Published:Updated:

``என்னை மன்னிச்சிடுங்க"- காரின் அடியிலிருந்து வந்த குழந்தையின் அழுகைக் குரல்; காத்திருந்த அதிர்ச்சி

குழந்தையை ஒப்படைத்த போலீஸ்
குழந்தையை ஒப்படைத்த போலீஸ்

`என்னை மன்னிச்சிடுங்க' என்று துண்டுச் சீட்டில் கடிதம் எழுதிய தாய், தன்னுடைய குழந்தையை வெள்ளைத் துணியில் வைத்து காரின் டயரின் அருகே வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி தேவையில்லாமல் ஊரைச் சுற்றுபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதனால், சென்னை போலீஸார், ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சமயத்தில் சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கு போனில் பேசிய ஒருவர், அடையாறு, பத்மநாபன்நகர், 5-வது குறுக்குத் தெருவில் காருக்கு அடியிலிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று கூறினார்.

குழந்தையை மீட்ட போலீஸ்
குழந்தையை மீட்ட போலீஸ்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் போலீஸார் சென்றனர். காருக்கு அடியில் அழுதுகொண்டே இருந்த குழந்தையை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து, அந்தத் தெருவில் உள்ளவர்கள் குழந்தையின் பசிக்கு பால் கொடுத்தனர். அதைக் குடித்த பிறகு குழந்தை சிரித்தது. குழந்தையைச் சுற்றி வைத்திருந்த துணியில் துண்டுச் சீட்டு ஒன்று இருப்பதை போலீஸார் பார்த்தனர்.

அதில்,`என்னை மன்னிச்சிடுங்க, இந்தக் குழந்தையை என்னால் பாத்துக்க முடியல. பாத்துக்கிற அளவுக்குப் பணம் இல்லை. எனக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன். என் பிள்ளையை நல்லா பாத்துக்குங்க. என் பிள்ளையை எங்க விடுகிறதுன்னு தெரியாம இங்க விட்டுவிட்டு போறேன். பத்திரமா பாத்துக்குங்க. சர்ச் போதகர் கிட்டச் சொல்லி குழந்தையைப் பத்திரமா பாத்துக்குங்க. குழந்தை இல்லாதவங்கிட்ட கொடுத்திடுங்க. என்னை மன்னிச்சிடுங்க' என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது.

கடிதம்
கடிதம்

குழந்தை கிடந்த இடத்தின் அருகில் கிறிஸ்தவ சபை ஒன்று உள்ளது. அந்த இடம் குறித்து குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணுக்கு நன்றாக தெரிந்துள்ளது. அதனால்தான் கடிதத்தில் போதகர் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். இதற்கிடையில் போலீஸார், அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சிவப்பு நிற டாப்ஸ், கறுப்பு நிற பேன்ட் அணிந்த பெண், முகம் தெரியாதளவுக்கு அந்தப்பகுதிக்கு நடந்துவருகிறார். பின்னர் அந்தப் பெண்தான் காரின் டயரின் அருகே குழந்தையை வைத்துவிட்டு வேகமாக அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார். தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவு மூலம் குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.

நீண்ட நேரமாக அந்தக் குழந்தை பசியால் அழுதுகொண்டே இருந்துள்ளது. ஊரடங்கு காரணமாக ரோட்டிலும் தெருவிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. அதனால் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு அது குழந்தையின் அழுகைக் குரலா அல்லது பூனையில் குரலா என்று தெரியவில்லை.
போலீஸ் எஸ்.ஐ- விமலா
குழந்தையுடன் எஸ்.ஐ. விமலா
குழந்தையுடன் எஸ்.ஐ. விமலா

அடையாறு பகுதியில் அநாதையாக விடப்பட்ட 2 மாத ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட தகவல் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சாஸ்திரி நகர் இன்ஸ்பெக்டர் பலவேசம் மற்றும் போலீஸார், சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கு வந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். தற்போது குழந்தை அண்ணாநகரில் உள்ள காப்பகத்தில் நலமாக உள்ளது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் விமலாவிடம் பேசினோம். ``அடையாறு பகுதியில் 2 மாத ஆண் குழந்தையை விட்டுச் சென்ற தாய், குறித்து விசாரித்துவருகிறோம். நீண்ட நேரமாக அந்தக் குழந்தை பசியால் அழுதுகொண்டே இருந்துள்ளது. ஊரடங்கு காரணமாக ரோட்டிலும் தெருவிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. அதனால் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு அது குழந்தையின் அழுகைக் குரலா அல்லது பூனையில் குரலா என்று தெரியவில்லை. அதனால்தான் யாரும் வீட்டை விட்டு வெளியில் வந்து பார்க்காமல் இருந்துள்ளனர்.

குழந்தை
குழந்தை
`10 நிமிடத்தில் மீட்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை!' -பெற்றோரை நெகிழவைத்த சென்னை தீயணைப்பு வீரர்கள்

தொடர்ந்து குழந்தையின் அழுகைக் குரல் வந்ததால் அந்தத் தெருவைச் சேர்ந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோதுதான் காரின் டயரின் அருகில் குழந்தை இருந்ததைப் பார்த்துள்ளனர். எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் உடனடியாக குழந்தைக்குப் பால் கொடுத்தோம். அந்தக் குழந்தையைப் பார்த்த தெருவில் உள்ளவர்கள் குபேரன் என்று பெயரிட்டனர். மேலும், கொரோனா சமயத்தில் இந்தக் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளதால் கொரோனா குபேரன் என்று பெயரிட்டனர். குழந்தையின் தாய் யாரென்று விசாரித்துவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு