Published:Updated:

`தனிமைப்படுத்தப்படாத தந்தை, மகன்' - ஈராக்கிலிருந்து சென்னை வந்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு #Corona

போலீஸாரின் வாகனச் சோதனை
போலீஸாரின் வாகனச் சோதனை

ஈராக்கிலிருந்து சென்னை வந்த தந்தையும் மகனும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் சொந்த ஊருக்குச் சென்ற ரகசிய தகவல் கிடைத்தது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்காரணமாக மக்கள் நடமாட்டம் சாலையில் குறைந்து காணப்படுகிறது. வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்துவருகின்றனர். அவர்களின் வீடுகளில், `கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

`தயார்நிலையில் 1,183 குழுக்கள்!’ - தஞ்சையில் தீவிரமாகும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
தனிமைப்படுத்தப்பட்ட வீடு ஸ்டிக்கர்
தனிமைப்படுத்தப்பட்ட வீடு ஸ்டிக்கர்

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்த 15,298 பேர் கண்காணிப்பில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை தீவிரமாகக் கண்காணித்துவருகின்றது. அதையும் மீறி வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

அரசின் எச்சரிக்கையையும் மீறிக் கண்காணிப்பில் இருப்பவர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றித்திரிவதைப் பார்த்ததால் உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் ஈராக்கிலிருந்து 22-ம் தேதி வந்த தந்தையும் மகனும் அரசுக்குத் தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊருக்குச் சென்ற தகவல் கிடைத்தது. அதனால் அவர்கள் இருவர் மீதும் கோயம்பேடு போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

`சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள்!’ - `உள்ளே நுழையாதே’ ஸ்டிக்கர் ஒட்டும் மாநகராட்சி
வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்
வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்

இதைப் போல திருமங்கலம் போலீஸாரும் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் வெளிநாடுகளிலிருந்து வந்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.

அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் வருபவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். அதே சமயத்தில் சென்னை மக்களின் வசதிக்காகப் போக்குவரத்து கழகம் சார்பில் 200 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கூறுகையில், ``கடந்த 22.03.2020 அன்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 27 வயது வாலிபரும், அவரின் 65 வயதாகும் தந்தை ஆகிய இருவரும் சென்னை வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு தங்களின் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்குச் சென்றுள்ளனர்.

போலீஸ் சோதனை
போலீஸ் சோதனை

இதுகுறித்து தகவலறிந்ததும் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளோம். சம்பந்தப்பட்ட இருவரிடமும் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளோம். ராமநாதபுரத்தில் தங்கியிருக்கும் அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு