Published:Updated:

சென்னை மழைநீர் வடிகால் பணி 95% நிறைவா?! - மேயர் பிரியா தகவலும் உண்மை நிலையும்

சென்னை மழைநீர் வடிகால் பணி - முதல்வர் ஆய்வு

சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் நிறைவு பெற்றிருப்பதாக மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை மழைநீர் வடிகால் பணி 95% நிறைவா?! - மேயர் பிரியா தகவலும் உண்மை நிலையும்

சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் நிறைவு பெற்றிருப்பதாக மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சென்னை மழைநீர் வடிகால் பணி - முதல்வர் ஆய்வு

மழைநீர் வடிகால்:

தலைநகர் சென்னையில் கடந்தாண்டு பெய்த கனமழை மொத்த நகரத்தையும் வெள்ளக்காடாக்கியது. முதல்வர் ஸ்டாலின் இந்த வெள்ளத்துக்கு அதிமுக அரசு காலத்தில் எந்த பணிகளும் சரியாக செய்யாததே கரணம் என்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை முதல்வர் முன்வைத்து ஒரு வருடம் நிறைவடையப்போகிறது. இன்னும் சில வாரங்களில் பருவமழை தொடங்க உள்ளது. ஆனால், சென்னையின் பெரும்பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர்
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர்

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்த அமைச்சர் நேரு, `` கடந்த அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்களுக்கான இணைப்பு சரியாக வழங்கப்படவில்லை. அதனால்தான் நீர் வெளியேற்றம் சரிவர நடக்காமல் தண்ணீர் தேங்கியது. உரியக் காலத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும். சென்னை மாநகராட்சியில் கடந்த 332 ஆண்டுகளாக மழைநீர் வடிகாலின் அளவு 2,078 கி.மீ. நீளமாக உள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் புதிதாக 1,058 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைநீர் தேங்கும் இடங்களில் நிரந்தர தீர்வுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று சொல்லியிருந்தார்.

ஓரளவுக்கு நம்புகிறேன்:

மேலும் அமைச்சர் நேரு பேசியபோது, "சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. ஆற்றோரங்களில் உள்ள இடங்களில் மட்டும் பணிகள் முடியத் தாமதமாகும். இந்த ஒருமுறை மட்டும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சமீபத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும். சென்னையின் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று ஓரளவுக்கு நம்புகிறேன்" என்று பேசியிருந்தார்.

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர்
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர்

முதல்வர், அமைச்சர் இப்படி கருத்துக்கள் சொல்லிவர, சென்னை மாநகர மேயர் பிரியா, ``சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாகப் பிரித்து நடைபெறுகிறது. ஒரு பகுதியில் 95 சதவிகித பணிகளும், மற்றொரு பகுதிகளில் 35 சதவிகித பணிகளும் நிறைவடைந்துள்ளன. கடந்தாண்டு எந்த இடங்களில் வெள்ளம் பாதிப்பு அதிகம் இருந்ததோ, அந்த இடங்களில் பணிகள் நடைபெற்றுவருகிறது. அதில், இன்னும் ஐந்து சதவிகித பணிகள் மட்டுமே இருக்கிறது. அந்த பணிகளும் வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் முடிவடைந்துவிடும். வெள்ளத்தடுப்பு பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.

உண்மை நிலவரம் என்ன...

ஒரு பக்கம் இந்த ஒருமுறை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் அமைச்சர். இன்னொரு பக்கம் 95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது என்று கூறும் மேயர். இவர்களின் கருத்துக்களுக்கு நடுவே மக்கள் நிலைதான் பெரும் திண்டாட்டமாக இருக்கிறது. இதுகுறித்து சென்னைவாசிகள் சிலரிடம் பேசினோம், ``சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களுக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களைச் சுற்றி எந்த பாதுகாப்புக்கு அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்படவில்லை.

சென்னை மழை
சென்னை மழை

ஒரு சிறிய மழை பெய்தாலே, அந்த பள்ளங்கள் நிரம்பிவிடுகிறது. தண்ணீர் இருப்பதால், எது பள்ளம் எது சாலை என்பதே தெரியவில்லை. நடந்து செல்லும்போது அந்த பள்ளங்களில் விழுந்துவிடும் அபாயம் இருக்கிறது. வெறும் பள்ளமாக இருந்தால் கூட பரவாயில்லை, அந்த பள்ளங்கள் முழுக்க கம்பிகளாக நீட்டிக்கொண்டு நிற்கிறது. பள்ளத்தில் விழும்போது அந்த கம்பிகள் குத்தினால் என்ன ஆகும் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லையா என்ன... மழை சமயத்தில் தண்ணீர் தேங்கிப் பாதிப்பு ஏற்படுவதை விட, நகர் முழுவதும் உள்ள பள்ளத்தில் அதிக பாதிப்பு ஏற்பாடு நிலைதான் உள்ளது" என்றார்கள்.

சென்னை மாநகர மேயர் சொல்வது போல மழைநீர் வடிகால் பணிகள் எந்த இடங்களில் 95 சதவிகிதம் நிறைவு அடைந்திருக்கிறது என்று விசாரித்தோம். இது தொடர்பாக மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``சென்னையைப் பொறுத்தவரை மழைக் காலங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், பெரும்பகுதிகளில் அந்த பணிகள் எதுவும் முழுமையாக நிறைவடையவில்லை.

கடந்த மழையில் ரிப்பன் மாளிகை தேங்கி நிற்கும் மழைநீர்
கடந்த மழையில் ரிப்பன் மாளிகை தேங்கி நிற்கும் மழைநீர்

அதேசமயத்தில், கடந்த முறை முதல்வரின் தொகுதி, ரிப்பன் மாளிகையில் தண்ணீர் தேங்கியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அந்த பகுதிகளில் இம்முறை தண்ணீர் தேங்காமல் இருக்க பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேயர் சொன்னதுபோல, பல இடங்களில் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், அந்த மழைநீர் வடிகால் கால்வாய்களுக்கும், கால்வாய்களுக்கும் இணைப்பு கொடுக்க வேண்டியது உள்ளது. இணைப்பு விரைவில் வழங்கப்படும். சென்னையில் இந்த முறை பெரு மழை பெய்தாலும், தண்ணீரை உடனடியாக வெளியேற்றத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது" என்றார்கள்.

95 சதவிகிதம் 100 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துவிட்டது என்று சதவிகிதத்தில் பணிகளை முடித்துவிட்டோம் என்று சொல்லாமல், களத்தில் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்பதே சென்னை வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.