Published:Updated:

திடீர் நெஞ்சுவலி; ஆம்புலன்ஸுக்கு 3 மணி நேரக் காத்திருப்பு - சென்னை வியாபாரி உயிரிழந்த சோகம்

வியாபாரி பிரகாஷ்
வியாபாரி பிரகாஷ்

சென்னையில் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த வியாபாரிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வராததால் 3 மணி நேர போராட்டத்துக்குப்பிறகு வியாபாரியின் உயிர்பிரிந்தது.

வியாபாரி

சென்னை பாடி தெற்கு மாடவீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (65). இவர் தள்ளுவண்டி பழவியாபாரம் செய்து வந்தார். இவரின் மனைவி தேவி (54). இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். பிரகாஷின் மகள் இறந்துவிட்டார். குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் குடியிருந்த பிரகாஷ், நேற்றிரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதைப்பார்த்த அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ்
அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ்
Representational Image

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரகாஷை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ, கார் என எந்த வாகனமும் கிடைக்கவில்லை. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியை பிரகாஷின் குடும்பத்தினர் நாடியுள்ளனர். அப்போது அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், தகவல் தெரிவித்து 3 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அதனால் மாற்று ஏற்படாக அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை போனில் பிரகாஷின் குடும்பத்தினர் தொடர்புகொண்டனர். ஆனால், அங்கும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் பிரகாஷின் குடும்பத்தினர் தவித்தனர்.

ஆம்புலன்ஸ்

இந்த நிலையில், 3 மணி நேரத்துக்குப்பிறகு ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. உடனடியாக ஊழியர்கள், பிரகாஷை பரிசோதித்தனர். அப்போது அவரின் உயிர் பிரிந்ததை அவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தத் தகவல் காட்டுத்தீ போல அந்தப்பகுதியில் பரவியது. `ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் பிரகாஷ் இறந்துவிட்டார்’ எனத் தகவல் பரவியது. அதனால், அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸை முற்றுகையிட்டனர். இதையடுத்து, இந்தத் தகவல் கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரகாஷின் உயிரிழப்பு சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதி கிடைக்கவில்லை என பொதுமக்கள், தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதற்கு போலீஸார், கொரோனா ஊரடங்கு காரணமாகத்தான் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.

கொரோனா

மேலும் கொரோனா நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றததால்தான் சரியான நேரத்துக்கு வர முடியவில்லை என விளக்கமளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன்பிறகு ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ``கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார் பிரகாஷ். அவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதோடு ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். அதனால், பிரகாஷை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரின் குடும்பத்தினர் 3 மணி நேரம் போராடியுள்ளனர்.

பிரதமருடன் போட்டோ; ஆர்மி ஐ.டி கார்டு! -சென்னை இன்ஜினீயரைப் பதறவைத்த QRcode

நெஞ்சுவலியால் வீட்டிலேயே சுருண்டு விழுந்த பிரகாஷ், பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். அதன்பிறகு அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரகாஷ் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முயன்றனர். அதனால்தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மற்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே, ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களின் அவசர தேவைகளிலும் அரசும் அதிகாரிகளும் அக்கறை செலுத்த வேண்டும்" என்றனர்.

நெஞ்சுவலியால் பிரகாஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு