Published:Updated:

` நம்மில் ஒருவருக்கு வந்துவிட்டால், அவ்வளவுதான்!' - காவல்நிலையங்களுக்கு அலர்ட் கொடுத்த ஜே.சி

மாஸ்க் அணிந்து பணியாற்றும் போலீஸ்
மாஸ்க் அணிந்து பணியாற்றும் போலீஸ்

``கொரோனா பாதுகாப்பு பணியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் காவலர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழு ஓய்வு கொடுங்கள்" என்று சென்னை போலீஸ் இணை கமிஷனர் சுதாகர் கூறியுள்ளார்.

சென்னை இணை கமிஷனர் சுதாகர், வாக்கி டாக்கியில் காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``பாதுகாப்பு பணியில் குறைந்தளவே காவலர்களைப் பணியமர்த்துங்கள். நிறைய பேருக்கு ஓய்வு கொடுங்கள். கிழக்கு மண்டலத்தில் உள்ள காவல் நிலையங்கள் வாரியாக ஒரு பட்டியலை அனுப்புங்க. அதில் எவ்வளவு காவலர்கள் உள்ளனர், எத்தனை ரோந்து வாகனங்கள் உள்ளன என்ற விவரங்களை அனுப்புங்கள். எவ்வளவு பயன்படுத்தப்போகிறோம் என்ற விவரத்தைத் தெரிவியுங்கள்.

லாக் டவுன் என்பதால் டிராஃபிக் இருக்காது. கூட்டம் இருக்காது. அதனால் மினிமம் போலீஸார் பணியில் இருந்தால் போதும். மற்றவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிடலாம். ஓய்வில் இருப்பவர்கள் போனில் வர வேண்டும். வேறு எங்கும் செல்லக்கூடாது.

`சிங்கப்பூர் ஆசையைத் தடுத்த கொரோனா பரவல்' - குடும்பச் சண்டையால் விபரீத முடிவெடுத்த சென்னை நர்ஸ்!

ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் டுயூட்டி போட்டு விட்டு அந்தப் பட்டியலை எங்களுக்கு அனுப்புங்க. தேவையில்லாத காவலர்கள் எண்ணிக்கையை வைத்திருக்க வேண்டாம். ஆபரேஷனில் உள்ள வாகனங்கள் விவரங்களைத் தெரிவியுங்கள். தேவையில்லாத டுயூட்டிகளை காவலர்களுக்குப் போட வேண்டாம். திருவல்லிக்கேணியில் எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. அதனால் அங்கு காவலர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம். சுழற்சி முறையில் பணியமர்த்தலாம். எந்த ஆபீஸர்களும் தொடர்ந்து 2 நாள்கள் இரவுப் பணிகளைப் பார்க்க வேண்டாம். 3 அல்லது 4 நாள்களுக்குப் பிறகுதான் இரவு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

எஸ்.ஐ-க்கள், கான்ஸ்டபிள்களுக்கு எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நைட் டுயூட்டி வரும், எவ்வளவு பேர் காவல் நிலையத்தில் பணியில் உள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தவும். தயவு செய்து யாரும் கஞ்சத்தனம் பண்ணாதீர்கள். தயவு செய்து தாராளமாகக் கொடுங்கள். எல்லோரும் ஓய்வு எடுத்து ஆரோக்கியமாக இருந்தால்தான் இந்தக் காலக்கட்டத்தைச் சமாளிக்க முடியும். நம்மில் ஒருவருக்கு வந்தால் எல்லோருக்கும் வந்துவிடும்.

`தனிமைப்படுத்தப்படாத தந்தை, மகன்' - ஈராக்கிலிருந்து சென்னை வந்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு #Corona
மாஸ்க் அணிந்து பணியாற்றும் போலீஸ்
மாஸ்க் அணிந்து பணியாற்றும் போலீஸ்

அதனால்தான் எல்லோரும் ஆரோக்கியத்தைப் பேணுங்கள். 55 வயதுக்கு மேல் இருக்கும் எல்லோருக்கும் (காவலர்களுக்கு) முழு நேர ஓய்வு கொடுத்துவிடுங்கள். அவர்கள் வீட்டில் இருக்கட்டும். தேவை என்றால் அழைத்துக் கொள்ளலாம். தேவையில்லாமல் யாரையும் கஷ்டப்படுத்தாதீர்கள். யாரெல்லாம் நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள், உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்.

எல்லோரும் மாஸ்க் அணிந்து பணியாற்ற வேண்டும். காவல் நிலையங்களுக்கு வருபவர்களுக்காக வெளியில் தண்ணீர், சோப் வைத்துவிடுங்கள். கைகளைக் கழுவி விட்டு உள்ளே வர வேண்டும். புகார் விசாரணைகளைக் குறைத்துக்கொள்ளலாம். பாதுகாப்பு முறைகளை எல்லா காவல் நிலையங்களிலும் கடைப்பிடியுங்கள். ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் டுயூட்டி குறித்த பட்டியல்களை எனக்கு அனுப்பி வையுங்கள்" என்று கூறினார்.

ஊரடங்கு நேரத்திலும், கடுமையான வைரஸ் சூழலிலும் காவலர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் நன்றாக இருந்தால்தான் மக்கள் பயமில்லாமல் இருக்க முடியும். அதனால் அவர்களுக்கும் ஓய்வு தேவை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத் தொல்லை தராமல் வீட்டிலிருந்தே இந்த வைரஸை விரட்ட வேண்டும் என உறுதிகொள்வோம்!

அடுத்த கட்டுரைக்கு