Published:Updated:

சென்னை:`கவலைப்படாதீங்க, நாங்க இருக்கோம்'- சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய இன்ஸ்பெக்டர், காவலர்

சிறுமி சுவிஷ்கா
சிறுமி சுவிஷ்கா

உயிருக்கு போராடிய 5 வயது சிறுமியின் சிகிச்சைக்கு சென்னை இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் ஆகியோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் எலக்ட்ரானிக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் கவிஷ்கா (5). இவருக்குப் பிறக்கும்போதே இருதயத்தில் பிரச்னை. அதனால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு கவிஷ்காவுக்கு ஆன்ஜியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும் அவருக்கு ஆன்ஜியோகிராம் செய்யவேண்டும் என டாக்டர்கள் கூறினர். அதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனையில் கூறினர். கையில் பணம் இல்லாததால் சிகிச்சையை தள்ளிப்போட்டார், கார்த்திக்.

இன்ஸ்பெக்டர் தங்கராஜ்
இன்ஸ்பெக்டர் தங்கராஜ்

கார்த்திக்கின் வீட்டின் அருகில் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் செந்தில் குடியிருந்தார். இவர் வேலைக்குச் செல்லும்போதும் வரும்போதும் கவிஷ்கா பார்த்து சிரிப்பார். அப்போதுதான் கவிஷ்காவின் உடல்நலம் குறித்த தகவல் செந்திலுக்கு தெரியவந்தது. அதைக்கேட்டு மனவேதனையடைந்த செந்தில், `கவலைப்படாதீங்க கார்த்திக், கடவுள் இருக்கார், பணத்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன், கவிஷ்காவுக்கு டிரீட்மென்ட் கொடுத்துவிடலாம்' என்று ஆறுதல் கூறினார். அதோடுவிடாமல் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பணத்துக்கு ஏற்பாடு செய்தார். அதை வாங்கிய கார்த்திக், கவிஷ்காவை மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆன்ஜியோகிராம் செய்தபோது கவிஷ்காவுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், ஆன்ஜியோகிராம் சிகிச்சைக்கே பணம் இல்லை, தற்போது சர்ஜரி செய்ய வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுமே என கண்கலங்கினார். `அறுவைச் சிகிச்சைக்கு 5 லட்சம் ரூபாய் தேவைப்படும்' என டாக்டர்கள் கூறினர். அப்போதும் காவலர் செந்தில், `கவலைப்படாதீங்க கார்த்திக், நான் இருக்கிறேன்' என்று கூறினார். இந்தமுறை நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் கவிஷ்கா பற்றிய விவரத்தைக் கூறினார். உடனே அவர் 45 ஆயிரம் ரூபாயை மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக செலுத்தினார். அதன்பிறகு அவரும் காவலர் செந்திலும் சேர்ந்து ஆபரேஷனுக்கு தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

தலைமைக் காவலர் செந்தில்
தலைமைக் காவலர் செந்தில்
கரூர்: `பழ மரத்தால் கொரோனா பரவுது!' - கோழிக் கடைக்காரரை எச்சரித்த ஆணையர்

இதையடுத்து கவிஷ்காவுக்கு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். வீடு திரும்பிய கவிஷ்கா, இன்ஸ்பெக்டருக்கும் தலைமைக் காவலருக்கும் தன்னுடைய மழலை மொழியில் நன்றி கூறினார். அதைக்கேட்ட இருவருக்கும் கண்களும் கலங்கின. இவர்கள் இருவரின் மனிதநேய செயலுக்கு சக காவல்துறையினர் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் பேசினோம். ``கவிஷ்காவுக்கு மருத்துவ உதவி தேவை என்ற தகவல் கடந்த 3 மாதங்களுக்கு முன் எங்களுக்கு தெரியவந்தது. உடனே ஆஞ்ஜியோகிராம் செய்ய பணஉதவி செய்தோம். பின்னர் chim என்ற அறக்கட்டளை, முதல்வர் காப்பீடு திட்டம் மற்றும் காவலர்களின் பங்களிப்பு மூலம் அறுவை சிகிச்சைக்கு பணஉதவி செய்தோம்" என்றார்.

இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தலைமைக் காவலர் செந்தில் போன்றவர்களும் தமிழக காவல் துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு