Published:Updated:

`இலவச வைஃபை; சிசிடிவி கேமரா!' - 6 மாதங்களில் புதுப்பொலிவு பெற்ற புளியந்தோப்பு காவல்நிலையம்

புளியந்தோப்பு காவல் நிலையம்
புளியந்தோப்பு காவல் நிலையம்

சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இலவச வைஃபை வசதி, காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு, சிசிடிவி கேமரா என அனைத்து வசதிகளையும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் சமூகவலைதளங்களில் கேரளாவைச் சேர்ந்த காவல் நிலையத்தின் புகைப்படங்கள் வைரலாகின. அந்தப் புகைப்படங்களைப் பார்த்தவர்கள், `இது காவல் நிலையமா அல்லது நட்சத்திர ஹோட்டலா?' என்று ஆச்சர்யமடைந்தனர்.

கேரளக் காவல்நிலையம் போல இல்லையென்றாலும் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளுடன் சென்னைப் புளியந்தோப்பு காவல்நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்தக் காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இன்ஸ்பெக்டராகப் பதவி ஏற்றார் கிருஷ்ணமூர்த்தி. பதவி ஏற்ற நாளிலிருந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறார்.

கடந்த நவம்பர் மாதத்தில் சென்னை பட்டாளத்தில் உள்ள அரசுப் பள்ளியைப் புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்து பல உதவிகளைச் செய்தது. தற்போது புளியந்தோப்புக் காவல் நிலையத்தில் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

`நானும் மாநகராட்சிப் பள்ளி மாணவன்தான்!' -அரசுப் பள்ளி தத்தெடுப்பு விழாவில் உருகிய துணை கமிஷனர்
காவலன் செயலி விழிப்புணர்வு
காவலன் செயலி விழிப்புணர்வு

காவல்நிலையத்தில் கடந்த சில தினங்களாக பெயின்டிங் வேலை நடந்தது. அதனால் காவல்நிலையம் பளீச் எனக் காணப்படுகிறது. அடுத்து காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்களின் வசதிக்காக வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தின் முன்பகுதியில் பொதுமக்கள் அமர இருக்கை வசதியும் வரவேற்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், காவல் ஆய்வாளரைச் சந்திக்க எந்தவித சிபாரிசும் தேவையில்லை என்ற வாசகம் உள்ளது. அதோடு பார்வை நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, காவல் நிலையத்துக்குள் செல்பவர்களை வரவேற்க பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வரவேற்பு அறையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 40 பூந்தொட்டிகளில் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. அதைப்பார்க்கும்போது கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கம்ப்யூட்டர் அறை வசதியும் உள்ளது.

வரவேற்பறை
வரவேற்பறை

காவல் நிலையத்தைச் சுற்றி 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் காவல் நிலையத்தின் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க முடிகிறது. புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 410 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்மூலம் புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளைக் கண்காணிக்கலாம்.

மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வலியுறுத்திவரும் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு பேனர் காவல் நிலைய முகப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இலவச வைஃபை வசதியும் காவல் நிலையத்தில் உள்ளது. `புளியந்தோப்பு காவல் நிலையம், சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருப்பதாக' போலீஸ் உயரதிகாரிகள் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு மெசேஜ்களை அனுப்பியுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, இதுவரை 206 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து தமிழகக் காவல்துறையில் ரெக்கார்டு செய்துள்ளார். மேலும், கடந்த ஆண்டில் 40 பேரை குண்டர் தடுப்புக் காவல்சட்டத்தின்கீழ் கைது செய்து மீண்டும் சென்னை மாநகரக் காவல்துறையில் அதிக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த இன்ஸ்பெக்டர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி

இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸார் கூறுகையில், ``பொங்கல் பண்டியையொட்டி காவல் நிலையத்துக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்தன. அடுத்து, காவல் நிலையத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா மூலம் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. புளியந்தோப்பு காவல் நிலைய குடியிருப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அடுத்து புளியந்தோப்பு, ஓட்டேரி, பேசின்பாலம் ஆகிய காவல் நிலையங்களில் செயல்படும் பாய்ஸ் கிளப் மாணவ, மாணவிகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்படவுள்ளன" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு