளோடு சிதறிக் கிடந்திருக்கின்றன.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

மேலும், குப்பைகளோடு சின்னச் சின்ன துணி மூட்டைகளாக செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளும் கிடந்தன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும் சிதறிக்கிடந்தன. சில்லறைக் காசுகளைச் சேகரித்த போலீஸார் அதை நான்கு குடங்களில் போட்டு வைத்தனர். ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்தபோது, ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தன. செல்லாத ரூபாய் நோட்டுகளும் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டியிருந்தன. அவற்றை பத்திரமாக போலீஸார் எடுத்துவைத்துள்ளனர். வீட்டில் கிடந்த மூக்குத்தி, செயின், கம்மல், மோதிரம் ஆகியவற்றை போலீஸார் நகைக்கடையில் கொடுத்து சோதித்து பார்த்தபோது அவை தங்க நகைகள் என்றும், மொத்தம் ஏழு சவரன் இருப்பதும் தெரியவந்தது.

கடந்த இரண்டு தினங்களாக போலீஸாரும், மாநகராட்சி ஊழியர்களும், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்களும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வீட்டைச் சுத்தமாக்கியுள்ளனர். தற்போது வீட்டுக்கு பெயின்ட் அடிக்கும் பணி நடந்துவருகிறது. பெயின்ட்டின் நிறத்தை விஜயலட்சுமியே தேர்வு செய்தார்.`வீட்டுக்கு நீல நிறமும் வெள்ளை நிறமும் அடிங்க மேடம்...’ என்று இன்ஸ்பெக்டரிடம் விஜயலட்சுமி கூறினார். அதற்கு `சரி’ என்று இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கூறியுள்ளார். வீட்டிலிருந்து மூன்று டன் குப்பை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

மூதாட்டியுடன் இன்ஸ்பெக்டர்
மூதாட்டியுடன் இன்ஸ்பெக்டர்

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் கேட்டதற்கு, ``வீடு இல்லாததால் பிளாட்பாரத்தில் மூதாட்டிகள் தங்கியிருப்பதாகக் கருதினேன். பிறகு விசாரித்தபோதுதான் அவர்களுக்கு வீடு இருப்பது தெரியவந்தது. மூதாட்டிகளுக்குத் திருமணமாகவில்லை. குப்பைகளைச் சேகரித்து, அவற்றை விற்று வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒரு ஹால், ஒரு பெட் ரூம், கிச்சன், கழிவறை வசதிகள்கொண்ட வீட்டை, குப்பைகளை வைக்கப் பயன்படுத்திய இந்த மூதாட்டிகள், ஒருகட்டத்தில் வீட்டில் தங்காமல் பிளாட்பாரத்திலேயே நிரந்தரமாகக் குடியேறியுள்ளனர். வீட்டுக்குள், தாங்கள் சேர்த்த பணம், தங்க நகைகள், வெள்ளி ஆகியவற்றை வைத்துள்ளனர். முதுமை, மனநல பாதிப்பு ஆகியவை காரணமாக கடந்தகால வாழ்க்கையை இவர்கள் மறந்துவிட்டனர். தற்போது மூதாட்டிகள் ராஜேஸ்வரி, விஜயலட்சுமியை மீண்டும் அந்த வீட்டில் தங்க ஏற்பாடு செய்துள்ளேன்" என்றார்.

மூதாட்டி விஜயலட்சுமியிடம் பேசினோம். ``நாங்க மூணு சகோதரிகள். மூத்தவ ராஜேஸ்வரி, ரெண்டாவது நான், மூணாவது மகேஷ்வரி. அவள் இறந்துட்டா. எங்களுக்கு திருமணமாகலை. அப்பா வி.ஆர்.லோகநாதன். மவுன்ட் ரோட்டுல இருக்குற கம்பெனியில போர்மேனா வேலை பார்த்தார். அம்மா டெல்லிபாய். அம்மாவும் அப்பாவும் இறந்த பிறகு நாங்க மூணு பேரும் சேர்ந்து வாழ்ந்தோம். எங்க குடும்பம் மிடில் கிளாஸ். அப்பா, அம்மா இறந்த பிறகு எங்க வாழ்க்கையே திசைமாறிடுச்சு. அடுத்த வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம பிச்சையெடுத்து வாழ்ந்தோம்.

பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! -இறுதிச்சடங்கில் கலங்கவைத்த பெண் இன்ஸ்பெக்டர்
சேலை வழங்கும் இன்ஸ்பெக்டர்
சேலை வழங்கும் இன்ஸ்பெக்டர்

மூணு பேரும் சேர்ந்து குப்பைகளைப் பொறுக்கி, பிழைப்பு நடத்திக்கிட்டிருந்தோம். எங்களுக்கு ஆதரவுன்னு யாருமில்லை. அதனாலதான் வீடு இருந்தும் பிளாட்பாரத்துல தங்கியிருந்தோம். இப்போ இந்த இன்ஸ்பெக்டர் மேடம்தான் எங்களுக்குப் பல வகையில உதவியா இருக்குறாங்க" என்றார்.

தலைமைச் செயலக காலனி காவல் நிலைய எஸ்.ஐ தங்கமாதவன், காவலர்கள் குமரன், ஜலஜாகுமாரி, செந்தில்குமரன், குமரன், பிரபாகரன், சிலம்பரசன் , மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் மூதாட்டிகள் வீட்டிலிருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் இந்தச் சமூக சேவைக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு