Published:Updated:

நாப்கினுக்குள் விசா; ஐஸ் கட்டி சித்ரவதை!- சென்னைப் பெண்ணுக்குக் குவைத்தில் நேர்ந்த கொடுமை

லட்ச ரூபாய் சம்பளம் என்ற ஆசையில் குவைத்துக்குச் சென்ற சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண் சந்தித்த துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று எய்ம்ஸ் என்ற என்.ஜி.ஓவைச் சேர்ந்த கன்னியாபாபு தெரிவித்தார்.

சென்னை இளம்பெண்ணுடன் கன்னியாபாபு
சென்னை இளம்பெண்ணுடன் கன்னியாபாபு

சென்னை அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித் தொழிலாளி. இவரின் மனைவி கிருஷ்ணவேணி (34). இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். குடும்ப கஷ்டத்துக்காக பாடியில் உள்ள பிரபலமான கடைக்கு வேலைக்குச் சென்றார் கிருஷ்ணவேணி. அப்போதுதான் அங்கு ஒரு பெண், குவைத்துக்கு நீங்கள் வேலைக்குச் சென்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அங்கு செல்ல பணம் எதுவும் செலவழிக்க வேண்டாம் என்று கிருஷ்ணவேணியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணவேணி வீட்டில் ஆலோசித்துள்ளார். அதன்பிறகு அந்தப் பெண்ணிடம் குவைத் வேலைக்குச் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சென்னை இளம்பெண்
மீட்கப்பட்ட சென்னை இளம்பெண்

உடனடியாக கிருஷ்ணவேணியை திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது மாதம் 30,000 ரூபாய் சம்பளம், குவைத்தில் வீட்டு வேலை போன்ற விவரங்களை அந்த ஏஜென்ட் கூறியுள்ளார். இதையடுத்து குவைத்துக்குச் செல்ல கிருஷ்ணவேணி தயாராகினார். குவைத்துக்குச் சென்ற கிருஷ்ணவேணி, கடந்த இரண்டரை மாதங்கள் நரக வேதனை அனுபவித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய எய்ம்ஸ் என்ற என்ஜிஓவின் துணை நிறுவனர் கன்னியாபாபு,``குவைத்தில் கிருஷ்ணவேணி, அனுபவிக்கும் சித்ரவதைகள் குறித்த தகவல் எங்களுக்குத் தெரிந்ததும் அவரை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். பிறகு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி மூலம் இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கொண்டு சென்றோம். அவர்கள் விசாரித்தபோது கிருஷ்ணவேணி என்ற பெண் குவைத்தில் வேலை பார்க்கவில்லை என்று அங்குள்ள தூதரகம் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கிருஷ்ணவேணியைக் குவைத்துக்கு வேலைக்கு அனுப்பிய ஏஜென்ட் குறித்து திருவண்ணாமலை காவல்துறை எஸ்.பி. சிபிசக்கரவர்த்தியிடம் புகார் தெரிவித்தோம். இதையடுத்து அந்த ஏஜென்ட்டைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் கிருஷ்ணவேணியைத் தன்னுடைய சொந்தச் செலவில் ஊருக்கு அழைத்து வந்துவிடுவதாகக் கூறினார்.

மீட்கப்பட்ட சென்னை இளம்பெண்
மீட்கப்பட்ட சென்னை இளம்பெண்

இதையடுத்து புகார் கொடுத்த 17 நாள்களில் கிருஷ்ணவேணியைச் சென்னைக்கு அழைத்துவந்துவிட்டோம். கிருஷ்ணவேணியிடம் விசாரித்தபோது வீட்டு வேலை செய்யும் இடத்தில் மூன்று நேரமும் காபியும் ரொட்டியும் மட்டுமே அவருக்கு சாப்பிடக் கொடுத்துள்ளனர். மேலும், வீட்டின் உரிமையாளரும் கிருஷ்ணவேணியைத் தாக்கியதில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தன்னை ஊருக்கு அனுப்பிவிடும்படி அங்குள்ள ஏஜென்ட்டிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த ஏஜென்ட், கிருஷ்ணவேணியை அடித்துள்ளார். இதில் அவரின் 2 பற்கள் உடைந்துள்ளன. இதையடுத்து ஐஸ் கட்டியில் கிருஷ்ணவேணியை நிற்க வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை கிருஷ்ணவேணி போன் மூலம் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கிருஷ்ணவேணியை மீட்டுள்ளோம். கிருஷ்ணவேணியைப் போல இன்னும் சில தமிழகப் பெண்கள் அங்கு சித்ரவதையை அனுபவித்துவருகின்றனர். அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என்றார்.

இதுகுறித்து கிருஷ்ணவேணியிடம் கேட்டதற்கு, ``என் குடும்பம் கடனில் சிக்கியதால் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல சம்மதித்தேன். அப்போது என்னைச் சந்தித்த ஏஜென்ட் செந்தமிழன் என்பவர் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்தார். குவைத்துக்குச் செல்வதற்கு முன் ஏஜென்ட் என்னிடம் இரண்டு விசாக்களைக் கொடுத்தார். அதில் ஒரு விசாவை மட்டுமே விமான நிலையங்களில் காண்பிக்க வேண்டும். இன்னொரு விசாவை நாப்கினுக்குள் வைத்து குவைத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். அதன்படி நானும் நாப்கினுக்குள் வைத்து விசாவை கொண்டு சென்று குவைத்தில் உள்ள ஏஜென்ட்டிடம் கொடுத்தேன். அங்கு நான் சந்தித்தது அனைத்தும் நரக வேதனை. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

மீட்கப்பட்ட சென்னை இளம்பெண்
மீட்கப்பட்ட சென்னை இளம்பெண்

நல்ல வேளை நான் உயிரோடு ஊர் திரும்பிவிட்டேன். இன்னும் என்னைப்போல வீட்டு வேலைக்குச் சென்ற பெண்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர்" என்றார் கண்ணீருடன். ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணவேணி, தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளைக் கட்டித்தழுவி கதறி அழுதார்.

தமிழகத்திலிருந்து அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்படும் பெண்கள் அங்கு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்துவருகின்றனர். கிருஷ்ணவேணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உதவியுள்ளார். அவரும் என்.ஜி.ஓ.வைச் சேர்ந்த கன்னியாபாபுவிடம் போனில் பேசியுள்ளார். அப்போது அவர், ``தனக்கு மாதவிடாய் பிரச்னை உள்ளது. அதைக் கூறியும் என்னை ஊருக்கு அனுப்பாமல் ஏஜென்ட் சித்ரவதை செய்கிறார். என்னைவிட கிருஷ்ணவேணியின் உடல் நலம் மோசமாக உள்ளது. முதலில் அவரை மீட்டெடுங்கள்'' என்று கூறியுள்ளார். தற்போது அந்தப் பெண்ணின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பாகத்தான் இந்தப் பெண்கள் அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்று கன்னியாபாபு குற்றம்சாட்டியுள்ளார்.