Published:Updated:

தேனி:"தவறாகக் கருதிவிட்டார்"- பிறந்த குழந்தைக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியது குறித்து டீன் விளக்கம்!

தேனி அரசு மருத்துவமனை
தேனி அரசு மருத்துவமனை

தேனி அரசு மருத்துவமனையில் உயிருடன் பிறந்த குழந்தையை இறந்ததாகக் கூறி மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்த நிலையில், மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு சென்றபோது, குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டு உயிருடன் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியமேரி. இவரது கணவர் பிலவேந்திரராஜா. இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த ஆரோக்கிய மேரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது. உடனடியாக அவரை உறவினர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் ஆரோக்கியமேரிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. 700 கிராம் எடை மட்டுமே இருந்த அந்த குழந்தை, சுவாசப் பிரச்னையால் பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து விட்டதாக செவிலியர்கள் ஆரோக்கியமேரியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளனர்.

பாலாஜிநாதன் - டீன்
பாலாஜிநாதன் - டீன்

மருத்துவமனை நடைமுறைகளுக்குப் பின்னர், இறப்பு தொடர்பான ஆவணங்களுடன் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு பிலவேந்திரராஜாவிடம் மருத்துவமனை ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், தங்களது கிறிஸ்தவ முறைப்படி குழந்தையை அடக்கம் செய்ய, கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு, ஏற்கனவே குழி தோண்டப்பட்டு தயார் நிலையில் இருந்ததால், குழந்தையை குழிக்குள் புதைப்பதற்காக தூக்கியபோது, குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது.

குழந்தையைப் பரிசோதித்து பார்த்தபோது குழந்தை, உயிருடன் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாகக் குழந்தையை, மீண்டும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் பாலாஜிநாதனிடம் கேட்டோம், “குழந்தையின் தாய்க்கு நஞ்சுக்கொடி சுற்றி இருந்ததால் அதை அகற்றுவதிலேயே மருத்துவர்கள், செவிலியர்கள் கவனத்தை செலுத்தி வந்தனர். குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், குழந்தை மூச்சுவிடாமல் இருந்துள்ளது.

தேனி அரசு மருத்துமனை
தேனி அரசு மருத்துமனை

அதனால், குழந்தையை சரியாக பரிசோதிக்காமல் மருத்துவர் இறந்துவிட்டதாகத் தவறாகக் கருதி விட்டார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். உயிருடன் பிறந்த குழந்தையை, இறந்த விட்டது என அறிவித்தது மட்டுமில்லாமல், இறப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து குழந்தையின் பெற்றோரிடம் உயிரிழந்த சடலம் எனக்கூறி ஒப்படைத்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு