Published:Updated:

கொரோனா பாதித்தவர்களுக்கு 1000 வாட்டர் பாட்டில்கள் கொடுத்த ஆசிரியை! #SpreadPositivity

ஆசிரியர் ஜலீலா
ஆசிரியர் ஜலீலா

``நம்மையறியாம அனிச்சையா நடக்கிற விஷயம் மூச்சு விடறது. அதுல பிரச்னை வந்தா, ஒவ்வொரு தடவை மூச்சு விடறப்போ எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும்".

கொரோனாவுக்கு எதிரான அத்தனை மனிதாபிமான செயல்களையும் பொதுவெளியில் உரத்துப் பேச வேண்டிய நேரம் இது. அந்தச் சத்தங்கள், அறிவியலுடன் சேர்ந்து கொரோனா தொடர்பான நம்முடைய பயத்தைத் தள்ளி வைக்கும். உயிர் வாழ்வோம் என்கிற நம்பிக்கையை அதிகமாக்கும். இப்படிப்பட்டதொரு நம்பிக்கையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறார் சென்னை தனியார் பள்ளி ஆசிரியரான ஜலீலா. மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும் மருத்துவமனை வாசலில் இருக்கிற அவர்களுடைய சொந்தக்காரர்களுக்கும் ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியிருக்கிறார் ஜலீலா.

Spread Positivity
Spread Positivity

``எனக்குத் தெரிஞ்ச பெண் ஒருவர் கொரோனாவால பாதிக்கப்பட்டவங்களுக்கு வாலன்டியரா நிறைய உதவிகள் பண்ணிட்டிருக்காங்க. சில வாரங்களுக்கு முன்பு `ஹோம் க்வாரன்ட்டீன்ல இருக்கிறவங்களுக்கு உணவு சமைச்சுத்தர முடியுமா’ன்னு அவங்களோட முகநூல்ல கேட்டிருந்தாங்க. என் வீட்டு கிச்சன்ல ஒரே நேரத்தில் அம்பது, அறுபது பேருக்கு சமைச்சுத் தர அளவுக்கு வசதியில்லை. அதனால, அதை என்னால செய்ய முடியலை.

என் கணவரும் என் குடும்பத்தினரும் முதலமைச்சரோட கொரோனா நிவாரணத்துக்கு நிதி கொடுத்துட்டாங்க. இருந்தாலும் நாமும் நம்ம பங்குக்கு ஏதாவது செய்யணுமேன்னு யோசிச்சுட்டு இருந்தப்போதான், மருத்துவமனை வாசல்ல பெட் கிடைக்காம மக்கள் ராத்திரியும் பகலும் தவிச்சுக்கிட்டு நிக்கிறதைப் பார்த்தேன். அவங்களைப் பார்க்கிறப்போ நாங்க நோன்பு இருக்கிற நேரத்துல தண்ணிகூட குடிக்காம இருக்கிறது நினைவுக்கு வந்துடுச்சு. உடனே மக்களோட தாகத்தைத் தணிக்க தண்ணீர் கொடுப்போம்னு முடிவு செஞ்சு, ஆயிரம் வாட்டர் பாட்டில்கள் வாங்கிக் கொடுத்தேன். மத்தவங்க செஞ்சுகிட்டிருக்கிற உதவியோட கம்பேர் பண்ணா, நான் செஞ்சது ரொம்ப சின்னதுதான். இருந்தாலும் மனசுக்கு நிம்மதியா இருக்கு.

கொரோனா - 1000 தண்ணீர் பாட்டில்கள்
கொரோனா - 1000 தண்ணீர் பாட்டில்கள்
Covid Questions: கொரோனா தொற்று இருப்பது தெரியாமலே தடுப்பூசி போட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

எனக்கு வீஸிங் பிரச்னை இருக்கு. நம்மையறியாம அனிச்சையா நடக்கிற விஷயம் மூச்சு விடுறது. அதுல பிரச்னை வந்தா, ஒவ்வொரு தடவை மூச்சு விடுறப்போ எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும். அது பெரிய கொடுமை. என் நாடும் என் மக்களும் மூச்சுவிட முடியாம தவிச்சுக்கிட்டிருக்கிறப்போ, என் பேங்க் பேலன்ஸை பொத்திப் பொத்தி வெச்சு என்ன பண்ணப்போறேன். அதுல கொஞ்சம் எடுத்து, தேவைப்படுறவங்களுக்கு கொடுக்கலாமேன்னுதான் செஞ்சேன்.

என் உடல்நிலை காரணமா, வீட்டைவிட்டு வெளியே வந்து கொரோனாவுல பாதிக்கப்பட்டவங்களுக்கு என்னால உதவ முடியலை. ஆனா, உங்க அத்தனை பேருக்காகவும் நான் கடவுளை வேண்டிகிட்டிருக்கேன்’’ என்கிறார் குரல் தழைய.

அடுத்த கட்டுரைக்கு