`எனக்கு குழந்தை பிறந்து 14 நாள்கள்தான் ஆகின்றன!'- தலைமைச் செயலக ஊழியர் முன்ஜாமீன் மனு #TNPSC
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தலைமைச் செயலகப் பெண் ஊழியர் கவிதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஜனவரி 23-ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் கைது படலம் தொடர்ந்துவருகிறது. இந்த வழக்கில் குரூப் 2ஏ தேர்வில் 13 பேரும் குரூப் 4 தேர்வில் 16 பேரும் என மொத்தம் 29 பேர் சிறைல் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, பெரியகண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் சித்தாண்டி (34) என்பவரை நேற்று கைது செய்தனர். சித்தாண்டி அளித்த தகவலின்படி காவலர்கள் முத்துக்குமார், பூபதி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் என்கிற சக்தி என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். நாராயணன் சென்னை முகப்பேரைச் சேர்ந்த புரோக்கர் ஜெயக்குமாருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. காவலர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் அளித்த தகவல்களின்படி கிராம நிர்வாக அலுவலர் நாராயணனிடம் விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் அடுத்த கைது நாராயணன்தான் என்கிறார்கள்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்குகள் விஸ்வரூபம் எடுத்துவரும் நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவரும் கவிதா என்பவர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், `நான் தலைமைச் செயலக நிதித்துறையில் உதவியாளராகப் பணியாற்றிவருகிறேன். நான் ராமேஸ்வரம் வேற்கோடு ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் குரூப் 2ஏ தேர்வை கடந்த 2017 ஆகஸ்ட் 6-ம் தேதி எழுதினேன். தரவரிசைப் பட்டியலில் 48-வது இடம் கிடைத்தது. இடஒதுக்கீடு அடிப்படையில் 6-வது இடம் பெற்று அரசுப் பணிக்குத் தேர்வாகினேன்.

என்னுடன் தேர்வு எழுதி 46-வது இடம் பெற்ற விக்னேஷ் என்பவர் மற்றும் சுதா, சுதா தேவி ஆகியோர் தேர்வு முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் என்னையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துவிடுவார்களோ என்ற பயம் உள்ளது. எனக்கு கடந்த ஜனவரி 23-ம் தேதிதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. (குழந்தை பிறந்து இன்றோடு 14 நாள்களாகின்றன) தற்போது மருத்துவ விடுப்பில்தான் நான் உள்ளேன். எனவே, என் குழந்தைக்காக என்னைக் கைது செய்யாமல், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.