Published:Updated:

`க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு 3 வேளை இலவச உணவு!' - சென்னை நிறுவனத்தின் முயற்சி #SpreadPositivity

அலுவலகத்திலேயே சமையல் நடக்கிறது
அலுவலகத்திலேயே சமையல் நடக்கிறது

``இப்போ மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகள்ல இருக்கிற 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு கொடுத்திட்டிருக்கோம்." என்கிறார் ரஞ்சித்.

கொரோனா வைரஸ் தந்திருக்கிற நெருக்கடி நம்மில் பலருடைய ஈர மனதை வெளிக்கொணர்ந்திருக்கிறது. `மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹோம் க்வாரன்ட்டீனில் இருப்பவர்களுக்கு, வீடு தேடி வந்து மூன்று வேளையும் இலவசமாக உணவு தருகிறோம். தேவைப்படுபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்கிற வீடியோவை பார்த்தவுடன் அதற்குப் பின்னால் இருப்பவர்களிடம் பேச நினைத்தோம். அந்த வீடியோவில் இருக்கிற மொபைல் எண்ணுக்கு போன் செய்தோம். ரஞ்சித் என்பவர் பேசினார்.

ஆனந்த குமார்
ஆனந்த குமார்

``ஆமாம் மேடம், `பீப்பிள் ஹெல்ப்பிங் பீப்பிள்’னு சோஷியல் மீடியாவுல வலம் வந்துட்டிருக்கிறது நாங்க அப்லோடு செஞ்ச வீடியோதான். நாங்க எல்லாம் மடிப்பாக்கத்துல இருக்கிற அவனிகோ (avaniko) கம்பெனியில வேலைபார்க்கிறோம். கொரோனா வந்து ஹோம் க்வாரன்ட்டீன்ல இருக்கிறவங்களுக்கு இலவசமா உணவு தரணும்கிறது எங்க எம்.டி. ஆனந்த குமாரோட ஐடியா. அவர் பிசினஸ் டூர்ல இருந்தப்போ, அவரோட ஃபேமிலிக்கு கொரோனா பாசிட்டிவ்வாயிடுச்சு. பிரச்னை பெருசா இல்லாததால எல்லோரும் ஹோம் க்வாரன்ட்டீன்ல இருந்தாங்க. உடல் சோர்வு காரணமா அவங்களால சமைக்க முடியலை. வெளில இருந்துதான் வாங்கியிருக்காங்க.

அதுக்காக நிறைய செலவு ஆனதோட, கொரோனாவால வீக்கா இருந்த அவங்களுக்கு நல்ல சத்தான உணவு கிடைக்கலை. கூடவே அவங்களுக்கு ருசி எதுவும் தெரியாம, அதுக்கு ஏத்த மாதிரி உணவும் கிடைக்காம ரொம்ப அவஸ்தைப்பட்டிருக்காங்க. தன் ஃபேமிலி மாதிரி யாரும் கஷ்டப்படக்கூடாதுன்னு, கொரோனா வந்து ஹோம் க்வாரன்ட்டீன்ல இருக்கிறவங்களுக்கு மூணு வேளையும் சாப்பாடு கொடுக்கணும்னு முடிவு செஞ்சாரு.

பேக்கிங் நடக்கிறது
பேக்கிங் நடக்கிறது

கொரோனா ஏழை, பணக்காரன் பார்த்தெல்லாம் வர்றதில்லீங்களே... அதனால, கொடுக்கிற சாப்பாட்டை எல்லாருக்கும் இலவசமா தரலாம்னு முடிவு செஞ்சாரு. மே 5-ம் தேதியில இருந்து இன்னிக்கு வரைக்கும் அப்படியே செஞ்சுட்டும் வர்றார். மொதல்ல ரெண்டு வாரம் மட்டும்தான் இலவசமா உணவு தரணும்னு நினைச்சார். இப்போ, உணவுக்காக பலரும் எங்களைத் தொடர்பு கொள்றதால தொடர்ந்து செய்யலாம்னு முடிவு பண்ணிட்டார். இதுக்காக இதுவரைக்கும் அவர் யார்கிட்டேயும் டொனேஷன் எதுவும் வாங்கலை’’ என்ற ரஞ்சித் தொடர்ந்து பேசினார்.

``எங்க ஆஃபீஸ்லேயே 3 சமையல்காரங்களை வெச்சு சமைச்சுக்கிட்டிருக்கோம். அவங்களுக்கும் ஆனந்த் சார்தான் சம்பளம் கொடுக்கிறார். எங்க நிறுவனத்தோட சமூக சேவை கிளப்ல இருக்கிற நாங்க, எங்க எம்.டி.யோட சேவைக்குக் கூட இருந்து சப்போர்ட் பண்ணிட்டிருக்கிறோம்.

Spread Positivity
Spread Positivity

காலையில 7 மணிக்கு டிபன் ரெடியாகிடும்; எட்டு, எட்டரைக்குள்ள தேவைப்பட்டவங்களுக்கு கொடுத்திடுவோம். மதியம் 12 மணிக்கு லஞ்ச் ரெடியாகிடும்; ஒரு மணிக்குள்ள டெலிவரி செஞ்சிடுவோம். டின்னர் 8 மணிக்கெல்லாம் ரெடி பண்ணி, உடனே அனுப்பி வெச்சிடுவோம். எல்லாமே நல்ல ஹெல்தியான உணவுகள்தான். டன்சோ, ஸ்விகி ஆப் வெச்சிருக்கிறவங்க அதுல ஆர்டர் பண்ணிட்டா, கொடுத்தனுப்புவோம். ஆப் வசதி இல்லாத வயசானவங்களுக்கு நாங்களே நேரடியா கொண்டு போய் கொடுக்கிறோம்.

இலவச உணவு
இலவச உணவு
`தினமும் தேவைகள் அதிகமாகிட்டே இருக்கு!' - நெருக்கடிகளைக் கடந்து உதவும் உள்ளங்கள்

இப்போ மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகள்ல இருக்கிற 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு கொடுத்திட்டிருக்கோம். எங்களோட வீடியோவை முடிஞ்சளவுக்கு ஷேர் பண்ணுங்க ப்ளீஸ். எங்க பகுதிகள்ல ஹோம் க்வாரன்ட்டீன்ல இருக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும். முக்கியமா வயசானவங்களுக்கு’’ என்கிறார் ரஞ்சித்.

வாழ்த்துகள் டீம்!

அடுத்த கட்டுரைக்கு