Published:Updated:

```வெளியே போறீங்களா’னு கேட்ட ஏக்கக் குரல்தான் இதைச் செய்யத் தூண்டியது!’’ - தன்னார்வலரின் சமூகப் பணி

புவனா ஷேஷய்யன்
புவனா ஷேஷய்யன்

`சரி! ஒரு சின்ன ரிஸ்க் எடுப்போம். நாளைக்கு இருப்போமா... இருக்க மாட்டோமானு தெரியாது. நம்பிக்கை வெச்சி நல்லதைச் செய்வோம்’.

பேரிடர்களில், அரசாங்கம் தாமதித்தாலும், தனிநபர்கள் சுயமாக முன்வந்து பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனுக்குடன் ஆதரவுக்கரம் நீட்டுவது தற்போது அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம்.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தன்னார்வலர்கள் முதியவர்களுக்கு உதவி
கொரோனா பாதிப்பு எதிரொலியாக தன்னார்வலர்கள் முதியவர்களுக்கு உதவி

முன் எப்போதும் இல்லாத வகையில், உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு, தற்போது தமிழகத்தையும் தாக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தப் பாதிப்பை, உணர்ந்து வீட்டில் இருப்பவர்களே தொடர்பைத் துண்டித்து, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலையில், சென்னையில் உணவின்றி வாடும் முதியோர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கி வருகிறார்கள் தன்னார்வலர்கள் சிலர். அவர்களுடைய இந்தச் செயல் நம்மை பிரமிக்கச் செய்துள்ளது.

`உதவிகள் தேவைப்படுவோர், எங்களை அழையுங்கள்' என்று ஃபேஸ்புக்கில் தொலைபேசி எண்களைப் பதிவிட்ட தன்னார்வலர் புவனா ஷேஷய்யனை தொடர்புகொண்டு பேசினோம். ஓர் இயக்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். ஆனாலும் அதற்கும் இப்போதைய என் பணிகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. அதனால், அந்த இயக்கத்தைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொன்டவர் தொடர்ந்து பேசினார்.

``கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, ஒருநாள் தடை உத்தரவு போடப்பட்டது. அப்போது, என்னோட வீட்டு வாசப்படியில நின்னுகிட்டு இருந்த என்னைப் பார்த்து, பக்கத்து வீட்டு அம்மா, `வெளியே போறீங்களா'னு கேட்டாங்க. `ஏம்மா' என்று கேட்டதற்கு, `இல்ல.. எனக்குப் பால் பாக்கெட் இல்ல வாங்கி வர முடியுமா'னு சொன்னாங்க. அப்போதான் யோசிச்சேன். வயசானவங்களுக்கு உதவும்படி ஏதாவது செய்யலாமேன்னு. இதுல ரிஸ்க் இருக்குனு எனக்கு நல்லாத் தெரியும். ஆனாலும் அதெல்லாம் பார்த்தா அவங்க நிலை என்ன ஆகும்?

கொரோனா
கொரோனா

சரி! ஒரு சின்ன ரிஸ்க் எடுப்போம். நாளைக்கு இருப்போமா... இருக்க மாட்டோமானு தெரியாது. நம்பிக்கை வெச்சி நல்லதைச் செய்வோம். அது நல்லதாவே முடியும்னு துணிஞ்சேன். அப்படியே நாலைந்து நண்பர்களுடன் பேசிவிட்டு சாப்பாடு, மருந்து உதவி தேவைப்படும் முதியவர்கள் கேளுங்கனு ஃபேஸ்புக்ல போட்டேன். இந்தப் பதிவு நல்லா ஷேர் ஆகி இருக்கு. மக்களிடையே ஆதரவு பெருகி இருக்கு.

அதைத் தொடர்ந்து, பலரும் இதுல இணைய ஆரம்பிச்சாங்க. சென்னை முழுவதும் 70 தன்னார்வலர்கள் தற்போது இணைந்திருக்காங்க. "covid curfewvolunteers" என்ற வாட்ஸ்அப் குரூப் தொடங்கிருக்கோம். கடந்த மூன்று நாளா நிற்க நேரமில்ல. வீட்டுக்குள்ள முடங்கி இருக்காம ஓடிக்கிட்டே இருந்தோம். ரொம்ப தூர டிராவல் பண்ணிப் போய் கொடுக்கல. அந்தந்தப் பகுதிகளில் தன்னார்வலர்கள் இருக்காங்க. அவங்கிட்ட உணவும், மருந்தும் கொடுத்துட்டா போதும்.

தன்னார்வலர் உணவு கொடுக்கும் போது
தன்னார்வலர் உணவு கொடுக்கும் போது

அதன் பிறகு, அவங்க அந்தந்தப் பகுதியில் யாருக்கு தேவைப்படுகிறதோ கொண்டு போய் கொடுத்திருவாங்க. அப்படித்தான் கொடுத்துகிட்டு இருக்கோம். ஆரம்பத்துல நம்மலால முடிஞ்ச ஒருத்தர், ரெண்டு பேருக்கு உதவி பண்ணலாம்னு நெனச்சி தொடங்கினேன். இப்போ, கிட்டத்தட்ட மதிய உணவு மட்டும், நூறு பேருக்கு போய் சேர்ந்திருக்கு. என்னோட இந்தப் பதிவைப் பார்த்த சில, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து உதவி செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. உணவு, மருந்து என ஆரம்பிச்ச சமூகப் பணி, தற்போது காய்கறி மற்றும் நோயாளிகள் சாப்பிடக் கூடிய உணவு தயாரிக்கும் வேலையும் சேர்ந்திருக்கு. நிறைய பேர் எங்களோட உதவியை எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. இதுல இன்று முதல் 144 தடை உத்தரவு போட்டிருக்காங்க இனி என்ன செய்யப் போறோம் என்பது தெரியவில்லை. எங்களுடைய பணி தொடருமா என்பதை இனிவரும் சூழல்தான் தீர்மானிக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு