Published:Updated:

சென்னை: `சினிமா ஆசை; 14 ஆண்டுகள் பிளாட்பார வாழ்க்கை' - பட்டதாரி பெண்ணை மீட்ட போலீஸார்

பட்டதாரி பெண் பாரதி
பட்டதாரி பெண் பாரதி

பாலிவுட் ஹீரோவைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்த பட்டதாரி பெண், வாழ்க்கை திசைமாறியது. குப்பைத் தொட்டியின் அருகே அவளை மீட்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி டீம், மாநகராட்சி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என்பதால் சென்னை மாநகரம் வெளிச்சோடி காணப்பட்டது. சென்னை போலீஸார் ரோந்து பணியிலும் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனர். சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது குப்பைத் தொட்டியின் அருகே கிழிந்த உடையணிந்த பெண் ஒருவவர் படுத்திருந்ததைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ஜீப்பை டிரைவர் குமரனிடம் நிறுத்தக் கூறினார்.

காவல் நிலையத்தில் பாரதி
காவல் நிலையத்தில் பாரதி

பின்னர் குப்பைத் தொட்டியின் அருகே சென்ற இன்ஸ்பெக்டர், அங்கு படுத்திருந்த பெண்ணிடம், `யாரும்மா நீ’ என்று கேட்டார். அதற்கு இன்ஸ்பெக்டரை ஏற இறங்கப் பார்த்த இளம்பெண், `நீங்கள் யாரு?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு, `நான் போலீஸ் இன்ஸ்பெக்டர்’ என்று கூறியிருக்கிறார் ராஜேஸ்வரி.

உடனே, `நீங்க போலீஸ் என்றால், எனக்கு டீ வாங்கித் தருவீங்களா?’ என்று அந்தப் பெண் பரிதாபமாகக் கேட்டுள்ளார். உடனே வாங்கித் தருகிறேன். `உன் பெயர் என்ன?’ என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும், மை நேமிஸ் பாரதி என்று ஆங்கிலத்தில் அழகாகக் கூறியிருக்கிறார் அந்தப் பெண். `குட்... உன்னுடைய வீடு எங்கு இருக்கிறது, நீ ஏன் இங்கு படுத்திருக்கிறாய்?’ என்று இன்ஸ்பெக்டர் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க, `எனக்குன்ணு யாருமில்ல மேடம். நான் ஒரு அநாதை’ என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார். அதற்குள், டிரைவர் குமரன் வாங்கிவந்த டீயை பாரதி வாங்கிக் குடித்திருக்கிறார்.

அந்தப் பெண்ணிடம் பேசிய கொஞ்ச நேரத்திலேயே இன்ஸ்பெக்டருக்கு அவரின் நிலைமை புரிந்தது. உடனே பெண் காவலர்கள் உதவியோடு அந்தப் பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தார் இன்ஸ்பெக்டர். பின்னர் அந்தப் பெண்ணுக்கு உணவு, வாங்கி கொடுத்த இன்ஸ்பெக்டர், அவரை குளிக்கவும் ஏற்பாடு செய்தார். அதோடு புதிய சுடிதார்களையும் வாங்கிக் கொடுத்தனர் போலீஸார். குளித்து புதிய டிரஸை அணிந்துகொண்டு வந்த பாரதியிடம், அவரது பின்னணி குறித்து போலீஸார் விசாரித்திருக்கிறார்கள்.

பாரதியிடம் விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
பாரதியிடம் விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

அதற்கு அந்தப் பெண், ``எங்க வீட்ல மூணு பொண்ணுங்க. அப்பா சென்னை சாஸ்திரி பவனில் வேலைபார்த்தார். நான் பி.எஸ்ஸி கெமிஸ்டரி படித்துள்ளேன். எனக்கு பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஒருவர் மீது காதல். அவரைத்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால் எனக்கு பார்த்த மார்ப்பிள்ளைகளை எல்லாம் வேண்டாம் என்று கூறி தட்டிக் கழித்தேன். என்னுடைய சகோதரி, இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரைக் காதலித்தார். அவருக்கு நிச்சயம் நடந்ததும் மனவேதனையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனவேதனையில் அப்பாவும் இறந்துவிட்டார். சென்னையில் பல இடங்களில் குடியிருந்தோம். அப்பா உயிரோடு இருக்கும்போதே என்னுடைய இன்னொரு சகோதரியை சென்னையில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். என்னுடைய அத்தை வீடு புளியந்தோப்பில் உள்ளது. 2006-ம் ஆண்டு முதல் நான் வீட்டைவிட்டு வெளியேறி இப்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எல்லோரும் என்னை பைத்தியம் என்று கூறுகிறார்கள். மேடம் நான் பைத்தியமா?’ என்று படபட வென பேசி முடித்திருக்கிறார்.

பாரதியிடம், நீ எங்கு செல்ல விரும்புகிறாய் என்று இன்ஸ்பெக்டர் கேட்கவே,`என்னை இப்படியே விட்டுவிடுங்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார். `அப்படியெல்லாம் உன்னை விட முடியாது. உனக்கு சின்ன வயசு’ என்று கூறிய இன்ஸ்பெக்டர் பாரதியின் அத்தைவீடு சகோதரி விடு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறார். பின்னர் பாரதியை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அத்தை வீட்டிற்கும் சகோதரியின் வீட்டிற்கும் அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு பாரதியை ஏற்றுக்கொள்ள யாருக்கும் மனமில்லை. இதையடுத்து பாரதியை அழைத்துக் கொண்டு மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி... யார் இவர்? ஆச்சர்ய பின்னணி!
பாரதியுடன் போலீஸ் டீம்
பாரதியுடன் போலீஸ் டீம்

அதன் பிறகு தனியார் காப்பகங்களில் பாரதியைச் சேர்க்கலாம் என போலீஸார் முடிவு செய்தனர். தனியார் காப்பகங்களில், கொரோனா காரணமாக யாரையும் நாங்கள் சேர்ப்பதில்லை எனப் பதிலளித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தலைமைக் காவலர் குமரன், காவலர்கள் ஜான்மேனகா, சத்யா, பினோஜான் ஆகியோர் பல்வேறு காப்பகங்களில் பாரதியை சேர்த்துவிட முயற்சி செய்திருக்கிறார். ஒருவழியாக சென்னை மாநகராட்சி காப்பகத்தில் பாரதியை சேர்த்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. உடனே, பாரதி அங்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகு பாரதிக்குத் தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு