Published:Updated:

`நானும் மாநகராட்சிப் பள்ளி மாணவன்தான்!' -அரசுப் பள்ளி தத்தெடுப்பு விழாவில் உருகிய துணை கமிஷனர்

சென்னை பட்டாளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்துள்ளது.

மாணவர்களுடன் கூடுதல் கமிஷனர் தினகரன்
மாணவர்களுடன் கூடுதல் கமிஷனர் தினகரன்

சென்னை பட்டாளத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக பள்ளிக்குச் சென்ற அவர், தலைமை ஆசிரியர் ஹெலனைச் சந்தித்து ஆலோசித்தார். பிறகு, புளியந்தோப்பு காவல் நிலையம் சார்பில் இந்தப் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.

கூடுதல் கமிஷனர் தினகரன்
கூடுதல் கமிஷனர் தினகரன்

இதுகுறித்த தகவல் காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர்களும் இந்தப் புதிய முயற்சிக்கு ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சிப் பள்ளி, புளியந்தோப்பு காவல் நிலையத்தால் சில தினங்களுக்குமுன் தத்தெடுக்கப்பட்டது. பிறகு பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணன், உதவி கமிஷனர் விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்களைப் பார்த்த கூடுதல் கமிஷனர் தினகரன், அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

விழாவில் கூடுதல் கமிஷனர் தினகரன் பேசும்போது, ``மாணவர்களாகிய நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அப்பா, அம்மா மற்றும் உறவினர்களுடன் டூவிலரில் செல்லும்போது `கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்' என்று சொல்லுங்கள். போக்குவரத்து விதிமுறைகளை மதிக்க அன்போடு கட்டளையிடுங்கள். நீங்கள் சொன்னால் கண்டிப்பாக உங்களின் அப்பா, அம்மா, உறவினர்கள் கேட்பார்கள். மாணவர்களாகிய நீங்கள் நினைத்தால் இதைக் கண்டிப்பாக செய்ய முடியும்'' என்றார்.

கூடுதல் கமிஷனர் தினகரன், விஜயகுமாரி
கூடுதல் கமிஷனர் தினகரன், விஜயகுமாரி

இணை கமிஷனர் விஜயகுமாரி பேசும்போது,``இந்தப் பருவத்தில் நன்றாக படித்தால்தான் உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். படிப்போடு ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். உங்களை நம்பிதான் நாளைய உலகம் இருக்கிறது. எனவே, நீங்கள் அனைவரும் உங்களின் கடமையைச் செய்யுங்கள். வெற்றி உங்களைத் தேடிவரும்" என்றார்.

துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணன் பேசும்போது,``நானும் உங்களைப்போல மாநகராட்சிப் பள்ளியில்தான் படித்தேன். எந்தப்பள்ளியில் படித்தாலும் நன்றாகப் படித்தால் உயர்பதவிகளுக்கு வரலாம். நீங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வர வேண்டும்" என்றார் உருக்கத்துடன்.

மாநகராட்சிப் பள்ளிக்கு புளியந்தோப்பு காவல் நிலையம் சார்பில், கழிவறைகளுக்கு 10 புதிய கதவுகள், பள்ளியின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் வர்ணம் பூசுதல், பள்ளி வளாகத்தைச் சுற்றி தடுப்பு வேலிகள், 200 மாணவ மாணவிகளுக்கு காலணிகள், 50 நாற்காலிகள், மேஜைகள், 6 மின்விசிறிகள், சுத்தமான குடிநீர் வசதி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. காவல்துறையினரின் இந்தப் பணிகளுக்கு தலைமை ஆசிரியர் ஹெலன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

மாணவ, மாணவிகளுடன் போலீஸ் அதிகாரிகள்
மாணவ, மாணவிகளுடன் போலீஸ் அதிகாரிகள்

சில மாதங்களுக்கு முன்பு திரு.வி.க.நகர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து புளியந்தோப்பு காவல் நிலையம் சார்பில் பெரியளவில் இந்த உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது. காவல்துறைப் பணியோடு சமூகப் பணிகளிலும் ஈடுபட்ட புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.