Published:Updated:

`சல்யூட் அடித்தேன்; கையைப் பிடித்தார்!' - போலீஸ் கமிஷனர் செல்ஃபி குறித்து செக்யூரிட்டி நெகிழ்ச்சி

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுடன் செல்ஃபி எடுத்தது குறித்து பள்ளியில் செக்யூரிட்டியாக பணியாற்றும் ஜோதிநாதன் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுடன்
 ஜோதிநாதன்
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுடன் ஜோதிநாதன்

சென்னை அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1979-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் கமிஷனர் வந்தார். அவர் பள்ளிக்குள் நுழையும்போது செக்யூரிட்டியாகப் பணியாற்றிய ஜோதிநாதன், சல்யூட் அடித்து கமிஷனரை வரவேற்றார்.

போலீஸ் கமிஷனருடன் என்சிசி மாணவர்கள்
போலீஸ் கமிஷனருடன் என்சிசி மாணவர்கள்

பின்னர், நிகழ்ச்சி முடிந்து கமிஷனர் விஸ்வநாதன் திரும்பிச் செல்லும்போதும் செக்யூரிட்டி ஜோதிநாதன், சல்யூட் அடித்துள்ளார். உடனே கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், காரை நிறுத்திவிட்டு தன்னுடைய செல்போனிலேயே ஜோதிநாதனுடன் செல்ஃபி எடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பிறகு, அம்பத்தூர் போலீஸார் செல்ஃபி போட்டோவை பிரின்ட் போட்டு ஜோதிநாதன் கையில் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன ஜோதிநாதனைச் சந்தித்துப் பேசினோம்.

`கணக்கு வராது; செக்யூரிட்டிக்கு செல்ஃபி சர்ப்ரைஸ்!'- சென்னை போலீஸ் கமிஷனரின் 40 வருட ஃப்ளாஷ்பேக்

``நான், திருமுல்லைவாயல் பகுதியில் குடும்பத்தோடு குடியிருந்துவருகிறேன். வங்கி ஒன்றில் 34 ஆண்டுகளாக கேஷியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு இந்தப் பள்ளியில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வருகிறேன். 1979-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 29-ம் தேதி சந்திப்பதாக எனக்குத் தகவல் வந்தது. அதற்கான ஏற்பாடுகள் பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொள்வதாக எனக்குத் தகவல் சொன்னார்கள்.

ஜோதிநாதன்
ஜோதிநாதன்

உடனே, கமிஷனரை சல்யூட் அடித்து வரவேற்க முடிவு செய்தேன். அதன்படி கமிஷனரின் கார் வந்ததும் சிரித்தபடி அவருக்கு சல்யூட் அடித்தேன். அப்போது என்னைப் பார்த்து சிரித்தபடி கமிஷனர் உள்ளே சென்றுவிட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு கமிஷனர் கார் வந்தது. உடனே, என் அருகில் கார் நிறுத்திய கமிஷனர், கதவைத் திறந்தார். என்னை நோக்கி, `உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டபடியே என் கைகளைப் பிடித்தார். பிறகு தன்னுடைய பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்த அவர், என்னோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதன்பிறகு, `இந்தப் போட்டோ, உங்கள் கைக்கு வரும்' என்று கூறியபடி புறப்பட்டுச் சென்றார்.

அதன்பிறகு பணி முடிந்து நான் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். இரவு 9 மணியளவில் அம்பத்தூர் போலீஸ் நிலையத்திலிருந்து ஒருவர் என்னிடம் பேசினார். என்னுடைய பெயர், எத்தனை வருடங்களாக வேலை பார்க்கிறீர்கள் போன்ற விவரத்தைக் கேட்டார். அதற்கு, `ஏன் சார் இந்த விவரங்களைக் கேட்கிறீர்கள்?' என்று பதற்றத்துடன் நான் கேட்டேன். அதற்கு அந்த போலீஸ்காரர் `இது கமிஷனரின் உத்தரவு' என்று பதிலளித்தார். அதன்பிறகு மறுநாள் நான் வேலைக்கு வந்த சில நிமிடத்தில் போலீஸ்காரர் ஒருவர் ஒரு கவர் ஒன்றை என்னிடம் கொடுத்தார். அதைத் திறந்து பார்த்தபோது கமிஷனர் எடுத்த செல்ஃபி போட்டோ இருந்தது. அதைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியடைந்தேன். இந்தத் தகவலை வீட்டிலும் தெரிந்தவர்களிடமும் கூறினேன். இந்த செல்ஃபி போட்டோவை என்னுடைய 69 வயதில் மறக்க முடியாது" என்றார் சந்தோஷமாக

மனைவியுடன்ஜோதிநாதன்
மனைவியுடன்ஜோதிநாதன்

வங்கியில் பணியாற்றிய நீங்கள் எதற்காக செக்யூரிட்டி வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ``நான் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வங்கியில் உதவியாளராகப் பணியாற்றினேன். அதன்பிறகு பதவி உயர்வு மூலம் கேஷியரானேன். இந்தியா முழுவதும் பணியாற்றிவிட்டேன். எனக்கு 4 பெண் குழந்தைகள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மனைவியுடன் குடியிருந்துவருகிறேன். வங்கியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு வீட்டில் வேலை செய்யாமல் இருக்க விரும்பவில்லை. இதனால் செக்யூரிட்டியாக வேலை பார்க்க வேண்டும் என ஆசை இருந்தது. அதனால்தான் இந்த வேலைக்கு வந்தேன். எனக்கு உடல்நலம் சரியில்லை என்றாலும் பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தால் மனமும் உடலும் உற்சாகத்துக்கு வந்துவிடும். நான் விருப்பப்பட்டு பணியாற்றும் இந்த வேலையால் இன்று கமிஷனருடன் செல்ஃபி எடுக்கும் சூழல் எனக்குக் கிடைத்துள்ளது. இதற்கு கடவுளுக்கும் கமிஷனருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.