Published:Updated:

குப்பையில் கிடந்த 9 பவுன் நகை; நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்; சென்னையில் நெகிழ்ச்சி!

நகையை ஒப்படைத்தபோது...
News
நகையை ஒப்படைத்தபோது...

``வழக்கம்போல காலையில் ஒவ்வொரு தெருவாகச் சென்று குப்பைகளைச் சேகரித்தேன். ரோஜா ரமணி என்பவரின் வீட்டினரும் குப்பையைக் கொட்டினார்கள். குப்பைகளைச் சேகரிக்கும் பணியை முடிக்கும் தறுவாயில், மகன் ஶ்ரீநாத்துடன் வந்த ரோஜா ரமணி, நகையைத் தவறவிட்ட தகவலைப் பதற்றமும் அழுகையுமாக கூறினார்."

சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் தூய்மைப் பணியாளர் சஞ்சீவிகுமார். அங்குள்ள விநாயகபுரம் காஞ்சி நகரில் பணியிலிருந்தபோது, ரோஜா ரமணி என்பவர் தவறுதலாகக் குப்பையில் தவறவிட்ட 9 பவுன் நகையை மீட்டவர், அதை ஒப்படைத்திருக்கிறார். அண்மையில் நடைபெற்ற இந்தச் சம்பவம், சஞ்சீவிகுமாரின் மனிதநேயத்தைப் பாராட்ட வைக்கிறது. இதுகுறித்து சஞ்சீவிகுமாரிடம் பேசினோம்.

மகனுடன் ரோஜா ரமணி
மகனுடன் ரோஜா ரமணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``விநாயகபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 19 தெருக்களில் தினமும் குப்பைகளைச் சேகரிப்பது என் பணி. சில தினங்களுக்கு முன்பு, வழக்கம்போல காலையில் ஒவ்வொரு தெருவாகச் சென்று குப்பைகளைச் சேகரித்தேன். ரோஜா ரமணி என்பவரின் வீட்டினரும் குப்பையைக் கொட்டினார்கள். குப்பைகளைச் சேகரிக்கும் பணியை முடிக்கும் தறுவாயில், மகன் ஶ்ரீநாத்துடன் வந்த ரோஜா ரமணி, நகையைத் தவறவிட்ட தகவலைப் பதற்றமும் அழுகையுமாக என்னிடம் கூறினார். குப்பைகளைத் தரம் பிரிக்கும்போது தேடிப் பார்த்துச் சொல்வதாகக் கூறினேன். நம்பிக்கையுடன் அவர்கள் இருவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

சற்றுநேரத்தில் குப்பைகளைத் தரம் பிரித்தபோது நகை கிடைத்தது. உரியவரிடம் நகையை ஒப்படைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்குப் பதற்றமாகிவிட்டது. உடனே என் மேலதிகாரிக்குத் தகவல் கொடுத்தேன். பின்னர், அவரும் நானும் பிற்பகலில் வீடு தேடிச் சென்று, ரோஜா ரமணியிடம் நகையை ஒப்படைத்தோம். நகை கிடைத்த மகிழ்ச்சியில் பூரித்துப்போன ரோஜா ரமணி மற்றும் அவர் குடும்பத்தினர், அதன் பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர்" என்கிறார் புன்னகையுடன்.

சஞ்சீவிகுமார்
சஞ்சீவிகுமார்

நகை திரும்பக் கிடைத்தாலும், அதைத் தவறிவிட்டபோது உண்டான பதற்றம் ரோஜா ரமணிக்கு இன்னும் முழுமையாக அகலவில்லை. அதை அவரின் குரல் காட்டிக்கொடுக்கிறது. ``பொங்கல் பண்டிகை வருவதால் வீட்டைச் சுத்தம் செய்தோம். குப்பைகளைத் திரட்டி என் அம்மாவிடம் நான் கொடுக்க, அவர் அதை வாசலிலிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டினார். தேவையில்லாத சில புத்தகங்களையும் பேப்பரையும், அலமாரியிலிருந்த நகைப்பெட்டியின்மீது தவறுதலாக வைத்துள்ளோம். இதைக் கவனிக்காமல், அந்தக் குவியலை மொத்தமாக எடுத்து குப்பையில் கொட்டிவிட்டோம்.

அதன்பிறகு, வீடு முழுக்கத் தேடியும் நகை கிடைக்கவில்லை. நகையைக் குப்பையில் கொட்டியது தெரியவந்ததும் பதறிப்போனோம். பக்கத்து வீதியிலிருந்த சஞ்சீவிகுமார் அண்ணனிடம் இந்த விஷயத்தைக் கூறினோம்.

அதன்படி நகையைக் கண்டுபிடித்து, நேர்மையுடன் வீடு தேடிவந்து ஒப்படைத்தார். அதன் பிறகுதான் மொத்த குடும்பத்தினருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் திரும்பக் கிடைத்தது" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரோஜா ரமணி.