Published:Updated:

`கவுன்டர்களில் கூட்டம் சார், டிக்கெட் எடுக்கல!'- பொங்கல் பண்டிகை பயணத்தால் சிக்கிய 4,610 பேர்

பொங்கல் பண்டிகையொட்டி ரயிலில் பயணிகள் கூட்டம்
பொங்கல் பண்டிகையொட்டி ரயிலில் பயணிகள் கூட்டம்

சென்னையில் பொங்கல் பண்டிகையொட்டி ரயில்வே துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 4,610 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ.8.89 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் குடியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால் ரயில், பஸ்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில், பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள், ரயில்களில் அதிகளவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் நிற்கக்கூட இடம் இல்லை. கழிவறைகள் மற்றும் ரயில் படிகளில் தொங்கியபடி பலர் பயணித்தனர்.

எழும்பூர் ரயில் நிலையம்
எழும்பூர் ரயில் நிலையம்

பொங்கல் விடுமுறைக்குச் சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் சிறப்பு ரயில், பஸ்களை நம்பியிருந்தனர். பொங்கல் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து மட்டும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றதாக புள்ளிவிவரம் உள்ளது. ஒரேநாளில் ஏராளமானவர்கள் புறப்பட்டதால் ரயில், பஸ்களில் வழக்கத்தைவிட கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அதன்காரணமாக ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களும் உண்டு. அவர்களைப் பிடிக்க ரயில்வே நிர்வாகம் ஸ்பெஷல் டீம் மூலம் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் வழக்கத்தைவிட அதிகமானவர்கள் இந்தப் பொங்கல் பண்டிகையில் சிக்கியுள்ளதாக ரயில்வே வணிகவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வணிகவரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ``சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் பொங்கல் பண்டிகையொட்டி இயக்கப்பட்ட ரயில்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது. அதனால், அதிரடியாக டிக்கெட் பரிசோதனையில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர். கடந்த 13-ம் தேதி மின்சார ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 2,281 பேர் சிக்கினர்.

மின்சார ரயில்
மின்சார ரயில்

கடந்த 14-ம் தேதி 2,329 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து 8 லட்சத்து 89,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்யப்படாத பயண டிக்கெட்டைக் கொண்டு முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் ஏராளமானவர்கள் பயணித்தனர். அவர்களிடமிருந்தும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் 3,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் பயணிக்க முடியும். ஆனால், பண்டிகை காலங்களில் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்களின் எண்ணிக்கை அதிகளவில் விற்கப்படுகின்றன. அதனால்தான் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

ரயில்களில் சிசிடிவி கேமரா! - நீதிமன்றம் அதிரடி

சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டு முதல் (2019) டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 34,486 பேரும், அக்டோபர் மாதம் 44,166 பேரும், டிசம்பர் மாதம் 38,345 பேரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வரையில் 23,290 பேரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து அபராதத் தொகையை வசூலித்துள்ளோம்.

டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களிடம், `ஏன் டிக்கெட் எடுக்கவில்லை?' என்று விசாரித்தால், `டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அதிகம் என்பதால் டிக்கெட் எடுக்கவில்லை' என்று பதில் சொல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக யுடிஎஸ் ஆப் வசதியுள்ளது. அதைப் பயன்படுத்தி எளிதாக டிக்கெட் எடுக்கலாம்" என்றனர்.

பின் செல்ல