Published:Updated:

``குழந்தை பிறந்த பிறகு பிரித்துவிட்டனர்"- காதல் மனைவியின் `கொரோனா வேதனை'யைப் பகிரும் கணவர்

கொரோனாவிலிருந்து மீண்ட பெண்ணுக்கு மலர் தூவி வரவேற்பு
கொரோனாவிலிருந்து மீண்ட பெண்ணுக்கு மலர் தூவி வரவேற்பு

சென்னை கண்ணகி நகரில் காதல் மனைவி கர்ப்பமடைந்ததும் மகிழ்ச்சியில் இருந்த கணவருக்கு அதிர்ச்சிதரும் செய்தியாக கொரோனா தகவல் இருந்தது.

சென்னை கண்ணகி நகரில் குடியிருப்பவர் தமிழ்அழகன். இவர், பாய்ஸ் கிளப்பில் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கலாவதி. கர்ப்பிணியான கலாவதியை டெலிவரிக்காக கடந்த 27-ம் தேதி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 28-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தமிழ்அழகனும் கலாவதியும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இருந்தனர்.

கைகளைத் தட்டும் போலீஸார் பொதுமக்கள்
கைகளைத் தட்டும் போலீஸார் பொதுமக்கள்
கண்ணகி நகரில் முதல் கொரோனா தொற்று என்பதால் எல்லோருக்கும் ஒருவித அச்சம் இருந்தது. மருத்துவமனையில் என் மனைவி, மகளை சந்திக்க முடியாததால் தினமும் வீடியோ காலில் பேசுவோம். ஆரம்பத்தில் என் மனைவி மனவேதனையில் இருந்தார்.
தமிழ்அழகன்

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கலாவதிக்கு டெலிவரி நடந்த திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக தாயும் சேயும் இறந்த தகவல் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து, அந்த மருத்துவமனையில் டெலிவரிக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கலாவதிக்கும் அவரின் குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மே 1-ம் தேதி கலாவதிக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதே நேரத்தில் கலாவதியின் மகளுக்கு கொரோனா இல்லை. இதையடுத்து தாயையும் சேயையும் தனிமைப்படுத்தினர். கலாவதிக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. 14 நாள்கள் திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலாவதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு தமிழ்அழகன் வீட்டுக்கு வந்தார்.

கண்ணகி நகர் காவல் நிலையம்
கண்ணகி நகர் காவல் நிலையம்
‘நம்பிக்கையே குணமடையச் செய்தது!’ -`கொரோனா' அனுபவங்களைப் பகிர்ந்த வாணியம்பாடி பெண் இன்ஸ்பெக்டர்

இந்தத் தகவலறிந்ததும் கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் மற்றும் போலீஸார் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்தனர். கண்ணகி நகருக்குள் அவர்கள் வந்ததும் போலீஸாரும் பொதுமக்களும் சேர்ந்து மலர்களைத் தூவினர். அதைப்பார்த்த தமிழ்அழகன், கலாவதி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். கலாவதிக்கும் அவரின் மகளுக்கும் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான போலீஸார் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வீரக்குமார் கூறுகையில், ``கண்ணகி நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கலாவதி. மருத்துவமனைக்குச் சென்ற இடத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்தோம். ஆனால், யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. கலாவதியைப் போல திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் டெலிவரிக்குச் சென்ற இன்னொரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னொரு பெண்ணும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கும் மலர் தூவி வரவேற்பு கொடுத்துள்ளோம்" என்றார்.

`அந்தப் பெண்ணை சந்திக்க முடியவில்லை?!' - ஊரடங்கால் விபரீத முடிவெடுத்த சென்னை இன்ஜினீயர்
வீட்டுக்குள் செல்லும் கலாவதி
வீட்டுக்குள் செல்லும் கலாவதி

கலாவதியின் கணவர் தமிழ்அழகனிடம் போனில் பேசினோம். ``நான், பி.ஏ படித்துவிட்டு உடற்கல்வி பயிற்சியையும் முடித்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக கண்ணகி நகர் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பாய்ஸ் கிளப்பில் பயிற்சியாளராக பணியாற்றிவருகிறேன். பாய்ஸ் கிளப்பிற்கு எதிரில் உள்ள வீட்டில் குடியிருந்தார் கலாவதி. அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது. பின்னர் ஜனவரி 27 2019-ல் திருமணம் செய்துகொண்டோம்.

கலாவதி, கர்ப்பமடைந்ததும் சந்தோஷமடைந்தேன். டெலிவரிக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சேர்த்தோம். 28-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையையும் என் மனைவியையும் பார்த்தேன். 29-ம் தேதி முதல் மாமியார்தான் மருத்துவமனையில் இருந்தார். திடீரென கலாவதிக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறியதும் நானும் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தோம்.

குழந்தையுடன் கலாவதி
குழந்தையுடன் கலாவதி

உடனடியாக எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. ஆனால், யாருக்கும் கொரோனா இல்லை எனத் தெரிந்தபிறகே நிம்மதியடைந்தோம். அதுவரை வீட்டிலேயே நான் தனிமைப்படுத்தப்பட்டேன். என் மனைவி, குழந்தைகளைப் பார்க்கக்கூட முடியவில்லை. அந்தச் சமயத்தில் கண்ணகி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் மற்றும் போலீஸார் எனக்கு ஆறுதலாக இருந்தனர்.

கண்ணகி நகரில் முதல் கொரோனா தொற்று என்பதால் எல்லோருக்கும் ஒருவித அச்சம் இருந்தது. மருத்துவமனையில் என் மனைவி, மகளை சந்திக்க முடியாததால் தினமும் வீடியோ காலில் பேசுவோம். ஆரம்பத்தில் என் மனைவி மனவேதனையில் இருந்தார். மகளுக்கு கொரோனா இல்லை என்பதால் பால் குடிக்க மட்டும் குழந்தையை அனுமதித்துள்ளனர். மற்ற நேரங்களில் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அதைக்கூறி என் மனைவி வேதனைப்படும்போதெல்லாம் அவருக்கு ஆறுதல் கூறுவேன்.

மலர்களைத் தூவி வரவேற்கும் பொதுமக்கள், போலீஸார்
மலர்களைத் தூவி வரவேற்கும் பொதுமக்கள், போலீஸார்

அரசு மருத்துவமனையில் என் மனைவியை நன்றாக கவனித்துக் கொண்டனர். காலையில் டிபன், முற்பகலில் கசாயம், மதியம் உணவு, பிற்பகலில் ஸ்நாக்ஸ், இரவில் உணவு, கசாயம் என சத்தான உணவுகளுடன் மருந்து மாத்திரைகளும் கொடுத்தனர். அதனால்தான் என் மனைவி குணமடைந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, தாயையும் சேயையும் ஒன்றாக இருக்க அனுமதித்தனர். என் மனைவி, மகளையும் ஒன்றாக பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களை வீட்டுக்கு அழைத்து வரும்போது திடீரென அனைவரும் மலர்களைத் தூவி கைகளைத் தட்டி எங்களை வரவேற்றனர். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் அன்பு வைத்த காவல்துறையினருக்கும் கண்ணகிநகர் மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகளுக்கு அழகான தமிழ்பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளோம்" என்றார் மகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு