Published:Updated:

`வீட்டின் பூட்டுகளை உடைத்த கைகள் நூல் நூற்கிறது' - மனைவியால் திருந்திய சென்னைக் கமலக்கண்ணன்

மனைவியோடு கமலக்கண்ணன்
மனைவியோடு கமலக்கண்ணன்

சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய கமலக்கண்ணன், கொத்தனார் வேலை பார்த்தார். அப்போது அறிமுகமான நண்பர்களால் திருட்டு வழக்குகளில் சிக்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். 5-ம் வகுப்பு வரை படித்த இவர், கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். கொத்தனார் வேலைக்காக சென்னைக்கு வந்த இவர், மனம் போல வாழத்தொடங்கினார். ஆடம்பரமாக வாழப் பணம் தேவைப்பட்டதால் திருட ஆரம்பித்தார். கமலக்கண்ணனுக்கு அறிமுகமான கூட்டாளிகளால்தான் அவரின் வாழ்க்கை தடம்மாற தொடங்கியது. 2013-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் முதல் தடவையாக கமலக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு கமலக்கண்ணனின் பெயர் காவல் நிலையங்களில் பிரபலமானது. பரங்கிமலை, அடையாறு காவல் மாவட்டங்களில் மட்டுமல்லாமல் சென்னையில் எங்கு கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததாலும் போலீஸாரின் முதல் சந்தேகப்பார்வை கமலக்கண்ணன் மீது விழுந்தது.

கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்
`யாராவது அவளை மரியாதை குறைவா பேசிட்டா... அதான் திருடுறதை விட்டுட்டேன்!'- மனைவிக்காக திருந்திய கமலக்கண்ணன்

பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பெருங்களத்தூர், வேளச்சேரி, சேலையூர், கிண்டி, பரங்கிமலை ஆகிய காவல் நிலையங்களில் கமலக்கண்ணன் மீது 53 வழக்குகள் பதிவாகின. அதன்காரணமாக அவருக்கு சிறைவாழ்க்கையும் பழகிப்போனது. சிறையில் சில மாதங்கள், வெளியில் பல மாதங்கள் என வாழ்ந்து வந்த கமலக்கண்ணனின் வாழ்க்கையில் சில காவல் துறை அதிகாரிகளால் மனமாற்றம் ஏற்படத் தொடங்கியது. ஆனாலும் வழக்குகள் காரணமாக கமலக்கண்ணன் நீதிமன்றங்களுக்கு சென்றுகொண்டிருந்தார். இந்தச் சமயத்தில்தான் கமலக்கண்ணனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என அவரின் நலம் விரும்பிகள் முடிவு செய்தனர்.

அதற்காக பெண்பார்க்கும் படலம் நடந்தது. பொதுவாக திருட்டு வழக்குகளில் சிக்கியவர்களுக்கு பெண் கிடைப்பது அரிது. கமலக்கண்ணனின் கடந்த கால வாழ்க்கைகளைத் தெரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலா, கமலக்கண்ணனை கரம்பிடிக்க சம்மதித்தார். பின்னர் 29.5.2019-ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கமலக்கண்ணனிடம், `நீங்கள் இனிமேல் திருடக் கூடாது' என்று கலா அன்பு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு கமலக்கண்ணனும் சம்மதித்தார். திருமணம் நடந்து 20 நாள்களில் காவல்துறையினர் கமலக்கண்ணனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

என்னுடைய கடந்த கால வாழ்க்கையை இப்போது நினைத்தாலும் மனவருத்தமாக இருக்கிறது. என்னுடைய சிறு வயதில் நடந்த கசப்பான சம்பவங்களே என்னைத் திருடனாக மாற்றியது.
கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்

இதையடுத்து மனைவியோடு கமலக்கண்ணன், கடந்த 2019 டிசம்பர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு, தான் திருந்திவாழ விரும்புவதாகக்கூறினார். அதைக்கேட்ட காவல் துறை அதிகாரிகளும் கமலக்கண்ணனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

ஆனால், சில வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அதுதொடர்பான விசாரணைக்காக கமலக்கண்ணன் ஆஜராகி வந்தார். அதற்கும் சில காவல்துறை அதிகாரிகள் உதவி செய்தனர். புதிய வாழ்க்கையை, தன் மனைவியோடு சென்னை கொருக்குப்பேட்டையில் தொடங்கினார். கிடைத்த வேலைகளைச் செய்து அதில் கிடைத்த வருமானத்தில் சந்தோஷமாக வாழ்ந்துவந்தார்.

இந்தச் சமயத்தில்தான் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. அதனால் கமலக்கண்ணனும் வீட்டிலேயே முடங்கினார். வருமானத்துக்கு வழியில்லாததால் என்ன செய்தென்று திகைத்த கமலக்கண்ணனுக்கு யூடியூப் தேடல் கைகொடுத்தது. நூல் கண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கமல்கண்ணன் ஊரடங்கிலும் உற்சாகமாக நம்மிடம் பேசினார்.

``என்னுடைய கடந்த கால வாழ்க்கையை இப்போது நினைத்தாலும் மனவருத்தமாக இருக்கிறது. சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி கொத்தனாராக வேலை பார்த்துவந்தேன். அடிதடி வழக்கில் சிறைக்குச் சென்றபோது தி.நகரைச் சேர்ந்த சீனிவாசன், விழுப்புரத்தைச் சேர்ந்த குள்ளக்குமார், பல்லாவரத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோருடன் நட்பு கிடைத்தது. நாங்கள் 4 பேரும் நண்பர்களாகினோம். சீனிவாசன்தான் எனக்கு குரு. அவர்தான் வீடுகளில் எப்படி திருட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார். சென்னை, காஞ்சிபுரத்தில் நான் பல இடங்களில் திருடியுள்ளேன். திருடிய பணத்தை நட்சத்திர ஹோட்டல்களில் ஜாலியாக செலவழிப்பேன்.

கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்

விரும்பிய வாழ்க்கை வாழ்ந்தேன். அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம் என நினைத்தேன். ஆனால் அது உண்மையான, சந்தோஷமான வாழ்க்கை இல்லை என்பது இப்போதுதான் புரிகிறது. திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டப்பிறகு வாழ்க்கையை நடத்த என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் திருடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். ஊரடங்குக்கு முன்புவரை கிடைத்த வேலைகளைச் செய்து அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு நானும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்துவந்தோம்.

கொரோனா ஊரடங்கால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. அதனால் யூடியூபில் சிறு தொழில் குறித்த வேலைவாய்ப்புகளைத் தேடினேன். அப்போது 5 தொழில்களை தேர்வு செய்தேன். சாப்பாட்டு தட்டுகளைத் தயாரிக்கலாம் என முடிவு செய்தபோது அதற்கு இயந்திரம் மற்றும் மூலப்பொருள்களுக்கு 60,000 ரூபாய் வரை தேவைப்பட்டது. அவ்வளவு பணம் கையில் இல்லாததால் அடுத்த வேலைவாய்ப்பைத் தேர்வு செய்தேன்.

அதுதான் நூல்கண்டு தயாரிப்பு. எங்கள் பகுதியில் உள்ள கடைகளிலிருந்து பண்டல் பண்டலாக நூல்களை வாங்கிக்கொண்டு வந்து இயந்திரத்தின் உதவியோடு 35 கிராம் எடையிலான சின்ன, சின்ன நூல்கண்டுகளாக மாற்றுவதுதான் என்னுடைய வேலை. அந்த நூல்கண்டுகளை விற்றால் தினமும் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த கமலக்கண்ணன்
கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த கமலக்கண்ணன்

இந்தத் தொழிலுக்கு முதலாளியும் தொழிலாளியும் நான்தான். சந்தோஷமாக இருக்கிறது. கடந்த 13 நாள்களாக இந்த வேலையைச் செய்துவருகிறேன். அதற்கு முன்பு, தள்ளுவண்டியில் காய்கறிகள், பழங்கள், மீன்களை விற்றேன். அந்தப்பணத்தைக் கொண்டுதான் 8,000 ரூபாய்க்கு இயந்திரமும் 8,000 ரூபாய்க்கு நூல்கண்டுகளையும் வாங்கினேன். 16,000 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலை செய்துவருகிறேன்.

என் மீது 53 வழக்குகள் இருந்தன. அதில் 13 வழக்குகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள வழக்குகள் கொரோனா காரணமாக நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் முடிந்தவுடன் என்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்துள்ளேன். என்னுடைய இந்த மனமாற்றத்துக்கு மனைவி கலா, 90 சதவிகிதம் என்றால் காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், பன்னீர், முத்து, அருண்குமார், கண்ணன், மனோகரன், காண்டிப்பன் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள்தான் காரணம். நான், திருடனாக இருந்தபோது சுமார் 4 ஆண்டுகள் சிறையில் இருந்திருப்பேன். அந்த வாழ்க்கை நரகமானது. இப்போது மனைவியோடு சந்தோஷமாக வாழ எனக்கு வழிகாட்டிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது என் மனைவி மாசமாக இருக்கிறாள். அவளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு