Published:Updated:

`கொரோனாவால் உயிரிழந்த சென்னை இன்ஸ்பெக்டர்!' -முதல் மரணத்தால் அதிர்ச்சியில் தமிழகக் காவல்துறை

கொரோனா
கொரோனா

சென்னையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரின் உயிர்பிரிந்தது.

கொரோனா

கொரோனா வைரஸ் உலகத்தையும் இந்தியாவையும் அச்சுறுத்திவருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மட்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் பாதிப்பு உள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் முன்களப்பணியாளர்களும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தலைமைச் செவிலியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அரசு டாக்டர்கள், தனியார் டாக்டர்கள் எனக் கொரோனா உயிரிழப்பு தொடர்கதையாகிவருகிறது.

தமிழகக் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் குணமடைந்த காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

கோயம்பேட்டிலிருந்து போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பரவிய கொரோனா? - கலக்கத்தில் காவல்துறை #Corona

சென்னை இன்ஸ்பெக்டர்

இந்தநிலையில் சென்னையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவருக்குக் கடந்த 5-ம் தேதி முதல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. கொரோனா முன்தடுப்புப் பணிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்ட அந்த இன்ஸ்பெக்டருக்குக் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

சிகிச்சையிலிருந்த இன்ஸ்பெக்டரின் உடல்நலம் மோசமானது. அதனால் அவருக்கு விலை உயர்ந்த தடுப்பு ஊசிகளைப் போட டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். அதன் விலை அதிகம் என்பதால் இன்ஸ்பெக்டர் குடும்பத்தினரால் தடுப்பு ஊசிகளை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இந்தத் தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்குத் தெரியவந்ததும் உடனடியாக 2.25 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு ஊசிகளை வாங்கிக் கொடுத்தார்.

அந்த மருந்தை செலுத்திய பிறகும் இன்ஸ்பெக்டரின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இன்று பிற்பகலில் இன்ஸ்பெக்டரின் உடல்நலம் மிகவும் மோசமானது. மூச்சுவிடுவதில் அவர் அதிகம் சிரமப்பட்டுள்ளார்.

முதல் உயிரிழப்பு

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்ஸ்பெக்டர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்தத் தகவல் தெரிந்ததும் இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர், உறவினர்கள், அவருடன் பணியாற்றியவர்கள் கதறி அழுதனர். உயரதிகாரிகளும் கண்கலங்கினர். பின்னர் முழுப் பாதுகாப்புடன் இன்ஸ்பெக்டரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகக் காவல்துறையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இதுகுறித்து இன்ஸ்பெக்டரின் நெருங்கிய நண்பரான இன்னொரு ஆய்வாளரிடம் பேசினோம். ``தமிழகக் காவல்துறையில் 2000-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக அவர் பணிக்குச் சேர்ந்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வடபழனி காவல் குடியிருப்பில் குடும்பத்தினருடன் அவர் குடியிருந்துவந்தார்.

அவருக்கு 13 வயதில் மகளும் 9 வயதில் மகனும் உள்ளனர். இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்ற அவர், சென்னை நீலாங்கரை, கே.கே.நகர், எம்.கே.பி.நகர், மாம்பலம் காவல் நிலையங்களில் பணியாற்றினார். வழக்குகளை துப்பு துலக்குவதில் மிகவும் திறமையானவர். எம்.கே.பி.நகரில் அவர் பணியாற்றிய காலகட்டத்தில் கொலைச் சம்பவங்களே நடக்கவில்லை. மிகுந்த மனிதநேயம் மிக்கவர்.

இன்ஸ்பெக்டரின் தந்தையும் காவல்துறையில் பணியாற்றியவர். 47 வயதில் எங்களை விட்டு சென்றுவிட்டார். தமிழகக் காவல்துறையைச் சேர்ந்தவர்களைக் கவலையில் ஆழ்த்தும்விதமாக கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பாக சென்னை இன்ஸ்பெக்டரை இழந்துள்ளோம் "என்றார்.

`முதலில் அலர்ட் செய்த ஹீரோ; கண்டித்த போலீஸ்!’ - கொரோனா எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணம்

இதில் பெயரைக் குறிப்பிட விரும்பாத சிலர், ``சுகாதாரப் பணியாளர்கள் செய்யக்கூடிய வேலையைக் காவல்துறையினர் செய்துவரும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் ட்ராவல் ஹிஸ்ட்ரி குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். மேலும், முகக்கவசம், போக்குவரத்து விதிமுறைகள் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சில உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.

corona virus
corona virus

அதனால் அடிமட்டக் காவலர்கள் தகுந்த முன்பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் காவல்துறையில் அமைச்சுப் பணியாளர்கள் இடமாற்றம், காவல்துறையினர் டிரான்ஸ்பர் போன்றவற்றால் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள், அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் நலனிலும் அரசும் அதிகாரிகளும் அக்கறை செலுத்த வேண்டும்" என்றனர்.

இன்ஸ்பெக்டரின் மறைவுக்கு அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தகுதியின் அடிப்படையில் அவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு