Published:Updated:

மக்கள் ஊரடங்கு... எப்படி இருந்தது சென்னை... விகடன் ரவுண்ட் அப்!

கொரோனா விழிப்புணர்வு இல்லாத வட மாநில இளைஞர்கள்
கொரோனா விழிப்புணர்வு இல்லாத வட மாநில இளைஞர்கள்

மக்கள் ஊரடங்கின்போது சென்னை எவ்வாறு இருந்தது என்பதை அறிய சென்னை முழுவதையும் சுற்றி வந்தோம். அதன் தொகுப்பே இந்தக் கட்டுரை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆடி முடித்து கழற்றப்பட்ட சலங்கையாய், தேடல் முடிந்து கூடடைந்த பறவையாய், தோல்வியுற்ற ஆருயிர் காதலாய், சத்தமின்றி தணிந்து இருந்தது சென்னை நேற்று... சாலைகளில் கூட்டமாய் இருந்த காக்கைகளுக்கு மட்டுமே ஹாரன் அடித்துக் கொண்டு, மக்கள் ஊரடங்கு எவ்வாறு இருந்தது என்பதை அறிய சென்னையைச் சுற்றி நகர்வலம் சென்றோம்... சென்னை என்பது வெறும் ஊரின் பெயர் அல்ல.. இங்கு வசிக்கும் கோடிக்கணக்கானோரின் இருப்பு, சென்னைவாசி என மார்தட்டிக்கொள்ளும் ஓர் உணர்வு... வாழ்வு தேடி தஞ்சமடைந்த ஆயிரக்கணக்கானோரின் வேடந்தாங்கல்...

சென்னையின் காலியான சாலைகளில் நாங்கள் பெசன்ட் நகர் தொடங்கி காசிமேடு வரை சுற்றி வந்தோம். பல லட்சம் பேர் வீடுகளில் முடங்கியிருக்க... வெளியிலே தென்பட்ட சிலருடன் நடந்த சுவாரஸ்யமான உரையாடல்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

செல்போனில் படம் பார்க்கும் குடும்பம்
செல்போனில் படம் பார்க்கும் குடும்பம்

சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகேயுள்ள பாலத்தின் அடியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். ஊரடங்கினால் குடும்பத்தினர் அருகருகே அமர்ந்து ஒரு பாத்திரத்துக்குள் செல்போனை வைத்து சினிமா பார்த்துக்கொண்டிருந்தனர். கொரோனாவைப் பற்றி அறிந்திருந்தவர்கள் தனித்திருத்தல்' என்பது பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. `அருகருகே அமர்ந்து இருக்காதீர்கள் என்று அறிவுறுத்தியபோது, `எங்களையெல்லாம் கொரோனா ஒன்றும் செய்யாது' என்ற அலட்சியப் பதில் கிடைத்தது. இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலை தொடங்கினால் நிலை என்னாவது என்கிற அச்சம் மனதுக்குள் எட்டிப் பார்த்தது.

சாலையோரத்தில் உறங்கிய ரமேஷ்
சாலையோரத்தில் உறங்கிய ரமேஷ்

ஆடம்ஸ் சாலைப் பகுதியில் இருந்த சிறிய மர நிழலில் மாற்றுத்திறனாளி இளைஞர் சோர்வாகப் படுத்திருந்தார். அவரிடத்தில் பேச்சு கொடுத்தபோது, `என் பெயர் ரமேஷ். பெங்களூரைச் சேர்ந்தவன். எனக்கு நீண்ட நாள்களாக மெரினா பீச்சை பார்க்க வேண்டுமென்று ஆசை. அதற்காக பெங்களூரிலிருந்து சென்னைக்கு என்னுடைய மோட்டார் சைக்கிளிலேயே வந்தேன். ஆனால், மெரினா பீச்சை மூடி விட்டார்கள். சாப்பாடும் எங்கேயும் கிடைக்கவில்லை’ என்று ஏமாற்றத்துடனும் கொரோனா பற்றிய பயத்துடனும் பேசினார். அவரை அருகிலிருந்த அம்மா உணவகம் அருகே கொண்டு விட்டுவிட்டு, `இங்கே 12 மணிக்கு உங்களுக்கு சாப்பாடு கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு போங்கள்' என்று கூறி விடை பெற்றோம்.

பின்னர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குள் சென்றபோது, மிகவும் அமைதியாகக் காணப்பட்டது. சாதாரண பணியாளர்கள் முதல் டாக்டர்கள் வரை மாஸ்க் அணிந்தே பணியாற்றினர். மருத்துவமனை வளாகத்திலிருந்த `இயற்கை' விநாயகர் கோயில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்தது. எனினும், பக்தர்களுக்காக கோயிலின் முன்புறத்தில் இரு கிண்ணங்களில் விபூதி வைக்கப்பட்டிருந்தது.

வெறிச்சோடிய பாடிகாட் முனீஸ்வரர் ஆலயம்
வெறிச்சோடிய பாடிகாட் முனீஸ்வரர் ஆலயம்

ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் பாடிகாட் முனீஸ்வரர் கோயில் மக்கள் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது. அருகிலிருந்த மாநகர போக்குவரத்துக்கழகத்தின் மத்திய பணிமனையில் பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியே, சென்ட்ரல் ரயில் நிலையம் பக்கம் சென்றோம். வட மாநில இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கே குவிந்திருந்தனர். ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாததாலும் வேறு வழியில்லாமல் அங்கே அந்த இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். கொரோனா தற்காப்பு குறித்த எந்த விழிப்புணர்வும் அவர்களிடத்தில் இல்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள போலீஸாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. முன்னறிவிப்பின்றி ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் செய்வதறியாது சிக்கித் தவித்தனர்.

கொரோனா விழிப்புணர்வு இல்லாத வட மாநில இளைஞர்கள்
கொரோனா விழிப்புணர்வு இல்லாத வட மாநில இளைஞர்கள்

தொடர்ந்து, அம்மா உணவகத்தில் இருந்து அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் 31-ம் தேதி வரை ரயில்கள் ரத்து என்ற அறிவிப்பு வெளியானது. இதனால், சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதுமாக மூடப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த வட மாநில இளைஞர்கள் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏற்றி வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

`அசாதாரண சூழல்; ஆன்லைன் கமென்ட்ரி!’ -ஜெர்மனியில் இருந்து அனுபவம் பகிரும் செஸ் மாஸ்டர் ஆனந்த் #Corona

எப்போதும் பிசியாகக் காணப்படும் வால்டாக்ஸ் சாலையில் மருத்துக்குக் கூட போக்குவரத்து இல்லை. சாலையோரத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் ரோட்டில் `டைவ்' அடித்து விளையாடிக் கொண்டிருந்தார். காலியான சாலை அவருக்கு ஜிம்னாஸ்டிக் களமாக மாறியிருந்தது.

சாலையில் டைவ் அடித்து  விளையாடும் சிறுமி
சாலையில் டைவ் அடித்து விளையாடும் சிறுமி

காசிமேடு செல்லும் சாலையில், ரவி என்ற ரிக்ஷா ஓட்டுநர் தன் ரிக்ஷாவிலேயே உறங்கிக் கொண்டிருந்தார். `ஐயா... உங்களுக்கு வீடு இல்லையா... வீட்டுக்குப் போகலையா' என்று கேட்டோம். அவரோ... `எனக்கு வீடு எல்லாம் கிடையாது. சவாரி இல்லாத நேரத்தில் ரிக்ஷாவில்தான் உறங்குவேன். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொள்வேன்' என்று பதிலளித்தார். மக்கள் ஊரடங்கு பற்றி கேட்டபோது... `ஏதோ ஒரு நோய் வருதாமே அதனாலதான் இன்னைக்கு பந்த்னு சொன்னாங்க' என்றார் வெள்ளந்தியாக. அவரிடத்தில் கொரோனா பற்றி எடுத்துக் கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தோம்.

வட சென்னை முற்றிலும் முடங்கியே இருந்தது. காசிமேடு துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கியிருந்தனர். மதிய வேளை என்பதால், சமையல் வேலை மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. எல்லோரும் கொரோனா பற்றி அறிந்திருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் 3 அடி இடைவெளி இருக்க வேண்டுமென்பது குறித்து தெரிந்திருக்கவில்லை. படகின் உள்ளே கேபினில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

படகினுள் மீனவர்கள்
படகினுள் மீனவர்கள்
இன்ஜினைப் பூட்டும் டிரைவர்
இன்ஜினைப் பூட்டும் டிரைவர்

பிறகு, பீச் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த ரயில் பைலட் ஒருவர் புறநகர் ரயில் ஒன்றின் இன்ஜின் கதவை சாவி வைத்து மூடிக்கொண்டிருந்தார். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலின் இன்ஜின் கதவை முறையாக மூடாத காரணத்தினால், அந்த ரயிலை இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றார். பின்னர், அந்த ரயில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் நினைவுக்கு வந்து சென்றது.

சென்னை பாரிமுனையில் பொம்மை யானை ஒன்றுக்கு மாஸ்க் கட்டி தனியார் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால், முறையான அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை. `நல்ல விஷயமாக இருந்தாலும் , முறையான அனுமதி பெற்ற பின்னரே இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டும் ' என்று போலீஸார் அவரை வலியுறுத்தி அனுப்பினர்.

யானை பொம்மைக்கு மாஸ்க்
யானை பொம்மைக்கு மாஸ்க்

பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றோம், கடற்கரைக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நின்றனர். பத்திரிகையாளர் அடையாள அட்டையைக் காண்பித்த பிறகே கடற்கரைக்குள் அனுமதிக்கப்பட்டோம். கடற்கரையில் ஆக்ரோஷத்துடன் சுற்றிவந்த நாய்களுக்கு போலீஸ் பிஸ்கட் அளித்திருந்தனர். பணியிலிருந்த காவலர்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் டீ கொடுத்திருந்தனர். எந்தக் கடைகளும் திறந்திருக்காததால் தண்ணீர் தொடங்கி நாள் முழுவதுக்கும் தேவையான உணவுகளைத் தயார் செய்துவைத்திருந்தனர் காவலர்கள். தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கிண்டி பேருந்து நிலையமும் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஊரடங்கு வருவதற்கு முன்பிருந்தே தங்களுடைய வருமானம் குறைந்துவிட்டதாக ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர். `மக்கள் நடமாட்டத்தை நம்பிதான் எங்களுடைய வருமானம் இருக்கு, அதுவே முடங்கிட்டா எங்க நிலைமை என்னனு தெரியலை’ என்று தங்களுடைய நிலையை வெளிப்படுத்தினர். வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்க முடியாது என இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் ஸ்டாண்டுக்கு வந்து உரையாடிக்கொண்டிருந்தனர். கொரோனாவைத் தாண்டி அரசியல் வரை சென்றது அவர்களுடைய உரையாடல்.

கிண்டி பேருந்து நிலையம் அருகே ப்ளாட்பாரத்திலே தங்கியிருக்கும் நபருக்கு முந்தைய தினம் இரவு தன்னார்வலர்கள் உணவுகளை வழங்கிச் சென்றிருந்தனர்.

கிளி ஜோசியர்
கிளி ஜோசியர்

கிண்டியிலிருந்து கோயம்பேடு நோக்கிப் புறப்பட்டோம். வழியில் சிறுவர்கள் காலியான சாலைகளில் விளையாடிக் கொண்டிருந்தனர். கொரோனா பற்றிய அச்சம் அவர்களைக் கட்டி வைக்கவில்லை.

கே.கே நகர் பேருந்து நிறுத்தத்தில் கிளி ஜோசியர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தோம். `வைரஸ் என்றால் என்ன’ என்கிற அறிவியல் கேள்வியை எங்களிடம் கேட்டுவிட்டு பேச்சை ஆரம்பித்தார். ஊரே முடங்கிப்போயிருக்கு இன்னைக்கு ஏன் கடை போட்டிருக்கீங்க என்று கேட்டோம். ஊரே அடங்கிப் போயிருந்த சமயத்திலும் அவரிடம் 4 பேர் ஜோசியம் பார்த்துவிட்டு சென்றிருக்கின்றனர். அதே பகுதியில் மற்றுமொரு கூலித் தொழிலாளரிடம் பேச்சு கொடுத்தோம். போட்டோ எடுக்க வேண்டாம் என மறுத்துவிட்டு பேசத் தொடங்கினார். கொரோனா பற்றிய அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். ``செல்போன் எதுவும் என்னிடம் இல்லை, பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கிற மக்கள் பேசுவதைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்'' என்றார். செவி வழிச் செய்தியில் நன்மையானவைகளும் பரவவே செய்கின்றன. ஆதரவற்றவர்கள், சாலைகளில் வசிப்பவர்கள் மாநகராட்சியில் 51 காப்பகங்களில் அன்றைய தினம் தங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் செய்தி அவரை வந்து சேரவில்லை.

கே.கே நகர் பகுதியின் பரபரப்பான எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டுக்குச் சென்றோம். சிறுவர்கள் இருவர் அமர்ந்து ஆண்ட்ராய்டு மொபைலில் விளையாடிக் கொண்டிருந்தனர். கொரோனா பற்றிய விழிப்புணர்வு பள்ளியில் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். ஐந்து மணிக்குக் கை தட்டுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதே மார்க்கெட்டில் முதியவர் ஒருவரும் ஆண்ட்ராய்டு போன் சகிதமாக அமர்ந்து யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார். `கொரோனு ஒரு நோய் பரவுறதா கேள்விப்பட்டேன். கடையை இன்னைக்கு திறக்க வேண்டாம்னு கவர்ன்மெண்ட்ல சொன்னாங்க. நாளைக்கு வழக்கம்போல திறந்திடுவோம். வானத்துல இருந்து ஏதோ மருந்து தூவுறதா சொன்னாங்க’ என்றார். உண்மைநிலையை அவரிடம் விளக்கிவிட்டு நகர்ந்தோம்.

எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் முதியவர்
எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் முதியவர்

கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றோம். பேருந்துகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டிருந்ததால் காலியாக காட்சியளித்தது இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று. மாநகராட்சி காப்பகங்களைப் பார்வையிட கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு காப்பகங்கள் இருந்தன. நோயாளிகளின் உறவினர்கள் தங்கிக்கொள்ளும் இடமாக இருந்தவை, ஆதரவற்றவர்களின் தற்காலிக இருப்பிடமாக மாறின. ஆண்கள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்டோரும், பெண்கள் காப்பகத்தில் 6 பேரும் தங்கியிருந்தனர். தகவல் கிடைத்து வந்தவர்கள் சில பேர், அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டவர்கள் சில பேர்.

பின்னர் அண்ணா சாலை வந்தடைந்தோம். ஊடகத்தினரை மட்டுமே சாலைகளில் பெரும்பாலும் சந்திக்க நேர்ந்தாலும் இளைஞர்களும் தங்களுடைய செல்போன்களில் வீடியோக்கள் எடுத்தவாறே வாகனங்களில் சென்றனர். கடற்கரை சாலை வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காட்சியளித்து. மெரினா கடற்கரைக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அம்மா உணவகத்தில் கூட்டம்
அம்மா உணவகத்தில் கூட்டம்

இறுதியாக மைலாப்பூர் வந்தடைந்தோம். ஐந்து மணிக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களைப் பாராட்டி கைதட்ட மக்கள் தயாராக இருந்தனர். ஐந்து நிமிடத்துக்கும் மேலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்து மணிக்குப் பிறகு வெறிச்சோடியிருந்த சாலைகளில் மக்கள் நடமாட்டம் தென்பட ஆரம்பித்தன. இளைஞர்கள் வாகனங்களில் வலம்வரத் தொடங்கினர். ஊரடங்கு மறுநாள் காலை வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும் மக்களால் வீடுகளில் நீண்ட நேரம் முடங்கியிருக்க முடியவில்லை.

சென்னையின் பெரும்பாலான இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தன. ஆதரவற்ற பலருக்கும் அம்மா உணவகத்திலிருந்து உணவளிக்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு