Published:Updated:

`போன் செய்தால் டோர் டெலிவரி..!' - ஊரடங்கில் தேடிச் சென்று உணவு கொடுக்கும் இன்ஸ்பெக்டர்

உணவு வழங்கும் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்
உணவு வழங்கும் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு வீடு தேடிச் சென்று உணவு வழங்கும் பணியை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் டீம் செய்துவருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அன்றாட தினக்கூலிகள் வருவாய் இல்லாமல் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அதோடு மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

உணவு வழங்கும் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்
உணவு வழங்கும் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்
`சிரமத்தைக் கடந்து உதவி செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது!" - கொரோனா பாதிப்பில் மிளிர்ந்த உள்ளங்கள்

இதுகுறித்து தகவலறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் எஸ்.ஐ-க்கள் பெருமாள்சாமி, சுதாகர், வேல்சாமி, தலைமைக் காவலர் துரைராஜ், போலீஸார் தினந்தோறும் உணவுகளைத் தயாரித்து விநியோகித்து வருகின்றனர். இதற்காகக் காவல் நிலையத்தில் தினமும் 40 கிலோ அரிசியில் கலவை சாதம், சாதம், சாம்பார், பொரியல் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. பின்னர் அதை ரோந்து வாகனத்தில் ஏற்றிக் கொள்ளும் போலீஸார், ஏழைகளுக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் விநியோகித்து வருகின்றனர்.

இதற்காகக் காவல் நிலையத்தில் ஒரு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில், `கொரோனா வைரஸ் பரவாமல் தவிர்க்க தற்போது தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள், வேலையில்லாமல் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மதுரவாயல் காவல் நிலையத்தில் தயார் செய்து வழங்கப்படுகிறது. உணவுப் பொட்டலங்கள் வேண்டுவோர் 9498100119, 044-2352766 என்ற காவல் நிலைய எண்களுக்கு தொடர்பு கொண்டால் தங்கியிருக்கும் இடத்திற்கே நேரில் வந்து உடனடியாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

`திருடத்தான் போனேன்...ஆனால்!’ - பாலியல் வழக்கில் போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை இளைஞர்
உணவு வழங்கும் போலீஸார்
உணவு வழங்கும் போலீஸார்

இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் கூறுகையில், ``144 தடை உத்தரவின்போது, பலர் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்காகத்தான் தினமும் உணவு வழங்க முடிவு செய்தோம். சிலரின் உதவி மற்றும் காவலர்களின் பங்களிப்போடு தினமும் 40 கிலோ அரிசியில் உணவு தயாரிக்கப்படுகிறது. அதை ரோந்து வாகனங்கள் மூலம் சப்ளை செய்கிறோம். மேலும், உணவு தேவைப்படுவோர் பலர் காவல் நிலைய நம்பரில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்கின்றனர். அவர்களின் பெயர்கள், முகவரி, செல்போன் நம்பர்களை வாங்கிக்கொண்டு சரியான நேரத்துக்கு உணவு விநியோகித்து வருகிறோம். வெளிமாநில தொழிலாளர்கள், தங்களின் மொழியில் நன்றி சொல்கின்றனர். காவல்துறை பணி என்பது சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதும் மட்டுமல்ல, மக்கள் சேவை செய்வதும்தான்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு