சென்னை: 2 மாதங்களுக்கு முன் கணவர் மரணம்; 2 நாள்கள் பட்டினி! - மூதாட்டிக்கு உதவிய உதவி கமிஷனர்
சென்னையில் கணவர் இறந்ததும், உறவினர்கள் உதாசீனப்படுத்திய நிலையில் ஆதரவின்றி தவித்த மூதாட்டி புவனேஸ்வரிக்கு உதவி கமிஷனர் சுரேந்திரன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சென்னை வியாசர்பாடி, சத்தியவாணி முத்து தெரு, விநாயகர் கோயில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்புலிங்கம் (70). இவரின் மனைவி புலனேஸ்வரி (60). இந்தத் தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அன்புலிங்கம் உயிரிழந்தார். அதனால், புவனேஸ்வரி ஆதரவின்றி தவித்துவந்தார். புவனேஸ்வரியின் உறவினர்கள் யாரும் உதவிகள் செய்யவில்லை. மேலும், புவனேஸ்வரி தங்கியிருந்தது வாடகை வீடு. அந்த வீட்டுக்கு வாடகை கொடுக்கக்கூட அவரிடம் பணம் இல்லை.
வறுமையில் தவித்த புவனேஸ்வரி, சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்துவந்தார். கடந்த இரண்டு தினங்களாக அவர் சாப்பிடவில்லை. அதனால் வீட்டிலேயே சோர்ந்து படுத்திருந்தார். அதை வீட்டின் உரிமையாளர் சங்கர் பார்த்து உணவு கொடுத்தார். ஏற்கெனவே புவனேஸ்வரியின்ன் குடும்பச் சூழல் நன்றாகத் தெரிந்ததால், ஒரு நாளைக்கு நாம் உணவளிக்கலாம். புவனேஸ்வரிக்கு ஆயுள் முழுவதும் நம்மால் உணவளிக்க முடியாது எனக் கருதிய சங்கர், புவனேஸ்வரியின் நிலைமை குறித்து செம்பியம் காவல் நிலையத்துக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் வேலு, புவனேஸ்வரி வீட்டுக்குச் சென்றார். புவனேஸ்வரியிடம் பேசிய இன்ஸ்பெக்டர் வேலு, அவர் குறித்த முழு விவரங்களையும் உதவி கமிஷனர் சுரேந்திரனுக்குத் தெரிவித்தார்.
உடனடியாக உதவி கமிஷனர் சுரேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெகன்நாதன், பரணி மற்றும் போலீஸார் புவனேஸ்வரியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் பேசினர். மேலும், அவருக்கு ஆறுதல் கூறினர். புவனேஸ்வரியின் உறவினர்களில் சிலருக்கு போன் செய்த போலீஸார், அவருக்கு உதவி செய்யும்படி கூறினர். ஆனால், உறவினர்களின் பேச்சிலிருந்தே புவனேஸ்வரியை சேர்த்துக்கொள்ள யாருக்கும் மனமில்லை எனத் தெரியவந்திருக்கிறது.
உடனடியாக உதவி கமிஷனர் சுரேந்திரன், காப்பகத்தில் அவரைச் சேர்க்க முடிவு செய்தார். அது தொடர்பாக புவனேஸ்வரியிடமும் பேசினார். அதற்கு அவர் சம்மதிக்க உடனடியாக காப்பகத்தில் அவரைச் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புவனேஸ்வரியை போலீஸார் காப்பகத்தில் சேர்த்திருக்கிறார்கள். அதற்கான கட்டணத்தையும் உதவி கமிஷனரே செலுத்தியிருக்கிறார். காப்பகத்தில் சேருவதற்கு முன்னர் புவனேஸ்வரிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதன் முடிவு வந்த பிறகுதான் காப்பகத்தில் உள்ளவர்கள் தங்கியிருக்கும் அறையில் புவனேஸ்வரி அனுமதிக்கப்படுவார். அதுவரை காப்பகத்திலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இது குறித்து உதவி கமிஷனர் சுரேந்திரனிடம் பேசினோம். ``அன்புலிங்கம் கொத்தனார் வேலை செய்துவந்திருக்கிறார். பின்னர், செக்யூரிட்டியாக பணியாற்றியிருக்கிறார். அன்புலிங்கம் சம்பாதிக்கும் வரை புவனேஸ்வரிக்குப் பிரச்னை இல்லை. அவர் இறந்த பிறகுதான் புவனேஸ்வரிக்கு பொருளாதாரரீதியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அவர் தனிமையில் தவித்துவந்திருக்கிறார். முதியோர் பென்ஷன் திட்டத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அவர் வாழ்ந்துவந்திருக்கிறார். நல்ல மனம் படைத்த வீட்டின் உரிமையாளர் சங்கர், புவனேஸ்வரியை நன்றாக கவனித்துவந்திருக்கிறார்.

தற்போது புவனேஸ்வரியைக் காப்பகத்தில் சேர்த்திருக்கிறோம். அவரிடமிருந்த பணம், நகைகளைப் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். புவேனஸ்வரிக்கு ஒரு மகன்போல இந்தக் கடமையை நான் செய்திருக்கிறேன்" என்றார்.
உதவி கமிஷனர் சுரேந்திரன் மற்றும் உதவிய போலீஸாருக்கு பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்தத் தகவல் கிடைத்ததும், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட போலீஸ் உயரதிகாரிகள், இந்த போலீஸ் டீமைப் பாராட்டியிருக்கிறார்கள்.