Published:Updated:

மாஸ்க் தயாரிப்பில் கைதிகள்; அலர்ட் சிறைத்துறை! - எப்படியிருக்கிறது சென்ட்ரல், கோயம்பேடு? #corona

கொரோனாவுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனாவுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தனிமனித சுகாதாரத்தில் அக்கறை செலுத்த தொடங்கியுள்ளனர். 10 பேரை பார்த்தால் அதில் 5 பேர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி தங்களின் அலுவல்களில் ஈடுபடுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். அதோடு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனாவுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை விமான நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், செல்போன்களில் காலர் டியூனாகக் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் சொல்லப்படுகிறது. இவ்வாறு கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் சூழலில், பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையொட்டி தமிழக அரசு, நேற்று பிறப்பித்த உத்தரவில் கல்வி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் ஆகியவற்றை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. அதனால் சென்னையில் இன்று பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. பார்கள் மூடப்பட்டதால் மதுபானங்களை வாங்கியவர்கள் அதை மறைவான இடங்களில் வைத்து அருந்தினர்.

சென்னையிலிருந்து கோயம்பேடு வழியாக வெளியூர்களுக்குச் செல்பவர்களைப் பரிசோதனை செய்ய கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

ஆனால், பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீதி எதுவும் காணப்படவில்லை. ஒவ்வொருவரும் வழக்கம்போலவே சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர். அதே நேரத்தில் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுவதைப் பார்க்க முடிந்தது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை
கோயம்பேடு பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை

இத்தாலி, பிரான்ஸ், துபாய் என வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் பயணிகள் ஒருநாள் மருத்துவ கண்காணிப்பில் வைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால் சென்னை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள சுகாதார மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதுவரை இந்த முகாமில் 41 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்துவருகிறது.

தமிழக சிறைத்துறை சார்பில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கைதிகள் உடனடியாக சிறை அதிகாரிகளிடம் தகவலைத் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பெரும்பாலானவர்கள் முகங்களில் மாஸ்க் அணிந்துவருகின்றனர். அதனால் மாஸ்க் தேவை அதிகரித்துள்ள நிலையில் சிறையில் உள்ள கைதிகள் மூலம் மாஸ்க் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, சிறையில் செயல்படும் துணி தைக்கும் இடத்தை மாஸ்க் தயாரிக்கும் இடமாக மாற்றப்படவுள்ளது. இதற்கான மூலப்பொருள்கள் சிறைக்கு அனுப்பப்பட்டவுடன் ஒரு நாளைக்கு 1,500 மாஸ்க் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு 2 மற்றும் 3 அடுக்கு முக கவசம் மட்டும் தயாரிக்க உள்ளனர். அதன்விலை ரூ.15 முதல் 20 வரை நிர்ணயிக்கப்படும். எண்-95 வகை மாஸ்க் தயாரிக்க மூலப்பொருள்கள் இல்லை. அதனால் அந்தவகை மாஸ்க் தற்போது தயாரிக்கப்படாது

புழல் சிறை
புழல் சிறை

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார்களை அளிக்க பொதுமக்கள் வருவதுண்டு. கொரோனா வைரஸ் காரணமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பொதுமக்கள் வருவதைத் தவிர்க்கலாமா என்ற ஆலோசனை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்துள்ளது. அதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையில் பொது போக்குவரத்தில் பயணிப்பதை பலர் தவிர்த்து தங்களின் சொந்த வாகனங்களைப் பயன்படுத்திவருவதைப் பார்க்க முடிகிறது. ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வீடுகளிலிருந்தே தங்களின் பணிகளைச் செய்துவருகின்றனர்.

சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் அடிக்கடி அறிவிக்கப்பட்டுவருகிறது. மேலும் சென்ட்ரலில் கொரோனா தொடர்பான தகவல்கள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் சிறப்பு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. குறிப்பிட்ட சிலர் மட்டுமே மாஸ்க் அணிந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. மற்றவர்கள் வழக்கம்போல ரயில்களில் பயணித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு