Published:Updated:

ஒரு மணி நேரத்தில் பெண்ணுக்கு வீடு வழங்கிய ஆட்சியர்; கடிதம் மூலம் பாராட்டிய தலைமை செயலாளர்!

ஒரு மணி நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ரூ. 8.35 லட்சம் மதிப்பிலான வீடு தரைதளத்தில் ஒதுக்கப்பட்டது. ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், இந்த நிகழ்வு பற்றி அறிந்த தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, பிரபுசங்கரை கடிதம் மூலம் பாராட்டியுள்ளார்.

கரூரில் மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து வீடு கேட்ட பெண்ணுக்கு, அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து அந்தப் பெண்ணை நெகிழ வைத்தார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர். இந்நிலையில், நிர்கதியாக நின்ற பெண்ணுக்கு உடனடியாக உதவி கிடைக்க வழிவகை செய்த அவரை, தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் மூலம் பாராட்டியிருக்கிறார்.

ஆணையை வழங்கும் ஆட்சியர்
ஆணையை வழங்கும் ஆட்சியர்
`இந்த உதவி போதும்; என் மகனை கரைசேர்த்திடுவேன்!' - பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் வீடு வழங்கிய ஆட்சியர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், கடந்த 11-ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற பெண், தனது மாற்றுத்திறனாளி மகன் ரவிச்சந்திரனுடன் வந்து, ஆட்சியரிடம் நிர்கதியான தனது நிலையைக் குறிப்பிட்டு கோரிக்கை மனு அளித்தார். அதில், தனது மகன் கை, கால் இயங்காத, வாய் பேச இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி என்றும், தான் கணவனால் கைவிடப்பட்டவர் என்பதால் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு, குடியிருக்க சொந்தமாக வீடு இல்லாததால், தற்போது தனது உறவினர் வீட்டில் வசித்து வருவதாகவும், மாற்றுத்திறனாளி மகன் இருப்பதால் வாடகைக்குக் கூடயாரும் வீடு தர மறுக்கின்றனர் என்றும் கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார்.

சந்திராவின் ஆதரவற்றை நிலையை உணர்ந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்துக்கு அதைக் கொண்டு சென்றார். அவரின் உத்தரவின்படி அந்தப் பெண்ணுக்கு கரூர் காந்தி கிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கிக் கொடுக்க, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, அடுத்த ஒரு மணி நேரத்தில் சந்திராவுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படுவதற்கான ஆணை தயாரானது. சந்திராவின் மகன் மாற்றுத்திறனாளி என்பதால், அவரை அழைத்துச் செல்ல வசதியாக, தரைத்தளத்திலேயே வீடு வழங்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதோடு, சந்திராவின் மகனை வீல்சேரில் அழைத்துச் செல்வதற்கு ஏதுவாக, சாய்தள வசதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நடப்பவை எல்லாம் கனவா, நனவா என்று இன்ப அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த சந்திராவின் கைகளில், வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார். இதற்கிடையில், அந்தக் குடியிருப்பிற்குப் பயனாளி செலுத்த வேண்டிய தொகையான ரூ. 1.88 லட்சத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து செலுத்துவதாகவும் தெரிவித்தார். அதனடிப்படையில், 1 மணி நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ரூ. 8.35 லட்சம் மதிப்பிலான வீடு தரைதளத்தில் ஒதுக்கப்பட்டது. ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், இந்த நிகழ்வு பற்றி அறிந்த தமிழகத் தலைமைச் செயலாளர் இறையன்பு, பிரபுசங்கரை கடிதம் மூலம் பாராட்டியுள்ளார்.

 இறையன்பு வழங்கிய பாராட்டு கடிதம்
இறையன்பு வழங்கிய பாராட்டு கடிதம்
முதல் நாள் மனு, 24 மணி நேரத்தில் வீடு; 3 பிள்ளைகளோடு தவித்த தாய்க்கு உதவிய அமைச்சர்!

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், அன்பார்ந்த (மருத்துவர்) பிரபுசங்கர், கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு ஒன்றினை ஒதுக்கீடு செய்து, அப்பெண்ணிற்கும், அவரின் மாற்றுத்திறனாளி மகனுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்களது நிர்வாகப் பணியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தங்களின் பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ள அவர், மேலும் தனது கைப்பட, `நல்வாழ்த்துகள்' என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு